Friday, August 22, 2014

சூரியன் பண்பலை நடத்திய வைரத்தின் நிழல்கள் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
என்ன சொல்லி விழுகிறது
ஏன்
ஆயிரம் கண்களால் அழுகிறது ?

கருக்கொண்ட முகிலின்
கதவுடைத்த
குறைப் பிரசவக் குழந்தையா ?

மேகத் தொட்டிலில்
புரண்டு படுக்கையில்
தவறி விழுந்த மழலையா ?

ஒருவேளை,
புகுந்தவீட்டுப் பயத்தில்
தாவித் தவிக்கும்
தளிர் பருவக் குமரியோ ?

ஈரம் கசியக் கசிய
என்னதான் சொல்கிறது மழை ?

குதித்தாகி விட்டது
கால்களை எங்கே மிதிப்பதெனும்
குழப்பம் அதற்கு. !

அதோ
காகிதக் கப்பலோடுக் காத்திருக்கும்
அந்த ஹைக்கூக் கவிதையின்
முதலெழுத்தாகவா ?

வற்றிக்கொண்டிருக்கும்
வைகையாற்றின்
வயிற்றுப் பகுதியிலா?

ஒற்றைக்காலோடு பூமியைப்
பற்றிக்கொண்டிருக்கும்
பச்சைப் புற்களின்
புன்னகைப் பற்களிலா ?

சட சடச் சங்கீத்தை
எனக்குள்
சுடச் சுடச் திணிக்கும்
இலைகளின் தலைகளிலா ?

வற்றாக்கடலின் ஓரத்தில்
ஒற்றைப்பாறையின் பல்லிடுக்கில்
சிங்கார வாய்திறந்து காத்திருக்கும்
அந்த சின்ன சிப்பியின் தாகத்திலா ?

இதழ்களின் இடைவெளியிலும்
கவிதை எழுதிக் காத்திருக்கும்
அந்த
வாசனைப் பூக்களின்
மகரந்த மடியினிலா ?

மரங்களும் மலைகளும்
மேகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்
அந்த
கானக சாலையிலா ?

குழப்பத்தின் கண்ணி வெடியில்
துளித்துளியாய்
சிதறுகிறது மழை !

போதி அடியில்
ஞானம் கண்ட புத்தனைப் போல,
பாதி வழியில்
ஞானம் கொண்டது மழை !

நான் விழுந்து நீங்கள்
நனைந்தது போதும்,
எனில் வீழ்ந்து
நானே நனைய வேண்டும்.

தயவுசெய்துக் காட்டுங்கள்
வயலுக்குள் உயிரைநட்டு
உயிருக்குள்
என் வருகைக்குக் காத்திருக்கும்
ஓர் விவசாயி நண்பனை

அங்கே வீழ்வேன்.
அங்கே எழுவேன் !
வேரில் விழுவேன், வேறாய் எழுவேன்.


Joseph Xavier Dasaian Tbb
மிக்க அன்புடன், சேவியர்.


2 comments:

Anonymous said...

நன்றி சகோதரரே...

அன்புடன்
சேவியர்

mohamedali jinnah said...

@ சேவியர்
உங்களால் நான் மக்களுக்கு அறியப் படுகின்றேன் .அனைத்தும் இறைவன் நாட்டம் .அனைத்து புகழும் இறைவனுக்கே .நன்றி .வாழ்த்துகள் .அன்புடன்