Sunday, February 21, 2016

தலை எழுத்து

முன்னொரு காலத்தில்...
யவன தேசத்தை ஆண்டு வந்தான் ஒரு மாமன்னன். அவனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை.மன்னனும்,மகாராணியாரும் வேண்டாத தெய்வமில்லை, செய்யாத அநுஷ்டானங்கள் இல்லை, கடை பிடிக்காத விரதங்கள் இல்லை....எதுவும் பலன் தரவில்லை.

பக்கத்து ஊரில், சூபித் துறவி ஒருவர் இருப்பதையும் அவரை அணுகினால் மன்னனின் துயரம் நீங்க வழிபிறக்கலாம் என்றும் அறிவுரை தந்தான் முக்கிய மந்திரி.
மகாராணியாரின் தூண்டுதல் பேரில், சூபி துறவியை சந்திக்க பயணம் மேற்கொண்டான் மன்னன்.

தியானத்தில் ஆழ்ந்திருந்த சூபியை அணுகி தம் குறை நீங்க உதவும்படி வேண்டினர் மன்னனும், மகாராணியாரும். அவர்கள் நிலையை உணர்ந்த துறவி சொன்னார்.

'உங்கள் குறை நீங்க நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்...ஆனால் நீங்கள் செய்யும் பிரார்த்தனை தான் உங்கள் குறை நீங்க பயன் தரும்.'
பிரார்த்தனை செய்யும் வழி முறைகளை விளக்கி அறிவுரை கூறி மன்னனை வழி அனுப்பி வைத்தார் சூபித்துறவி.

சில மாதங்கள் உருண்டன..
மகாராணியார் இரண்டு அழகான ஆண் குழந்தைகளுக்கு தாய் ஆனார்.மன்னன் மகிழ்ந்தான், மக்கள் மகிழ்ந்தனர். நாடு விழாக்கோலம் பூண்டது.

சில வருடங்கள் உருண்டன...
மன்னனும் மகாராணியாரும் சூபித் துறவியை மீண்டும் தேடி வந்தனர்.தம்பதியர் மிகவும் சோகத்தில் இருப்பதை உணர்ந்த துறவி காரணத்தை வினவினார்.

"ஒரு கனவு எங்கள் உறக்கத்தை, மனதை கலங்க வைக்கிறது. கனவு ஒருமுறை என்றால் மறந்து விடலாம். ஆனால் ஒரே கனவே மீண்டும் மீண்டும் வந்து எங்கள் நிம்மதியை குலைக்கிறது. இருவருக்கும் ஒரே மாதிரி கனவுகளே வந்து பயமுறுத்துகிறது. பைத்தியம் பிடித்து விடும்போல் தெரிகிறது. நீங்கள் தான் ஒரு வழி சொல்லி எங்களை காப்பாற்ற வேண்டும்."

மன்னன் தான் கண்ட கனவை விவரிக்க துவங்கினான்.

'வேற்று நாட்டு மன்னன் பெரும்படையுடன் வந்து என்னை வெல்லக் கண்டேன்.. நாட்டை இழந்து அனாதையாகக் கணடேன். மூத்த மகன், காட்டிற்குள் ஓடி ஒளியக் கண்டேன்.
இளைய மகன், எதிரி மன்னனின் குதிரை லாயத்தில் பணி புரியக் கண்டேன்.
நாடாளும் மாமன்னன் காணும் கனவாக இது என் மனதுக்கு படவில்லை. நான் மகுடங்க ளை இழப்பது பற்றி கவலை கொள்ளவில்லை... நான் வரமிருந்து பெற்று வளர்த்த குழந்தைகள் நிலை என் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த துயரமான கனவுகளின் பிடியில் இருந்து மீள வழி தெரியவில்லை.'

விம்மியெழும் அழுகைக் குரலில், தான் காணும் கனவின் ரகசியங்களை சொல்லி முடித்தான் மன்னன். மகாராணியாரும் இதை ஆமோதித்தார்.

கனவின் ரகசியங்களை உணர்ந்து கொண்ட சூபித் துறவி பேசத் தொடங்கினார்...

"குழந்தை பாக்கியம் உன்தலை எழுத்தில் இல்லை. அதாவது இறைவன் அதை உனக்கு வழங்கவில்லை. அவன் விரும்பாததை - நீ விரும்பியதால் வந்த துயர் இது. உன் கனவு விரைவில் பலித்து விடும். விரைவில் உன் நாடு எதிரியின் கைகளில் விழுந்து விடும்.
ஆனால் இந்த துயரங்களில் இருந்து ஒரு நாள் நீ மீள்வாய். அதுவரை காத்திரு, இறைவனை பணிந்திரு.
உன் மூத்த மகன் காடுகளில் பறவைகள் சரணாலயத்தில் தஞ்சம் புகுவான். இரண்டாவது மகன் குதிரை லாயத்தில் குதிரைகளை குளிப்பாட்டி, உணவுவழங்கும் பணிகளை மேற்கொள்வான். இது அவர்களின் தலை எழுத்து. தலை எழுத்தை மாற்ற இயலாது. முயன்றால் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம்.அந்த நிலை வரும்போது என் உதவியை நிச்சயம் நீ எதிர்பார்க்கலாம்."

துறவியின் பேச்சு மனதுக்கு ஆறுதல் அளித்ததால் அங்கிருந்து விடை பெற்றனர் மன்னர் தம்பதியினர்.

சில மாதங்கள் உருண்டன...

மன்னனின் கனவுகள் அப்படியே பலித்தன. நாட்டை இழந்தான்; மக்களை இழந்தான்; பெற்ற பிள்ளைகளை இழந்தான்; அனைத்தையும் இழந்தான்.

ஞானக் கண்ணால் அனைத்தையும் உணர்ந்து கொண்ட சூபித்துறவி தன் பணியை துவங்கினார். காடுகளில், மேடுகளில் அலைந்து பறவைகள் சரணாலயத்தை கண்டு பிடித்த அவர், இளவரசனை கண்டு கொண்டார்.அவன் நிலை அவருக்கு புரிந்தது.அவர் சொன்னார்...

"தம்பி...நன்றாக கேட்டுக் கொள். இது தான் நீ வாழப்போகும் உலகம், என்றாலும் உன் நிலையை, நீ முயன்றால் மாற்றி எழுத முடியும். பறவைகளின் மொழியை கற்றுக் கொள்ள முயற்ச்சி செய். அதில் நீ நிபுணத்துவம் பெற்றால் உன் நிலை உயரும்."

அறிவுரை வழங்கி விட்டு அங்கிருந்து அகன்ற துறவி, இரண்டாவது மகனை தேடி குதிரை லாயங்கள் பக்கம் அலைந்தார். இளவரசனின் நிலை கண்டு மனம் பதைத்த துறவி சொன்னார்...

"தம்பி... பயம் கொள்ளாதே. நீ சற்று முயன்றால் 'குதிரைகள் ஸ்பெசலிஸ்ட்' ஆகிவிட முடியும்.
எந்த குதிரையையும், உன் கண் பார்வையில் பணிய வைக்க முடியும். இந்த கலையைக் கற்று நிபுணத்துவம் பெற்றால் பேரரசர்கள் எல்லாம் உன் உதவியை நாடி நிற்பர். உன் புகழ் உலகெலாம் பரவும்."

வருடங்கள் உருண்டோடின...
பறவைகள் மூலம் தூது அனுப்பும் கலையில் வல்லவனான மூத்த இளவரசனின் உதவி தேடி உலகின் பேரரசர்களெல்லாம் காத்து கிடந்தனர். அவன் ஒரு இளவரசன் என்பதை தெரிந்து கொண்ட அவர்கள் அவனை தங்கள் மருமகன் ஆக்கிக் கொள்ள போட்டியிட்டனர்.
இரண்டாவது இளவரசன், குதிரைகள் போர் பயிற்சியில் வல்லவனாக திகழ்ந்தான். இவன் கைகாட்டும் குதிரைகளையே பேரரசர்கள் கூட வாங்க முற்பட்டனர். கண் பார்வை யிலேயே, எந்த முரட்டு குதிரையையும் அடக்கியாளும் திறன் பெற்றவனாக இவன் விளங்கினான். உலகின் அரசர்கள் எல்லாம் இவனை தங்கள் நண்பன் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொண்டனர்.இவன் வீர, பராக்கிரமங்களை உணர்ந்த இவன் தந்தையின் பரம எதிரி, எந்த எதிர்ப்பும் காட்டாமல் இவனிடம் சரணடைந்தான்.

தியானத்தில் ஆழ்ந்த சூபியின் வீட்டு கதவுகள் மீண்டும் தட்டப்பட்டன. அவருக்கு நன்றி செலுத்துவதற்காக, மன்னர் குடும்பமே....அவர் வீட்டு வாசலில் காத்து கிடந்தது.
துறவியோ கண் மூடியபடி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்.

Vavar F Habibullah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails