Monday, May 30, 2022

எனது இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கோவை இலக்கிய வட்ட நிகழ்வாக நேற்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.

 



நிஷா மன்சூர்

 

  ·எனது இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கோவை இலக்கிய வட்ட நிகழ்வாக நேற்று மிகச்சிறப்பாக நடந்தேறியது. தோழர்கள் இளஞ்சேரல்,இளவேனில் ஆகியோர் மிக நேர்த்தியாக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். சாஜிதா மன்சூர் கவிதை நூலை வெளியிட மரியம் ஜமாலியா பெற்றுக்கொண்டார்.லஷ்மி சரவணக்குமார் கட்டுரை நூலை வெளியிட முனைவர் மஞ்சுளாதேவி பெற்றுக்கொண்டார்.

நண்பர் அமுதன் இஸ்மாயீல் Amuthan Ismail   கவிதைகள் குறித்த அழுத்தமான ஆழமான நிதானமான உரையை நிகழ்த்தினார்.கவிதைகளுக்குள் ஒலிக்கும் கவிஞனின் இதயத்துடிப்பை உணரும் நுண்செவித்திறன் கொண்ட வாசிப்பு அவருடையது.பின்னர் பேசவந்த தோழர் Kareem Aak  கரீம் கட்டுரை நூல் குறித்த விரிவான அலசலை மேற்கொண்டார். பல கட்டுரைகளையும் முழுமையாக வாசித்து உள்வாங்கிக் கொண்டதன் உழைப்பு அவரது உரையில் வெளிப்பட்டது.முக்கியமான பல குறிப்புகளை மேற்கோள் காட்டி அடிக்கோடிட்ட வரிகளை வாசித்தும் காட்டிய நிறைவான உரை அவருடையது.


அடுத்ததாக முனைவர் மஞ்சுளாதேவி Manjula Devi  கவிதைகள் குறித்து அவருக்கே உரிய கொங்கு மண்ணின் பிரத்யேக மொழியில் பேசி அழகான மேற்கோள்கள் காட்டி அரங்கத்தைக் கலகலப்பாக்கினார். பிறகு அழுத்தமான மேற்கோள்களுடனும் லியோ தால்ஸ்தாயின் வாழ்வியல் உதாரணங்களுடனும் கட்டுரை நூல் குறித்த நுணுக்கமான ஆய்வுரையை நிகழ்த்தினார் தோழர் Lakshmi Saravanakumar  லஷ்மி சரவணக்குமார். குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா குறித்த ஆய்வுக்கட்டுரையையும் ரூமி மெளலானாவின் ஆக்கங்கள்/ செயல்பாடுகள் மற்றும் மொழிபெயர்ப்பின் நுண்ணரசியல் பற்றியுமான தெளிவான ஆய்வுரையாக இருந்தது அந்த உரை.

நண்பர் மஃஷூக் ரஹ்மான் Mashook Rahman  கவிதைகளுக்குள் பொதிந்திருக்கும் ஞானக்குறிப்புகள் பற்றிய உரையை சூஃபி நோக்கில் நிகழ்த்தினார். அடுத்து கட்டுரைநூல் குறித்து பேச வந்த ஆய்வாளர் மீரா, Meera  கட்டுரைகளின் சாரமாக விளங்கும்  மூன்று முக்கிய மையப்புள்ளிகளை முன்னிறுத்தி அழுத்தமான கருத்துகளைத் தெரிவித்தார். இறுதியாக கவிஞர் அய்யப்பமாதவன் கலகலப்பாக உரையாற்றி அரங்கத்தை புன்னகையில் ஆழ்த்தினார்.

அனைவரையும் பசி கிள்ள ஆரம்பித்த உச்சிப்பொழுதில் ஏற்புரை ஆற்ற வந்த நான் நேரம் கருதி ரத்தினச் சுருக்கமாக நன்றியுரையாக என்னுரையை முடித்துக் கொண்டேன். மூத்த பேராசிரியரும் விமர்சகருமான .ராமசாமி அவர்கள் முழு நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்தார். நாவலாசிரியர் நாராயணி கண்ணகி அண்ணன் துணைவியாருடன் வந்து கலந்துகொண்டு அரங்கிற்கு அழகு சேர்த்தார். இன்னும் ரியாத் தமிழ்ச்சங்கம் ஷேக்முகமது,"இன்ஷா அல்லாஹ்" திரைப்படத் தயாரிப்பாளர் சாஹுல் ஹமீது,நாவலாசிரியர் ஃபிர்தெளஸ் ராஜகுமாரன்,எழுத்தாளர் அகிலா புகழ்,தோழர் ஒடியன் லட்சுமணன், சிறுகதை ஆசிரியர் முஸ்தாக் அகமது, ஓவியர் சலீம் , தோழர் செந்தில்குமார் பாலுசாமி உள்ளிட்ட நண்பர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

கொலுசு இதழ் குறித்த அறிமுக உரை ஆற்றப்பட்டபின் பொள்ளாச்சி பூபாலன் நன்றியுரை வழங்க,விழா இனிதே நிறைவுற்றது. வழமைபோல நிகழ்வுக்குப் பின்னரும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நண்பர்களின் அளவளாவலும் ஃபோட்டோஷூட்டும் களைகட்டியிருந்தது. மொத்தத்தில் அனைவருக்கும் முழுமையான மனநிறைவளித்த கூடலாக அமைந்திருந்தது நேற்றைய நிகழ்வு. என் பிள்ளைகள் மூவரையும் மொத்த பங்களிப்பாளர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். பலரும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டதால் நிகழ்வினை அழகிய கொண்டாட்டமாக உணர முடிந்தது.

இன்னொரு முக்கியமான அம்சம் என்னவெனில் உரை நிகழ்த்த வந்த அனைவரும் முழுமையாக நூல்களை வாசித்து நிறைய குறிப்புகளுடனும் முன் தயாரிப்புடனும் வந்திருந்தார்கள். பொதுவாக இலக்கியக் கூட்டங்களில் புத்தகங்களை வாசிக்காமலேயே முதல் பக்கத்தில் ஒரு வரியையும் கடைசி பக்கத்தில் ஒரு வரியையும் மேற்கோள் காட்டி "நூலாசிரியர் நல்லவரு,வல்லவரு எனக்கு பிரியாணியெல்லாம் வாங்கித்தருவாரு, எனக்கு அவரை இத்தனை வருடங்களாகத் தெரியும் " என்றவாறு மய்ய்யமாக உரை நிகழ்த்தும் விடைபெறும் இலக்கிய ஆர்வலர்களுக்கு மத்தியில் முழு அர்ப்பணிப்புடன் வாசித்து முறையான தரவுகளுடன் அனைவரும் உரை நிகழ்த்தினார்கள். ஓரிரு நாட்களில் வீடியோ இணைப்பு வெளியிடப்படும்போது அதனை நீங்களும் அனுபவித்து உணரலாம்.

அனைவருக்கும் என் அன்பும் நன்றியும் 💙💙💙

#நிஷாமன்சூர்

No comments: