Wednesday, February 10, 2016

முஸ்லீம்கள் - நதிமூலம்

 by ஜோதிஜி
இராமநாதபுர மாவட்டத்தை பேசும் போது நாம் மற்றொரு விசயத்தையும் இப்போது பேசியாக வேண்டும்.  அது தான் இந்த மாவட்டத்தில் வாழ்ந்த இஸலாமியர்கள்.

பல்லவர்கள் தொடங்கி கடைசியாக பாண்டியர்கள் வரைக்கும் கால்பந்து போல இந்த மாவட்டம் பலரின் கால் கை பட்டு உருண்டு வந்தாலும் கிபி 1331 ஆம் ஆண்டு மதுரையைத் தலைநகரகாக் கொண்டு முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது. இவர்களின் ஆட்சி கிபி 1371க்குப் பிறகு சரிந்த பிறகு தான் நாயக்க மன்னர்களின் ஆட்சி உருவானது. இதுவே 1393 ஆம் ஆண்டு முற்றிலும் துடைத்தது போல் ஆனது.

ஆனால் இஸ்லாமியர்கள் என்பவர்கள் எப்படி உருவானார்கள்?

இஸ்லாமியர்களை இன்று முஸ்லீம் என்று அழைக்கப்படும் பெயரானது இடையில் உருவான பெயராகும்.  சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு வணிகத் தொடர்பில் இருந்த யவனர்களின் பெயரே பின்னாளில் சோனகர் என்று அதனூடே முஸ்லீம் என்றும் உருவானது. ஏற்கனவே நம் பதிவில் கும்மியார் சொல்லியுள்ள மரைக்காயர் என்பது மரக்கலத்தில் வாணிப தொடர்புக்காக உள்ளே வந்தவர்கள் என்பதில் தொடங்கி துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த கலிபாக்கள் மூலம் துலுக்கர் என்ற பெயரும் உருவானது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த முஸ்லீம் மதம் ஆழமாக வேர் ஊன்ற காரணம் ஒன்றே ஒன்று தான்.  அப்போது நிலவிய ஜாதிப் பாகுபாடுகளினால் உருவான தாக்கமாகும்.  தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரை குத்திப்பட்டு அன்றாட வாழ்வில் அப்போது சாதாரண குடிமகன் அனுபவித்த அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மன்னர் ஆண்டாலும் சரி, அவர்களின் சார்பாளர்கள் இருந்தாலும் சரி அடித்தட்டு மக்களின் அவலநிலைக்கு முக்கிய காரணம் இந்த இன்ப்பாகுபாடே முக்கிய பாத்திரம் வகித்தது. 

இதற்கு மேல் குலத்தொழில் என்ற போர்வையில் ஒவ்வொருவரையும் ஒரு அளவிற்கு மேல் மேலே வரமுடியாத அளவிற்கு குறிப்பிட்ட சமூகத்தினர் அடக்கி ஓடுக்கி வைத்திருந்தனர். 

எழுந்தால், நடந்தால், நின்றால், பேசினால் குற்றம் என்கிற நிலையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும் இரண்டு காரியங்கள் செய்யத் தொடங்கினர்.  ஒன்று புலம் பெயர்தல்.  மற்றொன்று தங்களின் மதத்தை மாற்றிக் கொள்ளுதல்.  ஆங்கிலேர்கள் மூலம் உள்ளே வந்த கிறிஸ்துவம் மிக அமைதியாக தங்களின் ஆக்டோபஸ் கரங்களை வெவ்வேறு திசைகளில் பரப்பிக் கொண்டுருந்து.  அதைப் போலவே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை நோக்க அடித்தட்டு மக்கள் ஒவ்வொருவரும் இயல்பாக தேர்ந்தெடுக்கத் தொடங்கினர்.

இந்து மதம் என்றால் சாவது வரைக்கும் சுடுகாட்டில் புதைப்பது வரைக்கும் பரவியிருந்த கொடூரத்தை தாங்க முடியாத மக்கள் தங்களுக்கான நல்வாழ்க்கையை இந்த இஸலாமிய மார்க்கத்தை தழுவியதன் மூலம் தங்களை மாற்றிக் கொள்ள முற்பட்டனர். ஆறாவது நூற்றாண்டில் உள்ளே வந்த அரேபியர்கள் உருவாக்கிய பாதையில் இருந்து இது தொடர்கின்றது.  ஆனால் இடையில் வந்த அந்நிய படையெடுப்புகளால் இது போன்ற கட்டாய கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது என்று எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்ள தயாராகவே இருந்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.  இன்றைய முஸ்லீம் மக்களின் பத்து தலைமுறைக்கு முன்னால் உள்ளவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்கள் இந்துவாக இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.


முஹம்மதியர்களின் வருகை ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை

இவ்வாறு சொல்லியிருப்பது இந்து மதத்தை கடல் தாண்டி கொண்டு சென்று முழங்கிய சுவாமி விவேகானந்தர். காரணம் அந்த அளவிற்கு பழைய சமூக வாழ்க்கையில் மனிதர்களை இந்த ஜாதி என்ற மூலக்கூறு சல்லடைக் கண்கள் போல் உற்றுநோக்கிக் கொண்டுருந்தது.  தமிழர்கள் இஸலாம் மதத்தை தழுவ ஆரம்பித்தது ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே நடைபெறத் தொடங்கியது.


ஊரில் நான் இருந்தவரையிலும் அப்பா இறைச்சிக் கடைக்குள் நுழையும் போதே மாமா என்று தான் முஸ்லீம்கள் அழைப்பார்கள். எனக்கு அப்போது இந்த பாகுபாடுகள் குறித்து அதிகம் தெரியாத போதும் இப்போது குறிப்புகள் வழியாக படித்து உணரும் இந்த வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.  நான் பார்த்த ஒரு குறிப்பு இவ்வாறு சொல்கிறது.

" இதனால்தான் இன்று வரை மற்ற சமயத்தினர்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. தமிழர்களான முஸ்லிம்களை தமிழர்களான தலித்துகள் தாத்தா என்றும், யாதவர்களும் தேவர்களும் மாமா என்றும், பரவர்கள் சாச்சா என்றும் இதுபோன்று பல்வேறு முஸ்லிமல்லாத சமூகத்தினர் உறவு வைத்து அழைக்கும் வழக்கம் இன்று வரை நடைமுறையில் உள்ளது.  தீண்டாமை ஒழிப்பில் தொடர்ச்சியாக பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் இஸ்லாம் தன் பங்களிப்பைச் செலுத்தி வந்துள்ளது. இருப்பினும் கடந்த நூற்றாண்டில் அதன் பங்களிப்பு வீரிய மிகுந்ததாக இருந்துள்ளது."

இந்து மதத்தின் கொள்கை என்று சொல்லப்படுவது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்".  ஆனால் அதுவே இஸ்லாமிய நடைமுறையில் "ஒன்றே குலம் ஒரே சாதி" என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் அடித்தட்டு மக்களுக்கு தாங்கள் மாறுவதற்கு ஏற்ற மார்க்கம் இது தான் என்று தேர்ந்தெடுத்ததில் பெரிதான ஆச்சரியமில்லை.

ஆனால் சமகாலத்தில் இஸ்லாமியர்களின் நலனுக்கான என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டுருக்கும் அரசியல் கட்சிகளை அவர்களின் கொள்கைகளை இப்போது இதை வைத்து ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பதிவில் உள்ளே வரும் போது, காங்கிரஸ் கட்சியை எதிர்க்க கூட்டுச் சேர்ந்த எட்டு கட்சிகளைப் பற்றி பேசும் இவர்களின் தரம் தராதரம் பற்றி பேசுவோம்.

மலேசியாவில் மகாதீர் ஆட்சி புரிந்து கொண்டுருந்த போது தமிழ்நாட்டு முஸ்லீம்களை குறிவைத்து சில சட்ட திட்டங்களைக் கொண்டு வந்தார்.  இத்தனைக்கும் மகாதீர் முன்னோர்கள் கூட கேரளாவில் இருந்து போனவர்கள் தான்.  அவரும் அரசியல்வாதி தானே?  ஆனால் மலேசிய தமிழ் முஸ்லீம்கள் அன்று முதல் இன்று வரையிலும் தாய் வீடாக தமிழ்நாட்டைத் தான் கருதுகிறார்கள்.  இன்று கூட அதில் பெரிதான மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் திருப்பூரில் பார்த்தவரையிலும் அரபு உருது பேசக்கூடிய முஸ்லீம்கள் எந்த இடத்திலும், குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் தங்கள் தாய் மொழியில் தான் பேசுகின்றனர்.  ஆங்கிலம் படித்த மோதாவிகள் கூட தங்கள் மொழியில் திடீர் என்று தாவி என்னை பலமுறை திக்குமுக்காட வைத்துள்ளனர்.  அதே போல நான் பார்த்த, பழகிய மலேசிய சிங்கப்பூர் தமிழ் முஸ்லீம்கள் முடிந்தவரைக்கும் அவர்களின் தமிழ் மொழிப்பற்றை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்.  வருகின்றவர்களிடம் மலாய் ல் பேசுவார்கள்.  உள்ளே இருப்பவர்களிடம் தமிழிலில் தான் தொடர்வார்கள். இது போல பல விசயங்களை என்னால் உதாரணம் காட்ட முடியும்.  இது குறித்து வரலாற்று தகவலில் உள்ள சிறு குறிப்பையும் இதில் படித்துவிடலாம்.

"தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர். தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், கி.பி 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது."

" இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும்."

" இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி,உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன."
by ஜோதிஜி திருப்பூர் 
நன்றி / Source: http://deviyar-illam.blogspot.com

அந்த தளத்தில் உள்ள 116 comments
அதில் சில

எம்.எம்.அப்துல்லா

அண்ணா, நான் சில வரலாற்றுக் குறிப்புகளைத் தர விழைகிறேன். தமிழக இஸ்லாமியர்களில் இப்போது உள்ளவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து மதம் மாறியவர்கள் வெகு குறைவு. இஸ்லாம் முதன் முதலில் தமிழகத்தில் அறிமுகம் ஆனது கடற்கரைப் பிரதேசங்களில்தான்.அப்போது மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர்.பின்னர் பெரும் மாற்றம் நிகழ்ந்தது தஞ்சைத் தரணியில். நாகூர் ஆண்டவர் நாகூர் வந்து வாழ்ந்த போது அவரது அற்புதங்களாளும்,பேச்சினாலும் பெரும் பகுதியான சோழ நாட்டு மக்கள் மதம் மாறினர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர்கள் அனைவரும் பிராமணர்கள்.இன்றைக்கும் தஞ்சை மாவட்ட இஸ்லாமியர்கள் நல்ல நிறமுடையவர்களாகவும்,கூர்ந்த நாசி உடையவர்களாகவும் இன்னும் சொல்லப்போனால் அவர்கள் பெயரைத் தவிர்த்து உருவத்தை வைத்துப் பார்த்தால் பிராமணர்கள் போல தோற்றம் கொண்டவர்களாகவும் இருக்கும் காரணம் அதுதான். இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரஹாரம்,மங்கலம் என முடியும் பேரைக் கொண்ட பல ஊர்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே இருப்பதற்கு இதுவே காரணம்.உதாரணம் பள்ளி அக்ரஹாரம்,அடியக்காமங்கலம் போன்ற ஊர்கள்.
அடுத்த மதமாற்றம் நிகழ்ந்தது வெள்ளையர்களின் ஆரம்ப ஆட்சி காலத்தில்.அப்போது அவர்கள் கொண்டு வந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தில் பாதிக்கப்பட்ட இன்றைய புதுக்கோட்டை,சிவகங்கை,இராமநாடு,மதுரை,தேனி,திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த முக்குலத்தோர் அந்தச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி அமைதியான வாழ்க்கை வாழ விரும்பி கூட்டம் கூட்டமாக இஸ்லாம் மதம் மாறினர். என் முன்னோர்களும் அவர்களில் ஒருவரே. அதன் பின்னர் பெரிதாக இஸ்லாத்திற்கு கும்பலான மத மாற்றம் எதுவும் நிகழவில்லை.நியாயமாகப் பார்த்தால் இஸ்லாத்திற்கு தாழ்த்தப்பட்டோர்தான் அதிக அளவில் மாறி இருக்க வேண்டும்.ஆனால் தமிழகத்தில் இஸ்லாம் ஆனோர் பெரும்பாலும் உயர் சாதியினரே. இது ஒரு வித்யாசமான முரண்.


எம்.எம்.அப்துல்லா
// நான் திருப்பூரில் பார்த்தவரையிலும் அரபு உருது பேசக்கூடிய முஸ்லீம்கள் //

அரபு என்பதும் உருது என்பதும் வேறுவேறு மொழி.இரண்டுக்கும் சம்மந்தம் கிடையாது.அரபு என்பது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் ( துபாய்,சவூதி,கத்தார்,குவைத்,ஏமன்,ஓமன்,ஈராக்,ஈரான்) தாய் மொழி. உருது என்பது சுத்தமான இந்தியமொழி. அக்பர் தன் ஆட்சி காலத்தில் தீன் இலாஹி என்ற தனி மதத்தை உருவாக்கினார். அதேபோல தன் மதத்திற்கு தனி மொழி ஒன்று வேண்டும் என்று விரும்பி மொழியியல் வல்லுனர்களிடம் கூறினார். அவர்கள் சமஸ்கிருதம்,ஹிந்தி,பார்சி ஆகிய மொழிகளின் கூட்டுக் கலவையாய் உருதுவை உருவாக்கினர்.இன்றைக்கு இந்தியாவில் அரபுவை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் என்று யாருமே இல்லை. எனவே திருப்பூரிலும் அரபு தாய்மொழி இஸ்லாமியர்கள் இருக்க 101% வாய்ப்பு இல்லை. அரபுக்கும்,உருத்துவுக்குமான குழப்பத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.

முஹம்மத் ஆஷிக்
சகோ.ஜோதிஜி,
உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக..!

மிகவும் நுண்ணாய்வு செய்து நேர்மையான முறையில் பதிவிட்டிருக்கிறீர்கள். அருமையான பதிவு. மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.

அப்புறம், மேலும் எனக்குத்தெரிந்த வகையில் சில திருந்தங்கள்.

//இஸ்லாமியர்களை இன்று முஸ்லீம் என்று அழைக்கப்படும் பெயரானது இடையில் உருவான பெயராகும்.//--இறைவன் மனிதர்களுக்கு இவ்வுலகில் வாழ அளித்த ஒழுங்குமுறை திட்டம்-நன்னெறி-மார்க்கம்... இஸ்லாம். இதை பின்பற்றிய மக்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டது வேறு யாருமில்லை அதே இறைவன்தான். ஆறாம் நூற்றாண்டுகளிலேயே முஸ்லிம்கள் தங்களை இப்படித்தான் அழைத்துக்கொண்டனர். முதலில் கேரள கடற்கரைக்கு வந்த அரேபிய வாணிகர்களை 'நீங்கள் யார்' என்றதற்கு 'நாங்கள் முஸ்லிம்கள்' என்றுதான் பதிலளித்தார்கள்.

//முஸ்லீம் மதம் ஆழமாக வேர் ஊன்ற காரணம் ஒன்றே ஒன்று தான். அப்போது நிலவிய ஜாதிப் பாகுபாடுகளினால் உருவான தாக்கமாகும்//--இதுவும் பல காரணங்களில் ஒன்று. அவ்வளவுதான். முதலில் அரேபிய வணிகர்களின் வியாபார நேர்மையும், கண்ணியமும், ஒழுக்கமும் இங்குள்ளவர்களை ஈர்த்தன. 'ஏன் இப்படி' 'எது காரணம்' என்று கேள்விகள் கேட்க வைத்தன. இதற்கு அப்புறம்தான் இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அவர்கள் சொன்னார்கள். இப்படி ஈர்க்கப்பட்டு கேள்விகேட்டவர்களில் அனைத்து சாதிகளும் அடக்கம்.

//இது போன்ற கட்டாய கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது என்று எடுத்துக் கொண்டாலும்//--மிகவும் லாவகமாக வார்த்தைகள் பொருக்கி எடுக்கப்பட்டுள்ளன. அதனால்...பின்னர் தெளிவாக //வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. ... (நடைபெற்றது என)...சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும்.//--இதை பொருந்திக்கொண்டேன். நன்றி.

//அதுவே இஸ்லாமிய நடைமுறையில் "ஒன்றே குலம் ஒரே சாதி"//--இதைவிட தெளிவாக "ஒன்றே குலம் ஒரே சாதி ஒருவனே இறைவன்" என்றும் சொல்லலாம்.

மிகவும் மன நிறைவான பதிவு.

தமிழ்மணத்தில் இரண்டு விருதுகள் வென்றிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. கணக்கிலா பாராட்டுக்கள் உரித்தாகுக.

சுவனப்பிரியன்
விரிவாக அலசி எழுதியிருக்கிறீர்கள். வாளால் பரப்பப் பட்டது இஸ்லாம் என்று இன்னும் எத்தனை காலம் சொல்லப் போகிறார்களோ! பதிவை படித்தாவது தெளிவடைவார்கள் என்று நம்புவோம்.


mohamedali jinnah
அன்புடையீர் ,
தங்களுக்கு எனது வாழ்த்துகள் .இப்படி ஒரு சிறப்பான கட்டுரையை தாங்கள் தந்தமைக்கு நன்றிகள் .கட்டுரையோடு கருத்துரைகளும் மிகவும் சிறப்பாக உள்ளது .சரித்திர கட்டுரைகள் தரும்போது மிகவும் கவனம் தேவைப்படுகின்றது . தாங்கள் அதில் முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் .சில கருத்து மாற்றங்கள் வரத்தான் செய்யும் அதுவும் நன்மையாகவே அமையலாம்
தொடருங்கள் உங்கள் சேவையை
அன்புடன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails