Monday, July 15, 2013

மரணங்கள் எப்போதுமே மனங்களை புரட்டிப் போட்டு விடுகின்றன.

முதன் முதலில் என் வாப்பாவின் மரணம் என் மனதை மிகவும் பாதித்தது. அப்போது நான் வியாபாரம் செய்து வந்தேன்.கடையை மூடிவிட்டு வந்து உணவு உண்ட பிறகு இரவு 11 மணி இருக்கும். தம்பி சைபுல்லாஹ் வந்து என்னை அழைத்தான். வாப்பாவுக்கு லேசாக நெஞ்சு வலிப்பதுபோல் இருக்கிறது என்றான். உடனே பதறியடித்து வாப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். சிரித்துக் கொண்டேதான் வந்தார்கள். " ஒண்ணுமில்லே... லேசான வலிதான் ... ஒண்ணும் செய்யாது " என்றார்கள். " பரவாயில்லை.. போய் பார்த்துவிட்டு வந்துவிடுவோம் " என்று அழைத்துப் போனேன். எப்போதும்போல் சாதாரணமாக நடந்து வந்தே காரில் ஏறினார்கள். மருத்துவமனை சென்று பரிசோதிக்கும்போதே கடுமையான அட்டாக் வந்து மரணத்தைத் தழுவிக் கொண்டார்கள். எப்படிச்சொல்வது என் தாயாரிடம் அந்த வேதனைச்செய்தியை ? எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் அந்த சீதேவியின் முகத்தை வாட விடும் நிலையை எண்ணிக் கலங்கினேன். அண்ணன் தம்பி ஆறுபேரில் நானும் தம்பி சைபுல்லாஹ்வும்தான் ஊரில் இருந்தோம். சின்னப்பிள்ளை அவன். இருவரும் கட்டிப்பிடித்து அழுதோம். அன்று மாலை சில்க் ஜுப்பாவோடு கம்பீரமாய் தெருவில் நடந்து வந்த வாப்பாவின் மரணம் மனசை அடித்து நொறுக்கி விட்டது. மறக்க முடியுமா அந்த 1992 டிசம்பர் 26 ஐ ?

வாப்பா மரணித்து 20 நாட்கள் கழித்து ஜனவரி 16 ல் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் ஹாஷிமா .


வாப்பாவைத் தொடர்ந்து 1996ல் உம்மா ....

வீடே உலகம் என்று வாழ்ந்து கொண்டிருந்த என் அன்புத் தாயார் ஆமினா உம்மா.. உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருந்தார்கள். வெளியூர் போயிருந்த நான் ஊருக்கு வந்தேன். அது ரமலான் மாத கடைசி நாள். விடிந்தால் பெருநாள். தொழுகை முடித்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். உம்மா ரொம்ப பலஹீனமாக இருந்தார்கள். எங்களுக்கு அழுகை வந்தது. பேச முடியவில்லை. அப்போதும் அண்ணன் ஹபீபுல்லாஹ்வும் நானும் தம்பி சைபுல்லாஹ்வும்தான் ஊரில் இருந்தோம். பெருநாள் முடிந்த அதிகாலை நாலு மணி இருக்கும். உம்மா எங்களை விட்டுப் பிரிந்து விட்டார்கள். வாழ்க்கையில் அடிபட்டு மிதிபட்டு கைசேதமாகி நின்று கொண்டிருந்த எனக்கு எல்லாமுமாக இருந்த என் உம்மா என்னை விட்டும் போய் விட்டாள். அழுகையே என்னைக் கொன்று விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அழுதேன். புகை பிடிக்கும் வழக்கம் எனக்கு உண்டு. அழுகையை அடக்குவதற்காக சிகரெட் பிடித்தேன். அண்ணன் முன்னால் அப்படி நான் புகை பிடித்ததே இல்லை. அன்று என் நிலையை பார்த்து அவரே புகை பிடிக்கச் சொன்னார். மனசு அற்றுப்போய் விட்ட ஒரு அனாதையாக நான் என்னை உணர்ந்தேன்.

மனசு ரணமாகி இருந்தாலும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. 1998 ரமலான் மாதம். என் மூன்றாவது குழந்தை ஹாஷிமா. இரண்டாவது குழந்தை பிறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு பிறந்த செல்லம். "வாப்பா ... வாப்பா.." என்று அப்படியொரு பாசம் என்மீது. அது என் உயிரா?உணர்வா ? எப்படியென்றே சொல்லத் தெரியாத ஒரு அற்புதமான பாசம் எனக்கு என் பிள்ளையின் மீதும் என் பிள்ளைக்கு என் மீதும். கண்மணிபோல் இருக்கும். சிரித்தால் நட்சத்திரம்போல் ஒளிரும். என் மனசின் மறுபதிப்பு என் கண்மணி. செத்துப்போன என் வாழ்க்கையின் வசந்தமே என் அன்பு மகள்தான். ஆறு வயது முடியும் தருவாயில் என் கண்மணிக்கு திடீரென்று ஒரு காய்ச்சல் வந்தது. முதல் பிறையில் பிள்ளைக்கு லேசான காய்ச்சல். ஆஸ்பத்திரியில் காட்டினோம். அதன் பிறகும் குறையாததால் மருத்துவமனையில் அட்மிட்டானோம். ரமலான் பிறை 7 . இன்று இரவு. கிட்டத்தட்ட இதேநேரம் என் கண்மணி துடிக்கத் துடிக்க என்னை விட்டுப் போய் விட்டது. மூளைக் காய்ச்சலாம். fits ... அப்படியொரு கொடுமையை நான் எப்போதும் கண்டதில்லை. " யா அல்லாஹ்... என் உயிரை எடுத்துக் கொண்டு என் பிள்ளையை காப்பாற்று.." என்று அழுதேன். அழுதேன்...அழுதேன்... இன்றுவரை அழுதுகொண்டேதான் இருக்கிறேன். இதையும் கண்ணீரால்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதுவரை நம்ப முடியவில்லை... என் கண்மணி "இல்லை"என்று. அந்த இழப்பும் டிசம்பர் 26 தான்.

அதன்பிறகு எந்தச் சலனமும் இல்லாமல் ஒரு வருடம் வாழ்ந்தேன்.... ஏகதேசம் ஒரு பைத்தியக்காரனைப்போல.... மனசுக்குள் சில மாற்றம். எழுத ஆரம்பித்தேன்.

" அண்ணலே யா ரஸூலல்லாஹ் " என்று நபிகளாரின் வரலாற்றுக் காவியத்தை நான் எழுதினேன். முடிவில் ரஸூலுல்லாஹ்வின் வபாத் அத்தியாயத்தை எழுத முடியாமல் பல நாட்கள் அழுதேன். அதன் பிறகும் அழுதுகொண்டேதான் அதை எழுதி முடித்தேன்.

இப்படி ... மரணங்களால் மரணித்துப்போன மனிதன் நான்.

இப்போது சிரிப்பதும்..சினப்பதும்...பற்று இருப்பதுபோல் வாழ்வதும் என்னையே மறந்து நான் வாழும் ஒரு அவலம்.

ஆனாலும் காத்திருக்கிறேன் ....ஒரு நாளை எதிர்பார்த்து...

அதுவரை நல்லதைச் செய்வோம் என்ற நம்பிக்கையோடு என் அன்பு நண்பர்களோடு இதை பகிர்ந்து கொள்கிறேன்...

தயவு செய்து யாரும் ஆறுதல் கூற வேண்டாம்.

என் வலிகள் எனக்கு இன்பம்... அது வேண்டும் எனக்கு ! நான் மரணிக்கும் வரை !

அபூஹாஷிமாவாவர்
Abu Haashima Vaver
 
 
 
 

No comments: