இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது ஸல் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இறைத்தூதர் முஹம்மது ஸல் அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல் ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து "மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது "கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, "பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி ஸல் அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். நபி அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது. கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)
" நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' ஸுனன் இப்னு மாஜா 1892,1893)
" ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
"ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
