Wednesday, October 15, 2014

”இவ்வளவு தான் சம்பளமா?”

எங்கள் ஊரில் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் யாரும் இல்லை. அதனால் எனக்கு அதை பற்றிய அறிவு மிக குறைவு தான். எவ்வளவு சம்பளம் தருவார்கள், எவ்வளவு நாள் லீவு கிடைக்கும், எப்போ ஊர் வந்து போவார்கள் என்பது பற்றி எதுவும் எனக்கு தெரியாது.

சமீபத்தில் வேலை வாய்ப்பு பதிவு ஒன்று பார்த்தேன். அதில் சம்பளம் AED ல் இருந்தது. அதை இந்திய ருபாய்க்கு மாற்றி பார்த்து அதிர்ந்தேன். காரணம் இந்திய மதிப்புக்கு அது சுமார் 30 ஆயிரம் ருபாய்கள்.
நான் அதுவரை படிப்பு குறைவானவர்களுக்கு மாதம் ஒரு லட்சமும் அதிகமானவர்களுக்கு இரண்டு லட்சத்துக்கு மேலும் கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன். 30 ஆயிரம் ருபாய்கள் என்றால் அவர் செலவு போக வீட்டுக்கு அனுப்புவது மாதம் 15 ஆயிரம் தானே இருக்கும். இந்த 15 ஆயிரத்தை உள்நாட்டில் சம்பாதிக்க வழியே இல்லையா? கேள்விகள் என் மனதில்... சற்று சோகமாகவும் இருக்கிறது...

மனைவியின் இளமைக்கு, பிள்ளைகளின் மழலைக்கு, பெற்றோரின் பரிவுக்கு, சொந்தங்களின் உற்சாகத்துக்கு, பிறந்த மண்ணின் வாசனைக்கு மதிப்பு வெறும் இந்த பதினைந்தாயிரம் தானா?

ஒரு பத்து வருடம் முன்பு என் தாய் தஞ்சாவூர் பக்கம் தப்லீக் ஜமாத் என் அப்பாவுடன் சென்று வந்தார். வந்து அவர் ஆச்சரியமாக என்னிடம் சொன்ன தகவல்:

“கண்டிப்பாக அங்கு வீட்டுக்கு ஒருவர் ஃபாரீனில்... சின்ன சின்ன அழகான பெண்பிள்ளைகள்... மணம் முடித்து ஒரு மாதமோ ஒன்னரை மாதமோ இருந்து விட்டு போய் விடுகிறார்கள். பின் ஆண்டுக்கணக்காக தனிமை தான்... அவர்களை பார்த்தாலே பாவமாக இருக்கிறது...

எல்லா வீட்டிலும் வெளியில் ஒன்றும் ரூமில் ஒன்றுமாக ரெண்டு போன் பாயிண்ட் இருக்கு. கணவன்மார்கள் குறிப்பிட்ட நேரத்தில் போன் செய்து (அப்போது செல்போன் வராத காலம்) போன் செய்ய போவதாக சொல்லி விட்டு வைத்து விடுகிறார்கள். பின் போனை கலட்டி ரூமுக்குள் போய் கதவை சாத்திவிட்டு ஒரு மணி நேரம் பேசுகிறார்கள். போன் வந்தால் அவர்கள் முகம் மத்தாப்புவாக மலர்கிறது. அவர்கள் வாழ்க்கையே இந்த போன் மூலம் தான். என்ன கொடுமை இது... “

நிஜம்... இது சுடும் நிஜம்... ஒரு பெண் எவ்வளவு காலம் ஆண் துணை இல்லாமல் இருக்க முடியும் என்று எம்பெருமானார் (சல்) அவர்கள் வினவிய போது நான்கு மாதங்கள் என்று பதில் சொன்னார்கள். போருக்கு சென்ற ஸஹாபாக்களை கூட மனைவியின் தேவையை நிறைவேற்றும் பொருட்டு நான்கு மாதத்துக்கு ஒரு முறை வந்து போக அனுமதி வழங்கி இருந்தார்கள். ஆனால், இன்று வருடக்கணக்காக ஒருவரை ஒருவர் பிரிந்து...

தொலைத்து விட்ட பிள்ளைகளின் மழலை மீண்டும் கிடைக்குமா? அப்பா யார் என்று அம்மா அறிமுகம் செய்து வைக்கும் சூழல்... அப்பாவிடமிருந்து அந்நியப்பட்டு போகும் பிள்ளைகள்... இதற்கெல்லாம் விலை அந்த 15 ஆயிரம் ருபாய் தானா?

இந்த காசை நம் நாட்டில் சம்பாதிக்க வழியில்லையா? நம்மை சுற்றி ஆயிரமாயிரம் தொழில்கள் இல்லையா? காசு இல்லாதபட்சத்தில் ஓரிரு ஆண்டுகள் வளைகுடாவில் இருந்து விட்டு கொஞ்சம் காசை சேர்த்து விட்டு ஊரோடு வர ஏன் தைரியம் வருவதில்லை?

இனியாவது... அடுத்த தலைமுறையையாவது... ஒரு அரசாங்க அதிகாரியாக, ஒரு பிசினெஸ்மேன் ஆக, ஒரு சயிண்டிஸ்ட் ஆக, ஒரு டாக்டர் ஆக, ஒரு இஞ்சினியர் ஆக ஆகுமாறு சொல்லி சொல்லி வளர்ப்போம். எல்லா துறைகளிலும் சிறந்த துறை, தொழில் அதிபர் ஆவது தான். தான் முதலாளியாக இருப்பது மட்டும் அல்ல, தன் மக்களுக்கு ஒரு வேலை கொடுக்கவும், அவர்களை அந்நிய நாட்டில் கருகிப் போகாமல் காப்பாற்றவும் ஒரு தொழில் அதிபரால் மட்டுமே முடியும்.

நம் பிள்ளைகளை தொழில் அதிபராக சொல்லி சொல்லி வளர்ப்போம். அவர்கள் படிப்புக்காக நாம் காசு சேர்த்து வைப்பது போல, அவர்கள் வருங்காலத்தில் பெரியவர்களாகி தொழில் தொடங்க என்றே இப்போதிருந்து கொஞ்சம் சேமிப்போம். பாலைவனத்தில் இளமையை தொலைக்கும் அவலத்தை மாற்றுவோம் இன்ஷா அல்லாஹ்...

கட்டுரை எழுதியவர் Suhaina Mazhar
நன்றி : http://www.tajmahalmasala.in

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails