Showing posts with label முஸ்லிம் பெண்கள். Show all posts
Showing posts with label முஸ்லிம் பெண்கள். Show all posts

Friday, August 31, 2012

முஸ்லிம் பெண்கள் ஏன் கல்வியில் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள்?


இஸ்லாம் என்பது மதப் பிரச்சாரத்தில்தான் இருக்கிறது என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் மதப்பிரச்சாரம் செய்தால் நமக்கு ஆயிரம் நன்மைகள் கோடி நன்மைகள் என்று வந்து குவியும் இறைவன் நம்மை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கிறார்கள்.

இறைவன் மனிதர்களின் உயர்வினையே நிச்சயமாக விரும்புவான். தன்னை, தன் உறவுகளை, தன் சமுதாயத்தை உயர்த்துவதற்கு எவன் ஒருவன் பாடுபடுகிறானோ அதற்கான வெகுமதியாகத்தான் அவனை சொர்க்கத்துக்கு அழைத்துக்கொள்வான்.

இறை நம்பிக்கை கொள்வது, தொழுவது, நோன்பு நோற்பது, ஈகை அளிப்பது, ஹஜ் என்னும் புனிதப்பயணம் செல்வது என்ற ஐந்து கடமைகளை மட்டும் செய்துவிட்டால் போதும் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் சிலர்.

தன் முன்னேற்றம், தன் உறவுகளின் முன்னேற்றம், தன் சமுதாய முன்னேற்றம், பொது மக்கள் முன்னேற்றம், உயர் கல்வி, அறிவுடைமை, பெண் விடுதலை, முற்போக்கு எண்ணங்கள் போன்று எந்த முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதைச் செய்யாது சிலர் இருந்துவிடுகிறார்கள்.

அப்படியாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோர் சொர்க்கம் செல்வது இயலுமா? உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் என்ற காரணம் அலசப்படவேண்டும்.

ஒன்றை நாம் துவக்கத்திலேயே அறிந்துகொள்ள வேண்டும். ஆரம்பக் காலங்களில் உலகில் முஸ்லிம்கள் என்றில்லை எந்தப் பெண்ணுமே கற்றவளாய் இல்லை. அப்படி கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தாள். பின் ஒவ்வொரு சமுதாயமாக முன்னேறியது. ஆனால் முஸ்லிம் பெண்களோ இதில் கடை நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள். 18 வயதைத் தாண்டிவிட்டால் மாப்பிள்ளை கிடைக்காது என்று அறிவில்லாமல் கவலைப்படுகிறார்கள். அவசியமே இல்லாமல் பயத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தது, குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. 24 மணி நேரமும் பிள்ளைகளோடு போரடும் வாழ்வையே பெண்கள் பெறுகிறார்கள். ஏன் இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு அவதிபடுகிறீர்கள் என்றால் இறைவன் கொடுத்தான் என்று பொறுப்பில்லாமல் சிலர் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.

பல வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.