Monday, December 31, 2018

புத்தாண்டே வருக புதுப்பொலிவைத் தருக

புத்தாண்டே வருக
புதுப்பொலிவைத் தருக

புதியதொரு ஆண்டு
பிறக்கட்டும் நாளை
சந்தோஷக் கதவுகளைத்
திறக்கட்டும் காலை

மக்களை நேசிக்கும் அரசு
நாட்டில் மலரட்டும்
மணக்காத மலர்களெல்லாம்
மண்ணில் வாடி உலரட்டும்


மாட்டைக் காட்டி
மனிதனைக் கொல்லும் நாடு
இனி வேண்டாம் என்று
புதிய கீதம் பாடு

இன மதிப்பும் பணமதிப்பும்
கூடிக்கொண்டே போகின்ற
புதிய ஆண்டு பிறக்கட்டும்
சுதந்திரக் கதவுகள் திறக்கட்டும்

சிறுமிகளைக் குறிவைக்கும்
சிந்தனைகள் அத்தனையும்
அடுத்து வரும் புத்தாண்டில்
அழுகி நாறிப்போகட்டும்

அப்பாவி மக்களது
அழகான நெற்றிகளை
துப்பாக்கியால் துளைத்திட்ட
துஷ்டர்கள் தொலையட்டும்

ஆடு நனைவதற்காக
அழுகின்ற ஓநாய்கள்
அடுத்து வரும் ஆண்டுதனில்
அழிந்தொழிந்து போகட்டும்

மக்களது வரிப்பணத்தில்
மானங்கெட்டுப் பறக்கின்ற
தருதலைகள் வீழட்டும்
தலைதெறிக்க ஓடட்டும்

கோடிக்கணக்கில் கடன் வாங்கி
ஓடிப்போய் வெளிநாட்டில்
ஒளிந்துகொள்ளும் முதலைகள்
ஒருசேர ஒழியட்டும்

இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என
சிந்தனைகள் வேறுபட்டாலும்
சிந்துவின் மக்கள் யாரும்
சகோதரர்களே என
சேர்த்திடட்டும் புத்தாண்டு

வந்துபோன வேதனைகளை
மறந்திடுவோம்
சாதனையின் கதவுகளைத்
திறந்திடுவோம்

Nagore Rumi

No comments: