Wednesday, February 10, 2016

வாழ்வியல் வழிகாட்டி' அப்துற் றஹீம்

"என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்" என்று வாழ்ந்த பேரரறிஞர் அப்துற்றஹீம்.

20 – ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப் படைத்த மாமேதையாகவும், இளைஞர்களின் வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்காகவும் திகழ்ந்த அப்துற்றஹீம் மு.றா. முகமது காசிம் என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.

கல்லூரிக் கல்வியை முடித்து வெளி வந்த அவர், வாழ்வை எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் கிடைத்த நூல்களைக் கற்றார். 'படித்து முடித்து சம்பாதிக்காமல் இருக்கிறானே' என்று பலர் எள்ளி நகையாடினர். அவர்களுடைய ஏளனப் பேச்சு அப்துற் றஹீமுக்கு வருத்தத்தைத் தருவதற்கு மாறாக வேகத்தைத் தந்தது.

அந்த நேரத்தில் தொண்டியில் 'வளர் பிறை' நூலகம் என்ற இலவச நூலகம் அமைக்கப்பட்டது. அந்த நூலகத்திற்கு பலர் நூல்களை நன்கொடையாக வழங்கினர். அவற்றை பொருள் வாரியாகப் பிரித்து எண் இடும்பணி அப்துற் றஹீமிற்கு வழங்கப்பட்டது. அங்கு தான் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் எழுதிய 'லார்ட் ஆப் அரேபியா' என்ற நூலும் நன்கொடை நூல்களுள் இருந்தது. படிப்பதில் பெரு விருப்பம் கொண்ட அவர், அந்நூலை மொழிபெயர்த்து எழுதினால் என்ன? என்று எண்ணினார். தனது விருப்பதை தந்தையிடம் தெரிவித்தார். 'உன்னால் முடிந்தால் செய்' என்றார் தந்தை. அந்த வார்த்தைகள் தான் அவர் எழுத்துத்துறைக்கு வர உந்து சக்தியாயின.

1944- இல் 'அரேபியாவின் அதிபதி' என்ற பெயரில் அவரது முதல் நூல் வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 22. தமிழறிஞர் சாமி நாதசர்மா அந்நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார்.

காரல் மார்க்சின் மூலதனம் தான், கப்பலுக்கு நிலக்கரி அள்ளிப் போடும் தொழிலாளியாகப் பணியாற்றிய ஹோசிமினைப் புரட்சியாளனாக மாற்றியது. ரஸ்சின் எழுதிய 'கடையனுக்கு கடைத் தோற்றம்' நூலும், டால்ஸ்டாயின் 'ஆண்டவன் ராஜ்ஜியம் உனக்குள்ளே இனி நாம் செய்ய வேண்டுவது யாது?' போன்ற நூல்களும் காந்தியடிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இத்தகைய மாற்றத்தை உண்டாக்கும் நூல்களை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் அப்துற் றஹீமின் உள்ளத்தில் ஆழப் பதிந்தது.

மக்கள் நலமாக வாழ, வெற்றி பெற்ற பல சான்றோர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தார். பிறவிப் பயனை நுகரவும், அர்த்தமுடன் வாழவும் என்ன செய்தால் வெற்றி பெறலாம்? என்பதையும் 'வாழ்க்கையில் வெற்றி' என்ற நூலில் விளக்கியுள்ளார்.
'வாழ்க்கையில் வெற்றி' முதற்பதிப்பு வந்தது. இந்நூலே தமிழில் வெளிவந்த (அவர் எழுதிய 28 வாழ்வியல் நூல்களில்) முதல் வாழ்வியல் இலக்கியம். அவர் தோற்றுவித்த 'யுனிவர்சல் பப்ளிசர்ஸ்' வெளியிட்ட முதல் நூலும் இது தான். இந்நூல் முப்பது பதிப்புகள் வெளி வந்து சாதனை படைத்துள்ளது.

'கவலைப்படாதே' '

முன்னேறுவது எப்படி?'

'சுபிட்சமாய் வாழ்க'

வியாபாரம் செய்வது எப்படி?

'வாழ்வைத் துவங்கு'

'வாழ்வது ஒரு கலை'

'வழி காட்டும் ஒளி விளக்கு'

'மகனே கேள்'

'அன்புள்ள தம்பி'

'வாழ்வின் வழித்துணை'

'வாழ்வின் ஒளிப்பாதை'

'மன ஒருமை வெற்றியின் ரகசியம்'

'அகிலத்தின் அறிவுத் திறன்'

'இல்லறம்'

'விளக்கேற்றும் விளக்கு'

'இளமையும், கடமையும்'

'உன்னை வெல்க'

'படியுங்கள் சிரியுங்கள்'

'படியுங்கள் சிந்தியுங்கள்'

படியுங்கள் சுவையுங்கள்'

'ஒழுக்கம் பேணுவீர்'

'நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி'

முதலான பல நூல்களில் புதிய புதிய செய்திகளைப் புதைத்து வைத்துள்ளார். இவை தமிழர்க்குக் கிடைத்துள்ள அறிவுப் புதையல்களாகும்.

அப்துற் றஹீம், பொழுது போக்குக்காகவோ, புகழுக்காகவோ, பிழைப்புக்காகவோ எழுதவில்லை. சமுதாயத்தின் பழுது நீக்க எழுதினார். எழுதுவதை புனிதமான தொண்டாகக் கருதினார். 71 ஆண்டுகள் எழுதுவதற்காகவே வாழ்ந்தார். விருதுகளையும், பட்டங்களையும் ஏற்றுக் கொள்ள நாணினார். மரபுகளையும் பண்பாட்டையும் பேணினார். இளைஞர்களின் எதிர்காலம் வீரிய விதைகளின் விளைச்சலாக வேண்டுமென்று சிந்தித்தார். படிப்பதையும், எழுதுவதையும் தவமாகக் கொண்டார்.

அம்மேதை அப்துற்றஹீமை பற்றி குமுதம் வார இதழ் அரசு கேள்வி பதில் பகுதியில் 1976-ல் ஒருவர் கேட்கிறார்,"அரசு! உங்களுக்கு பிடித்தமான, மிகவும் மதிக்க தக்க அறிஞர் யார்?" என கேட்க, 'பண் நூல் ஆசிரியரும், யுனிவர்சல் பப்ளிஷரின் அதிபருமான அப்துற் றஹீம்" என பதிலுறைத்து,அதற்கான காரணமும் குறிப்பிட்டிருந்தார்.

அரசுக்கு ஏதோ ஓரு தகவல் தேவைபட்டபோது யாராலும் தரமுடியவில்லையாம்; அவர் நண்பர் கூறினாராம், 'அப்துற் றஹீமிடம் கேளுங்கள், விளக்கம் கிடைக்கும்' என்று. அரசும் அப்துற் றஹீமை சந்தித்து விளக்கம் கேட்டதற்கு, சென்னை பல்கலைக் கழக நூலகத்துக்கு சென்று குறிபிட்ட வரிசையில் குறிபிட்ட நூல் இருக்கும், அதில் குறிபிட்ட பக்கத்தில் நீங்கள் கேட்கும் தகவலுக்கு விளக்கம் கிடைக்கும் என்று கூறினாராம்.அதைப் போலவே அரசுக்கும் விளக்கம் கிடைத்ததாக, அரசு குறிப்பிட்டிருந்ததார்.

நன்றி : குர்ஆனின் குரல் – அக்டோபர் 2012
http://www.nidur.info/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails