Friday, August 23, 2013

லுங்கி(கைலி) ஒரு சுவாரஸ்யமான உடை. அதனுடைய பின்னணிக் கதைகளும் சுவாரஸ்யமானவை

“லுங்கியுடன் ஆபீஸ் போவதற்கு மனத்தடை இருக்கிறது. அரை டிராயரில் அது இல்லை!” –சமீபத்தில் டவுசர் பற்றிய விவாதம் ஒன்றின்போது ட்விட்டரில் எழுத்தாளர் பாரா சொன்னது இது.

’லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்கும் போராட்டம் நடத்துவேன்!’ சில வாரங்களுக்கு முன்பாக எழுத்தாளர் ஞாநி குமுதத்தின் ’ஓ’ பக்கங்களில் சென்னை கமலா தியேட்டர் நிர்வாகத்தை இவ்வாறாக எச்சரித்திருந்தார். அதாவது புதுப்பிக்கப்பட்ட கமலா தியேட்டருக்கு லுங்கி கட்டிக்கொண்டு படம் பார்க்க வருபவர்களை அனுமதிக்கவில்லை என்பதற்காக இவ்வாறு ஞாநி எச்சரித்திருந்தார். பிற்பாடு கமலா தியேட்டர் ’லுங்கி கட்டிக்கொண்டு வரலாம்’ என்று ஞாநிக்கு சிறப்பு அனுமதியும், மற்றவர்களுக்கு சாதா அனுமதியும் தந்தது, தொடங்கவே தொடங்காத அவரது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் வெளியானபோது தங்கர்பச்சான் புலம்பினார். சென்னை ஐநாக்ஸில் அப்படத்தை திரையிட மறுத்திருந்தார்கள். ‘வேட்டி, லுங்கியெல்லாம் கட்டினவங்க எல்லாம் உங்கப் படத்தைப் பார்க்க வருவாங்க!’ என்று மறுப்புக்கு நியாயம் சொன்னதாம் ஐநாக்ஸ் நிர்வாகம்.

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக லுங்கி கட்டி வருகிறேன். பத்து வயதில் அப்பா, இரண்டு மாஸ்டர் லுங்கி (ஒன்று வெள்ளைப்பூ போட்ட ப்ளூ, இன்னொன்று பச்சை என்று நினைவு) வாங்கித் தந்தார். கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டு டியூஷனுக்கு கூட அந்த லுங்கியோடு போய் வந்ததாக நினைவிருக்கிறது. பிற்பாடு ஏஜூக்கு வந்து நைட் ஷோக்களாக பார்த்துத் தள்ளியபோது, குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கும் லுங்கியோடே போய்வந்தேன்.

முதல் பாராவில் பாரா சொன்ன அந்த மனத்தடை எனக்கு எப்போது வந்தது என்று சரியாக நினைவில்லை. இத்தனைக்கும் லுங்கி தான் ‘எல்லாவற்றுக்குமே’ வசதியான உடையாக இருக்கிறது என்றபோதிலும், வீட்டுக்கு நூறு அடி தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்லக்கூட இப்போது ‘முழுநீளக் கொழாய்’ மாட்டிக்கொண்டு தான் போகிறேன். ஆனால் ரெண்டு, மூன்று அரை நிஜார் இருந்தாலும் (ஒன்லி ஃபார் ஸ்விம்மிங் பூல்ஸ்), லுங்கிதான் இன்னும் ஃபேவரைட் உடை. வீட்டிலிருக்கும்போது கீழாடை மட்டுமே, நோ மேலாடை.

சரி, இந்த மனத்தடைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

ஒன்று. நான் எட்டுப்பட்டிராசா மாதிரி தொடை தெரிய ஒரு காலத்தில் லுங்கியை தூக்கிக் கட்டுவேன். ‘ரவுடிப்பய மாதிரி லுங்கி கட்டுறான் பாரு!’ என்ற அப்பாவின் அப்போதைய எரிச்சல் காரணமாக இருக்கலாம், இப்போது அதுமாதிரி சொல்ல அவர் இல்லாவிட்டாலும்.

இரண்டு. லுங்கி கட்டுபவர்கள் எல்லாம் லும்பன்கள் என்று கமலா, ஐனாக்ஸ் மற்றும் சத்யம் நிர்வாகங்கள் நினைப்பது மாதிரி ஒரு பொதுப்புத்தி வெகுமக்களுக்கும் பரவலாக இருப்பதை உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருப்பது இன்னொரு காரணமாக இருக்கலாம்.

எப்படிப் போனாலும் ஒரு அற்புதமான, நிகரற்ற உடை ஒன்றினை என் மனத்தடை காரணமாக பொது இடங்களில் நிராகரிக்கிறேன் என்பதே உண்மை. தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் லுங்கி பிரபலமான ஆடையாக இருப்பதாகவே தெரிகிறது. பொதுவிடங்களில் லுங்கி கட்டி வருவதும் கூட கவுரவமான விஷயமாகவே பல நாடுகளில் இருக்கிறது. பங்களாதேஷ், இலங்கை, மியான்மர், ஏமன், சோமாலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பல தெற்காசிய நாடுகளில் லுங்கியின் பயன்பாடு பரவலாக இருக்கிறது. நம்மூரை மாதிரியில்லாமல் இந்நாடுகளில் பெண்களும் லுங்கிவாலாக்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு உடையாக மட்டுமன்றி திருமணம் போன்ற விழாக்களிலும் லுங்கியின் பயன்பாடு இருந்து வந்தது. அரை டிராயருக்கு ஏற்பட்ட மவுசால் இப்போது ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. உலகின் மிகச்சிறந்த வசதியான உடைகளில் ஒன்றாக இதை சொல்லலாம். அரை டிராயரைப் போல இதற்கு நாடாவோ, எலாஸ்டிக்கோ தேவையில்லை. தலைக்கு மேல் கவிழ்த்து, இழுத்துப் பிடித்து ஒரு சொருகு சொருகினால் போதும். நாய் துரத்தினாலும் கூட கவுரவமாக அவிழ்ந்துவிடாமல் ஓடித் தப்பிக்கலாம். டீக்கடை நாயர்கள் கட்டும் பாலியஸ்டர் லுங்கி மட்டும் விதிவிலக்கு. இடுப்பில் நிற்கவே நிற்காது.

திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பார்ட்டிவேராக லுங்கி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேஷியாவிலேயோ, மலேஷியாவிலேயோ இதை தேசிய உடையாகக் கூட அங்கீகரித்திருப்பதாக செவிவழி கேள்வி. திருப்பூர்தான் லுங்கி தயாரிப்புக்கான புண்ணிய ஷேத்திரம். இந்தியாவின் லுங்கித் தேவையில் எழுபது சதவிகிதத்தை கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் கவனித்துக் கொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

லுங்கியை இழுத்து மடித்து கட்டுவது எப்படியென்று மம்முட்டியும், மோகன்லாலும் பல படங்களில் கிளாஸே எடுத்திருக்கிறார்கள். வெயில் காலங்களில் லுங்கியை விட காற்றோட்டமான உடை ஒன்று உண்டா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பதுதான் இன்றைய நிலை.

லுங்கி எங்கே தொடங்கியது என்று வரலாற்றில் தேடிப்பார்த்தால், அதுவும் கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் தமிழோடே தோன்றியிருக்கும் என்பதாகத் தெரிகிறது. வேட்டி என்றழைக்கப்பட்ட துண்டுதான் பிற்பாடு பரிணாம வளர்ச்சியடைந்து லுங்கியாக மாறியிருக்கிறது. எனவே லுங்கியை கண்டறிந்த பெருமையும் தமிழனையே சேருகிறது.

மஸ்லின் துணியால் நேயப்பட்ட வேட்டி பாபிலோனுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகியிருக்கிறது. பாபிலோனை தொல்பொருளாராய்ந்த அறிஞர்கள் இதை ‘சிண்டு’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். மேலும் மீனவர்களான பரதவர்கள் கிழக்கு ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் மெசபடோமிய பகுதிகளுக்கு லுங்கி ஏற்றுமதி செய்ததாகவும் உலக வரலாறு செப்புகிறது. கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பே லுங்கியில் கலர்ஃபுல் டிசைன்கள் போடப்பட்டு (அனேகமாக ஆந்திரவாலாக்கள் டிமாண்ட் செய்திருக்கலாம்) தயாராகி வருகிறது.

தமிழர்கள்தான் லுங்கியை கண்டறிந்தார்கள் என்பதை இந்துத்துவா மறுக்கிறது. லுங்கியை கண்டறிந்தவர் அர்ஜூனர் என்பது இந்துத்துவாவின் வாதம். ஒருமுறை அர்ஜூனர் வில்லை எடுத்துக்கொண்டு மலைப்பாங்கான இடத்தில் உணவுக்காக வேட்டையாட அலைந்துக் கொண்டிருந்தாராம். அப்போது ஏதோ ஒரு சுனைக்கு அருகே பாறையில் சில சேலைகள் காயவைக்கப் பட்டிருந்ததாம்.

அந்த சுனையில் யாரோ பெண்கள் குளித்துக் கொண்டிருப்பார்கள் என்ற நினைத்த அர்ஜூனர், பயணத்தைத் தொடராமல் அங்கேயே சில மணி நேரம் நாகரிகமாக நின்றிருக்கிறார். யாரும் வந்து புடவைகளை எடுக்காமல் போகவே, அந்தப் புடவையை தானே எடுத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

வாசலில் குந்திதேவி கண்களை மூடி பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தாராம். அர்ஜூனனின் அரவத்தைக் கேட்டவர், ‘நீ எது எடுத்து வந்திருந்தாலும், அதை எல்லா சகோதரர்களுக்கும் சமமாகப் பகிர்ந்துக் கொடு!’ என்று சொல்லியிருக்கிறார். புடவைகளோடு வந்த அர்ஜூனனோ, தாய் சொல்லைத் தட்ட மனமின்றி தான் கொண்டு வந்தப் புடவைகளை சரிபாதியாக கிழித்து, சகோதரர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அரையும், காலுமாக கிடைத்த புடவையை இடுப்பில் சுற்றி அணிந்துக் கொண்டனர் பஞ்ச பாண்டவர்கள். லுங்கி தோன்றிய வரலாறு இதுவென்று இந்துத்துவா சொல்கிறது.

எது எப்படியோ, லுங்கி ஒரு சுவாரஸ்யமான உடை என்பதைப் போலவே, அதனுடைய பின்னணிக் கதைகளும் சுவாரஸ்யமானவையாகவே இருக்கிறது.




எழுதியவர் யுவகிருஷ்ணா
நன்றி  :http://www.luckylookonline.com/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

haa... haa...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

லுங்கி ஆராய்ச்சிக் கட்டுரை, லுங்கியின் புகழினை
எட்டுத் திக்கும் எடுத்துரைத்தது.
யுவகிருஷ்ணாவிற்கும் உங்களுக்கும் நன்றி!