Friday, March 4, 2011

பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க எஸ் க்யூப்!

நீங்களும், உங்கள் துணைவியாரும் காலையிலேயே உங்கள் குழந்தையை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு பணிக்குச் சென்று விடுகிறீர்கள். குழந்தை ஒழுங்காக பள்ளிக்குச் சென்று சேர்ந்ததா, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டதா? என்கிற அச்சம் அடிக்கடி அடிவயிற்றிலிருந்து பந்தாக எழும்பி நெஞ்சுக்கு வரும் அல்லவா?

அண்மையில் கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு அடிக்கடி இந்த அச்சம் எழும்புவதுண்டு.

பெற்றோர்களுக்கு உதவும் வண்ணம் 'பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?' என்கிற அட்டைப்படக் கட்டுரையை, நவம்பர் 18, 2010 இதழில் புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அக்கட்டுரையில் நாம் சில தீர்வுகளையும், காவல்துறையின் யோசனைகளையும், அரசு சொல்லும் வழிமுறைகளையும் குறிப்பிட்டிருந்தோம்.

அந்தக் கட்டுரையை வாசித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பிரசன்னபாபு, மென்பொருள் வாயிலாக ஒரு நல்ல தீர்வினைக் கண்டிருக்கிறார். இருபத்தாறு வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான பிரசன்னபாபு, சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார்.

தனது மென்பொருள் கண்டுபிடிப்புக்கு எஸ் க்யூப் (Student Security System) என்று பெயரிட்டிருக்கிறார். இரவு, பகல் பாராத மூன்றுமாத உழைப்பிற்குப் பிறகு இது சாத்தியமாகியிருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் உங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் குறுஞ்செய்திகளாக (SMS) பெற்றோரின் கைப்பேசிக்கு எஸ் க்யூப் அனுப்பி வைக்கும்.

எஸ் க்யூப் எப்படி பணியாற்றும்?

- பள்ளி வேனோ அல்லது பேருந்தோ குழந்தைகளை ஏற்றிச் செல்ல காலையில் பள்ளி வளாகத்தில் இருந்து கிளம்பும்போது பெற்றோருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். இதில் சம்பந்தப்பட்ட வேன்/பஸ்ஸின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், உங்கள் வீட்டுக்கு அருகில் எத்தனை மணிக்கு வரும் போன்ற செய்திகள் அடங்கியிருக்கும்.

- பள்ளியில் முதல் பாட நேரத்தில் அட்டெண்டன்ஸ் எடுக்கப்பட்டவுடனேயே, உங்கள் குழந்தை வகுப்பறையை அடைந்துவிட்டது குறித்த குறுஞ்செய்தி ஒன்று வரும். ஒருவேளை குழந்தை விடுப்பு எடுத்திருந்தாலும், அதுவும் குறுஞ்செய்தியாக பெற்றோருக்கு கிடைக்கும்.

- காலையில் முதல் பாட வகுப்புக்கு வந்த குழந்தை, மதியம் உணவு நேரத்திற்குப் பிறகான பாட வகுப்புக்கு வந்திருக்காவிட்டால், பெற்றோர், ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு உடனே குறுஞ்செய்தி சென்றுவிடும்.

- மாலையில் பள்ளி முடிந்து வேனிலோ, பஸ்ஸிலோ குழந்தை ஏறியவுடன் காலையில் வந்ததைப் போன்றே வாகனத்தின் பதிவு எண், ஓட்டுனர் பெயர், உங்கள் வீட்டுக்கு வாகனம் வந்தடையும் நேரம் ஆகியவை குறுஞ்செய்தியாக வந்து சேர்ந்துவிடும்.
- மாலைநேரத்தில் பள்ளியில் சிறப்பு வகுப்பு (Special Class) ஏதேனிலும் குழந்தை கலந்துகொண்டால், அதுகுறித்த அறிவிப்பும் கிடைத்துவிடும்.

- குழந்தையின் பள்ளி தொடர்பான அசைவு ஒவ்வொன்றும், உங்கள் கைப்பேசிக்கே வந்துவிடுவதால் நீங்கள் நிம்மதியாக உங்கள் பணியினை பார்க்க இயலும். இந்த நடைமுறையில் எங்காவது 'ஓட்டை' விழுந்திருந்தாலும், உடனடியாக தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க இயலும்.

இந்த ஏற்பாடு பள்ளியை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே பாதகமானது.

இந்த திட்டத்தை செயல்படுத்த என்னென்ன தேவை?

பள்ளியில் இணைய வசதியோடு கூடிய கணினிகள் இருப்பது அவசியம். ஒவ்வொரு வகுப்பறைக்கும் இல்லாவிட்டாலும், தலைமை ஆசிரியரின் அறையில் மட்டுமாவது இருந்தால் போதும். அட்டெண்டன்ஸ் விவரங்கள் கணினியில் ஒருவரால் மிகச்சுலபமான முறையில் ஏற்றப்பட வேண்டும். அதுபோலவே பள்ளி வளாகத்திலிருந்து கிளம்பும் வேன்/பஸ் விவரங்களையும் கணினிக்கு அளிக்க வேண்டும்.

ஆயிரம் மாணவ/மாணவியர் படிக்கும் பள்ளியில் இந்த மென்பொருளை நிறுவ தோராயமாக 50,000 ரூபாய் செலவாகும். அதன்பிறகு வருடாவருடம் 10,000 ரூபாய் செலவழித்தால் போதும். பராமரிப்பு, கண்காணிப்புச் செலவுகள் மிக மிகக்குறைவாகவே ஆகும். குழந்தைகளின் பாதுகாப்பு என்று எடுத்துக் கொள்ளும்போது, கல்வியில் புழங்கும் பண பரிவர்த்தனைகளை ஒப்பிடும்போது இந்தச் செலவு ஒரு சதவிகிதம் கூட இருக்காது.

எப்படி செயல்படுத்தலாம்?

தங்கள் மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள, ஆர்வமுள்ள பள்ளிகள் தாமாக முன்வந்துச் செய்யலாம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கு, இந்த ஏற்பாட்டினை நிறுவித்தரச் சொல்லி கேட்கலாம்.
அரசே மாநிலம் தழுவிய அளவில் அரசுப்பள்ளிகளில் இந்த வசதியை ஏற்படுத்தலாம். தனியார் பள்ளிகளிலும் இம்முறையை கட்டாயமாக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம்.

இந்த எஸ் க்யூப் தொழில்நுட்பத்தை எப்படி வேண்டுமானாலும், ஒவ்வொரு பள்ளிக்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். உறைவிடப் பள்ளிகளுக்கும் ஏற்றதுபோலவும் செய்துத் தரலாம். உதாரணத்துக்கு உங்கள் குழந்தை ஊட்டியில் ஓர் உறைவிடப் பள்ளியில் படிப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் லண்டனிலோ, நியூயார்க்கிலோ இருந்தாலும், உங்கள் குழந்தையின் பள்ளி நடவடிக்கைகள் குறுஞ்செய்திகளாக உங்களுக்கு வந்து சேரும்.

"ஒவ்வொரு சமூகப் பிரச்சினைக்குமே ஏதாவது ஒரு தீர்வினை யோசித்துப் பார்ப்பது எனது வழக்கம். புதிய தலைமுறையில் இந்தப் பிரச்சினையைப் பற்றி வாசித்ததுமே, நான் புழங்கும் துறைசார்ந்த அறிவின் மூலமாக என்ன செய்யமுடியும் என்று யோசித்தே, இதற்கான தீர்வு காணும் முயற்சியில் இறங்கினேன். மூன்று மாத கடின உழைப்புக்குப் பின், இப்போது இந்த மென்பொருள் உடனடியாக எந்தப் பள்ளியிலும் நிறுவக்கூடிய நிலையில் தயாராக இருக்கிறது" என்கிறார் பிரசன்னபாபு.

ஓய்வு பெற்றுவிட்ட தந்தை, படித்துக் கொண்டிருக்கும் தம்பி என்கிற குடும்பச்சூழலில் இவர் மட்டுமே இப்போது இவரது குடும்பத்தில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் உறுப்பினர். எனவே அவருடைய பணியைப் பாதிக்காத அளவில் பகலில் அலுவலகத்துக்குச் சென்று, இரவுகளிலும், ஓய்வுநேரங்களிலும் இத்திட்டம் குறித்த ஆராய்ச்சிகளிலும், முன்னெடுப்புகளிலும் தனது உழைப்பினைச் செலுத்தியிருக்கிறார்.

ஊடகத்தில் சுட்டப்பட்ட ஒரு செய்தியை வாசித்தோம், அறிந்தோம் என்று வெறுமனே வாசிப்பளவில் நின்றுவிடாமல் நமது வாசகர்கள், தீர்வுக்காகவும் நம்முடன் கைகோர்க்கிறார்கள். பிரசன்னபாபு போன்ற இளைஞர்கள்தான் புதிய தலைமுறையின் அடையாளம்.

பிரசன்னபாபுவை தொடர்புகொள்ள : prasanakpm84@gmail.com

(நன்றி : புதிய தலைமுறை)

No comments: