Friday, July 12, 2013

969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்! - இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.

அமைதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர் போனது புத்தமதம்.
ஆனால் புத்தனின் பெயரால் பவுத்த தேசியவாதிகள் மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்...


 மியான்மர் பவுத்த சன்னியாசிகள் தேர்ந்தெடுத்திருக்கும் எண் 969. பவுத்தத்தின் அடிப்படையான மூன்று ரத்தினங்களை (three jewels : புத்தர், தர்மம், சங்கம்) இந்த எண் குறிக்கிறது என்கிறார்கள். இந்த எண்ணை பெயராக கொண்டு மியான்மரில் தொடங்கப்பட்ட 969 இயக்கத்துக்கு உள்நாட்டில் மெஜாரிட்டியான பவுத்தர்களிடையே பலத்த ஆதரவு. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த இயக்கத்தை புதிய நாஜிக்குழு என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.

பவுத்த தத்துவங்களை பரப்பும் அமைதி அமைப்பு என்று 969 தன்னை சொல்லிக் கொண்டாலும், அஸின் விராத்து என்னும் பவுத்தத் துறவி இவ்வியக்கத்தில் ஈடுபட்டதில் இருந்தே இதன் பாதை வன்முறைக்கு திரும்பியிருக்கிறது. 1968ல் பிறந்த விராத்து பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு துறவியானார். 2001லிருந்து 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வன்முறைக்கு வித்திடும் அவரது பிரச்சாரங்களின் பேரில் 2003ல் கைது செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் 2010ஆம் ஆண்டே அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்படும் போது இவரும் சேர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். வெளியே வந்தவர் சும்மா இல்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவுகளை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் 969 இயக்கம் மூலமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை உலகம் முழுக்க பரவலாக பரப்பினார்.விராத்துவின் விபரீத கருத்துகள்

· நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக்கொண்டு தூங்க முடியாது.

· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்

· கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக பவுத்த-இஸ்லாமிய கலப்பு.

· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.

· மதமும், இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.

· இஸ்லாமியரின் கடைகளில் எந்த பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.
மியான்மர் அதிபர் தைன் சைன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வினோதமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அங்கே வசிக்கும் வங்காளர்களை (பங்களாதேஷ் பிரச்சினையின் போது மியான்மருக்கு இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்) நாடு கடத்துவதுதான் அவரது திட்டம். இதை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக 969 இயக்கம் மூலமாக புத்த துறவிகளை திரட்டி மாபெரும் பேரணி ஒன்றினை நடத்தினார் விராத்து. இதன் விளைவாக அடுத்த சில நாட்களில் ராக்கின் மாகாணத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இரு சமூகத்தினரிடையே பகை நீறுபூத்த நெருப்பாக கனன்றுக் கொண்டே இருந்தது. விளைவாக கடந்த மார்ச் மாதம் ஒரு பவுத்த துறவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். வெடித்தது வன்முறை வெடிகுண்டு. மேலும் பதினான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்லாமியர்களின் கடை, வீடு மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டன. தீக்கிரையாயின. 969 தூண்டிவிடும் வன்முறையால் ராக்கின் மாகாணத்தில் மட்டுமே கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட இருநூறு இஸ்லாமியர் கொல்லப்பட்டு விட்டனர். உறவுகளை, உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அகதிமுகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யாரும் சந்திக்க விடாமல் மியான்மர் அரசாங்கம் அராஜகம் செய்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மெஜாரிட்டியான பவுத்தர்களின் ஆதரவோடு, சிங்கள அரசு 2009ல் விடுதலைப்புலிகளை மொத்தமாக துடைத்தெடுத்து வீழ்த்தியதற்குப் பிறகே ‘பவுத்த தேசியம்’ என்கிற கருத்துருவாக்கம் மியான்மரில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. காவல்துறையாலோ, அரசாலோ தங்களுக்கு எந்த பாதுகாப்புமில்லை என்று இஸ்லாமியர்கள் அச்சப்படுகிறார்கள். மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் பல இஸ்லாமிய தொழிலதிபர்கள் ஏற்கனவே பறந்துவிட்டார்கள்.
இச்சூழல்களை கருத்தில் கொண்டு கடந்த மாதம் ‘டைம்’ பத்திரிகை 969 தலைவரான விராத்துவின் படத்தை அட்டையில் இட்டு ‘பவுத்த பயங்கரவாதத்தின் முகம்’ என்று தீவிரமான விமர்சனத்தை வைத்தது. பர்மாவின் பின்லேடன் என்றும் இவரை சுட்டிக் காட்டியிருக்கிறது. இக்கட்டுரையை தொடர்ந்து ‘டைம்’ பத்திரிகைக்கு மியான்மரில் இப்போது தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மரின் அதிபர் தைன் சைன் 969 இயக்கத்துக்கு ஆதரவாகவே இருக்கிறார். குறிப்பாக விராத்துவை பாதுகாக்கிறார். அரசால் அனுமதிக்கப்பட்ட வன்முறையாகவே இன்றுவரை இது நீடிக்கிறது. சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலைகளை மிஞ்சும் வகையிலான வெறியாட்டம் மியான்மரில் நிகழக்கூடும். அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த இனவன்முறையை கண்டிக்காமல் கள்ளமவுனம் சாதிக்கிறார் என்று வருத்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் நடுநிலையாளர்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

எழுதியவர் யுவகிருஷ்ணா

Source : http://www.luckylookonline.com/
யுவகிருஷ்ணா பற்றி அறிய இங்கு சொடுக்குங்கள்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails