Tuesday, August 12, 2014

அப்பாவின் நினைவாக....

அந்த இரவில் என்னால் தூங்கவே முடியவில்லை.

எப்போதும் என்மீது செல்லமாகவே இருக்கும் அப்பாவின் கையால் அடிவாங்கிய இரவு அது. அடித்தது வலிக்கவில்லை. அடித்து விட்டாரே எனும் எண்ணம் தான் வலித்துக் கொண்டிருந்தது.

எனக்கு அப்போது ஐந்து வயதோ, ஆறு வயதோ இருக்கலாம். ஒழுங்காக டவுசர் உடுக்கத் தெரியாத வயது. ஆனாலும் அந்த வலியை மனதுக்குள் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகும் மீண்டெடுக்க முடிகிறது.

தூங்காமல் கண்ணை மூடியபடி படுத்துக் கிடந்த எனக்குள் சின்ன வயது சிந்தனைகள் நிரம்பின. “அப்பாவுக்கு என் மேல பாசமே இல்லை. இல்லேன்னா இப்படி அடிச்சிருப்பாரா?” என்பதே எனது மனசில் எழுந்து கொண்டிருந்த ஒரே கேள்வியாய் இருந்தது. அந்தக் கேள்வி எனக்குள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்ததால் என்னால் தூங்கமுடியவில்லை.
அப்போது திண்ணையில் அமர்ந்து அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தது சன்னலின் இடுக்கு வழியே சன்னமாய்க் கேட்டது.

“சரி.. சரி… போதும் புலம்பினது. அதையே நினைச்சிட்டு இருக்காம வந்து தூங்குங்க”

“இல்ல… பையனை அடிச்சிட்டேனேன்னு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவனை நான் அடிச்சதே இல்லை… அவன் சின்னப் பையன்…. ” அப்பாவின் குரலிலிருந்த வலி என்னை உலுக்கியது.

அந்த இரவு எனக்கு சில விஷயங்களைக் கற்றுத் தந்தது. என்னுடைய வலி சட்டென காணாமல் போய்விட சில வினாடிகளிலேயே தூங்கிப் போய்விட்டேன். காலையில் எழுந்தபோது வழக்கத்துக்கு மாறாக அப்பாவின் கட்டிலில் படுத்திருந்தேன் நான் !

இந்த இரவில் ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். அப்பாவைப் பார்க்க வேண்டும் எனும் நினைப்பு மட்டுமே மனசுக்குள். பஸ் என்னையும் சுமந்துகொண்டு என்னுடைய கிராமம் நோக்கி நகர்கிறது. நான் இருப்பது சென்னையில். என்னுடைய பெற்றோர் இருப்பது குமரி மாவட்டத்தின் கிராமம் ஒன்றில். எங்களுக்கு இடையே நீண்ட நெடிய எழுநூற்று ஐம்பது கிலோ மீட்டர் நீளம் !

அப்பா !

என் வாழ்க்கையில் கிடைத்த மிக உயரிய பொக்கிஷம் அப்பா தான். ஒரு தந்தை எப்படி

இருக்கவேண்டும் என்பதன் பிழையற்ற இலக்கணம் அவர். என்னுடைய நீண்டகால நண்பர்கள் அனைவருக்குமே எனக்கும் அப்பாவுக்குமான பாசப் பிணைப்பு தெரியும். என்னுடைய படைப்புகளில் கணிசமானவைகள் அவருடைய தாக்கத்தில் விளைந்தவையே.

ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கே உரிய எளிமை அவரிடம் நிரந்தரமாய் உண்டு. எதையும் வாழ்ந்து காட்டவேண்டும், பேசித் திரியக்கூடாது என்பதையே அவர் தனது வாழ்க்கைக் கொள்கையாய் வைத்திருந்தார். அவருடைய உயரம் தான் மனித நேயத்தின் உயரம். எங்கள் கிராமத்தின் கடைசி மனிதனுக்கும் அவரைப் பிடித்துப் போகும், காரணம் அவருடைய நேர்மையும், கனிவும். என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் மிச்சமிருக்கிறதெனில் அதற்குக் காரணம் அப்பா தான்.

சீக்கிரம் அப்பாவைப் போய் பார்த்து விட மாட்டோமா எனும் ஒரு ஆதங்கம் மனசுக்குள். பஸ் எப்போதுமில்லாத அளவுக்கு மிக மிக மெதுவாய் நகர்வதாய்த் தோன்றியது எனக்கு. ஒருவேளை எனது நினைவுகள் அதிவேகமாய் அலைந்து திரிந்ததாலா என்பது தெரியவில்லை. இரவைத் துரத்தும் வேகத்தில் வண்டியின் விளக்கு வெளிச்சம் முன்னால் ஓட, வண்டியின் பின்னால் இருட்டு வண்டியைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

நான் அமெரிக்காவில் மில்வாக்கி எனுமிடத்தில் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய சூழல் நேர்ந்தபோது தான் அப்பாவின் நேசத்தின் ஆழம் புரிந்தது. இப்போது போல நினைத்த நேரத்தில் தொலை பேசிவிடும் வசதி அப்போது இருக்கவில்லை. வாரம் ஒரு முறை வரும் எனது அழைப்புக்காகத் திண்ணைப் புத்தனாய் அவர் தவமிருக்கும் நினைவுகள் நெஞ்சில் அலைந்தன.

“நல்லா இருக்கியாடே..” எனும் அவருடைய வார்த்தைகளில் ஒலிக்கும் நேசத்தை நிறுக்க என்னிடம் எந்தத் தராசும் இருந்ததில்லை. எல்லா அப்பாக்களும் சொல்லும் “நான் நல்லா இருக்கேன்” எனும் பொய்யைத் தான் அவர் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அமெரிக்காவை விட்டு இந்தியா வந்ததற்கு அவருடைய நினைவுகள் அலைக்கழித்த இரவுகள் ஒரு காரணம்.

அப்பாவின் வாழ்க்கை தான் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்லித் தந்தது. மற்றபடி என்னை உட்கார வைத்து அவர் எதையும் சொல்லித் தந்ததில்லை.

இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு முறை வீட்டுக்குப் பக்கத்தில் மிகப்பெரிய வாக்குவாதம். ஒருவருடைய மனைவியைப் பற்றி இன்னொருவர் தவறாகப் பேசிவிட்டார் என்பது தான் சண்டைக்கான காரணம். அப்போது நான் என்னுடைய பதின் வயதுகளில் இருக்கிறேன்.

அவர்களை சமாதானப்படுத்த களத்தில் இறங்கினார் அப்பா. முடியவில்லை. பேசுபவருக்கு கடுமையான கோபம். அவருடைய கோபம் சமாதானப் படுத்த வந்த அப்பாவின் மேல் திரும்பியது.

“உன் பொண்டாட்டியை தப்பா பேசினா சும்மா இருப்பியா ?”

என்னுடைய பதின் வயதுக்கு அந்த வார்த்தை கோபத்தைக் கிளறிவிட்டது. அப்பா என்னுடைய கையைப் பற்றினார். பின் அவனிடம் சொன்னார்

“என் மனைவி மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. யார் தப்பா சொன்னாலும் சண்டைக்குப் போக மாட்டேன்”

நான் அப்பாவை வியப்பாய்ப் பார்த்தேன். அந்த சண்டையின் வேகம் அந்தப் புள்ளியிலிருந்து குறையத் துவங்கியது.

எங்கள் வயல்களின் மீது அவருக்கு தனியாக ஒரு பாசம் உண்டு. அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு வரப்புகளில் நடப்பேன். வயலில் நாற்று நடும் உழைப்பாளிகளை வீட்டின் முற்றத்தில் அமர வைத்து சின்ன குழி தோண்டி, அதில் வாழை இலை வைத்து கஞ்சி ஊற்றிக் கொடுப்பது தான் எங்கள் கிராம வழக்கம். எங்கள் வீட்டில் மட்டும் தான் வீட்டின் நடுவே பந்தி இருக்கும்.  எல்லோரும் சேர்ந்து தான் சாப்பிடுவோம்.

அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதும் அப்பாவின் வழக்கமாய் இருந்தது. இதனால் உழைப்பவர்கள் அனைவரும் ‘சார் வீட்டில வேலை’ என்றால் ஆனந்தமாய் வருவார்கள். இத்தனைக்கும் எங்கள் வீட்டில் வறுமைக்கும், வாழ்வுக்கும் இடைப்பட்ட பாலத்தில் தான் வண்டி ஓடிக் கொண்டிருந்தது !

என்னுடைய அந்த இரவு நேர பஸ் பயணம் நீண்டு கொண்டே இருந்தது. இருள் கவ்விப் பிடித்திருந்த பஸ் சன்னல்களில் உற்றுப் பார்த்துக் கொண்டே பயணிக்கிறேன். வெளியே எதுவும் தெரியவில்லை. திக்குத் தெரியாத காட்டில் நிற்பதைப் போன்ற உணர்வு. இந்த இரவு கலையும் போது எதைச் சந்திக்கப் போகிறேன் ? மனம் நிம்மதியில்லாமல் தடுமாறுகிறது.

 என்னைப் பேச்சாளனாக்கிப் பார்க்கவேண்டும் என்பது தான் அப்பாவின் விருப்பமாய் இருந்தது. கல்லூரி காலம் முடியும் வரை என்னுடைய பேச்சுப் போட்டி உரைகளை தயாரித்துத் தருவது அப்பா தான். எப்போதும் முதல் பரிசு வாங்காமல் நான் வீடு திரும்பியதில்லை ! ஆனாலும் என்னுடைய ஆர்வம் எழுத்தின் மீது தான் இருந்தது. அதில் அப்பாவுக்கு வருத்தம் ஏதும் இருக்கவில்லை. தோளில் தட்டிக் கொடுத்து “எழுது” என்பார்.

என்னுடைய எழுத்துக்களின் முதல் ரசிகர் அப்பா தான். என்னுடைய எழுத்து பிரசுரமாகும் சின்னச் சின்ன சிற்றிதழ்களைக் கூட பொக்கிஷமாய்ப் பாதுகாத்து ஊரெல்லாம் சொல்லித் திரிவார். வருகின்ற படைப்புகளையும், அங்கீகாரங்களையும் ஏதோ ஆஸ்கார் விருதைப் போல நேசிப்பார். 

அப்பாவின் நினைவுகள் என்னை ரொம்பவே அலைக்கழிக்க அந்த தொலைபேசி அழைப்பு தான் காரணம்.

“அப்பாவுக்கு ரொம்ப முடியலப்பா, வீட்டுக்கு வர முடியுமா ? ” அம்மாவின் குரல் வழக்கத்துக்கு மாறான மென்மையாய் வேதனையுடன் ஒலித்தது.

கிடைத்த பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறிய இந்த இரவு, நெடுஞ்சாலைகள் எதையும் விட மிக மிக நீளமானதாய்த் தெரிந்தது. போர்த்துப் படுத்து நிம்மதியாய்த் தூங்கும் ஒரு இரவுக்கு எவ்வளவு நீளம் என்பது அன்று தான் புரிந்தது. “ஏன் தான் விடியுது” என போர்த்திப் படுக்கும் காலைப் பொழுது எத்தனை பேருக்கு துயரத்தின் தொடர்வண்டியாய் இருக்கிறது எனும் உண்மை உறைத்ததும் அன்று த

அப்பாவுக்கு சிறுநீரகத்தில் கோளாறு என்ற செய்தியைக் கேட்ட நாள் தான் என்னை துயரத்தின் உச்சியில் நிறுத்திய நாள். மது அருந்தாமல், புகை பிடிக்காமல் இருப்பவர்களுக்குக் கூட சிறுநீரகம் பழுதடையும் எனும் பாடமும் எனக்கு அப்போது தான் புரிந்தது. எனக்கு நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். எங்கள் எல்லோருக்குமே முதல் அழுகை அன்று தான் அறிமுகம்.

அப்பாவுக்கும் வாழ்வின் மீதான ஆசை அந்தக் கணத்தில் தான் அதிகரித்திருக்க வேண்டும். அதன் பின் எங்கள் மீதான நேசத்தை பத்து மடங்கு அதிகரித்தார். பிள்ளைகள் கோபப்பட்டால் மன்னிப்புக் கேட்கும் தந்தையைப் பார்ப்பதே அபூர்வம் தானே. அவர் எங்களுக்கு முன் மாதிரிகையாய் இருந்தார்.

இதற்கு முன் நான் ஊருக்குப் போயிருக்கையில் அப்பா மருத்துவமனையில் இருந்தார். அவருக்கு அருகில் என்னுடைய முழுக் கவிதைத் தொகுப்பு ஒன்றை வைத்திருந்தார். தன்னுடைய உடல்நிலையை விசாரிக்க வருபவர்களிடமெல்லாம் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததாய் அம்மா சொல்வார்.

 அதன் பின் அப்பாவின் வாழ்க்கையில் அவருக்கு பிடிக்கவே பிடிக்காத டயாலிசிஸ் காலம் ஆரம்பமானது. டயாலிசிஸ் செய்யும் காலம் வருவதற்கு முன் இறந்து போய்விட வேண்டும் என அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். டாக்டரிடமே பல முறை சொல்லியிருக்கிறார். “டாக்டர்.. டயாலிசிஸ் செய்யக் கூடிய நிலை வந்தா எனக்கு ஒரு ஊசி போட்டு கொன்னுடுங்க” ! அந்த அளவுக்கு அதை அவர் வெறுத்தார். எந்த நிலையிலும் யாருக்கும் எந்த கஷ்டத்தையும் கொடுத்து விடக் கூடாது என்பது தான் அவருடைய ஒரே எண்ணமாய் இருந்தது.

வாழ்க்கை நாம் நினைக்கும் இடத்திலெல்லாம் நம்மைக் கொண்டு போய் சேர்ப்பதில்லை. கனவுகள் கலைகையில் நாம் நிற்கும் நிஜத்தின் வீதி உறுத்தலாய் தானே தெரிகிறது.

டயாலிசிஸ் பயணம் அப்பாவுக்கும் ஆரம்பமானது. “இனி செத்ததினொப்பமே ஜீவிச்சிரிக்கிலும்” என மலையாளத்தில் சிரித்துக் கொண்டே தன் சோகத்தைச் சொல்வார் !

தண்ணீர் குடிக்கக் கூடாது. ஒரு நாள் சின்ன டம்ளரில் அரை டம்ளர் தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்பது டாக்டரின் கடுமையான கட்டுப்பாடு.

ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். தண்ணீர் குடிக்காமல் சாப்பிடுகிறார். பாட்டிலின் மூடி நிறைய தண்ணீர் எடுத்து நாக்கை நனைத்துக் கொண்டிருக்கிறார். அருகில் நான் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல சாப்பாடு. அப்பாவுக்கு எதுவும் ருசிக்கவில்லை போல

“உலகிலேயே சுவையான பொருள் என்ன தெரியுமா ?” அப்பா கேட்டார்.

நான் நிமிர்ந்து பார்த்தேன்.

“தண்ணீர் தான்” அவர் சொல்லி முடிக்கும் போது எங்கள் இருவருடைய கண்களும் கலங்கியிருந்தன. எனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு. “பரவாயில்லை அரை டம்ளர் கூட போதும்… “ என்கிறார். எனது மனம் இன்னும் அதிகமாய் கலங்குகிறது.

அப்பாவின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாய் மோசமாகிக் கொண்டே வந்தது. அப்போதெல்லாம் அப்பா பிரார்த்திப்பார். “எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போகும் வரம் வேண்டும்” என்பது தான் அவருடைய பிரார்த்தனை என்று ஒருமுறை கசப்பான சிரிப்புடன் சொன்னார்.

பஸ் பயணம் நீள்கிறது. இரவின் ஜாமங்களெல்லாம் கடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வீடு வந்து சேர்ந்து விடாதா எனும் ஏக்கம் மனசுக்குள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. விடிந்தும் விடியாத அந்த இரவின் கடைசி மிச்சத்தில் மீண்டும் எனது தொலைபேசி அழைத்தது.

மறுமுனையில் வெறும் விசும்பல். வார்த்தைகள் ஏதுமில்லை.

சட்டென உலகம் உறைந்து விட்டது போல உணர்வு. செய்தி புரிந்து விட்டது. நிசப்தமான அந்த பஸ் பயணத்தில் அதிரவைக்கிறது செய்தி. அழுகைக்கும் சத்தத்துக்கும் சம்பந்தமில்லை என்பது புரிகிறது.

அந்த நீளமான இரவின் முடிவில் தந்தையின் உடலைத் தான் பார்க்க முடிகிறது. சிரிப்பை மட்டுமே சந்தித்த எங்கள் வீட்டு முற்றம் முழுவதும் அழுகை நிரம்பி வழிகிறது. எதையும் நம்ப முடியவில்லை. எதையும் ஜீரணிக்க முடியவில்லை. ஓர் மாயாஜாலப் படம் போல அப்பா எழுந்து வந்து “வந்தியாடே…” என கேட்பாரா எனும் நிறைவேறாத ஏக்கம் மனசை அலட்டுகிறது.

எல்லாம் முடிந்து போய்விட்டதா ? இனிமேல் அப்பாவின் புன்னகையும், பேச்சும், அவர் கைபிடித்து நடக்கும் பாக்கியமும் கிடையாதா ? இந்த நினைப்பே நிறுத்த முடியாமல் கண்ணீரை உடைத்து விடுகிறது.

அந்த இரவு எனது வாழ்க்கையில் நான் மறக்க நினைக்கின்ற, ஆனால் நினைக்க மறக்காத இரவாய் நிலைபெற்று விட்டது.

“அப்பா கடைசியா என்னம்மா பேசினாரு” நான் அம்மாவிடம் கேட்டேன்.

“உன்னைப் பாக்கணும்ன்னு போட்டோவைக் காட்டி சொன்னாருடா. சொல்லி முடிக்கும்போ கண்ணுல இருந்து கண்ணீரா பாஞ்சுது” அம்மாவால் அழாமல் பேச முடியவில்லை. அம்மாவை எப்போதுமே அன்பொழுக “டேய்..” என்று தான் அப்பா அழைப்பார். என் கால் நூற்றாண்டு கால வாழ்க்கையில் அப்பா வேறெப்படியும் அம்மாவை அழைத்து நான் கேட்டதேயில்லை !

அதன் பின்னும் இரவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நள்ளிரவிலோ விடியும் முன்போ எப்போதேனும் ஒலிக்கும் “ராங் கால்” கள் என்னை உலுக்கி விடுகின்றன இப்போதும்.

அப்பாவின் அருகாமை கூடவே இருப்பதாய் அவ்வப்போது தோன்றும். தனிமையான இரவில் அடைபட நேர்கையில் அப்பாவின் குரல் தெள்ளத் தெளிவாய் ஒலிக்கும்

“சாப்டியாடே...”சேவியர் Joseph Xavier Dasaian Tbb

நன்றி : தோழி மதுமிதாவின் "இரவு" நூல்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails