Wednesday, September 23, 2009

"ஏன் இஸ்லாம்?"கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம்

"ஏன் இஸ்லாம்?"கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம்




Why Islam?பலவித விளம்பரப் பலகைகளைக் கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, "ஏன் இஸ்லாம்?" என்பதாகும். ஆங்கிலத்தில் ”Why Islam?" என்று சட்டெனச் சுண்டியிழுக்கும் விளம்பரம். பே ஏரியா (Bay area) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள சான் ஓசே, சான்டா க்ளாரா, கன்கார்ட் நகரங்களில், பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் என அங்கெங்கெனாதவாறு கலிஃபோர்னியாவில் எங்கெங்கும்  திடீரெனத் தோன்றியுள்ள ”ஏன் இஸ்லாம்?” எனும் விளம்பரப் போஸ்டர்கள், இலவசக் குர்ஆன் பிரதிகள் அளிக்கப்படுவது பற்றியும் இஸ்லாமிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் கட்டணமற்ற தொலைபேசி (டோல் ஃப்ரீ) எண் பற்றியும் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய செப்டம்பர் 11, நிகழ்வுக்கு ஓராண்டுக்கும் முன்பாகவே இந்த விளம்பரப் பலகைத் தி்ட்டம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தாரிக் அமானுல்லா, உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்து போனது ஒரு வினோத முரண்.

இந்த விளம்பரத் திட்டத்தின் எளிய செய்தி, "இஸ்லாம் என்பது மக்களைக் கொல்லும் தீவிரவாதம் அல்ல; ஆனால் அவர்களின் உயர்வுக்கான மார்க்கம்".


Why Islam travelsஅமெரிக்காவில் முழு வீச்சாய் இஸ்லாமியப் பணியாற்றி வரும் அமைப்பு ICNA (Islamic Community of North America). ”ஏன் இஸ்லாம்?” எனும் இந்தத் திட்டத்திற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்று ஆதரவளித்து வருகிறது. இதன் பே ஏரியா கிளையின் வெளித்தொடர்பு செயலாளர் அஹ்மத் கலீலுக்கு 30 வயது. "செப்டம்பர் 11 நிகழ்விற்குப் பின், இங்கு இஸ்லாம் என்பது 'சாந்தி'க்கு எதிர்மறையான தீவிரவாதமாகப் பார்க்க ஆரம்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும்.  மக்கள் முஸ்லிம்களைக் கடின உழைப்பாளிகளாகவும் அமைதி விரும்பும் குடும்பஸ்தர்களாகவும் உணர வைக்க இந்தத் திட்டம் பயன்படும்" எனும் கருத்துப்பட கூறியுள்ளார்.


நியூ ஜெர்சியிலுள்ள இந்த அமைப்பின் தொலைபேசித் தகவல் மையத்தில் பணியாற்றும் தொண்டர் அஷ்ஃபாக் பார்க்கர், "யூதர்கள், கிறி்த்தவர்கள்போல் நாங்களும் ரமளானில் நோன்பு நோற்கிறோம். இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தவர் என்ற அடிப்படையில் அவர்களிடமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை வளர்க்க முயல வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” எனறார்.

அதற்கேற்ப சான் ஓஸே 880 தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை, ”இஸ்லாம் என்பது ஆபிரகாம், மோஸஸ், ஈசா மற்றும் முஹம்மது நபியின் பிரச்சாரத்தின்படி அமைந்த மார்க்கம்தான்” என்று அறிவிக்கிறது. கலிஃபோர்னியாவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களும் அதிகம் ஆதலால், சில பலகைகள் ஸ்பானிஷ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவி இந்த விளம்பரப் பலகை நிர்மாணத்திற்கு உதவுகின்றது. சிகாக்கோ, ஹுஸ்டன், பிலடெல்ஃபியா, பாஸ்டன், ஃப்ளோரிடா ஆகிய மாநிலங்களின் நெடுஞ்சாலைகளிலெல்லாம் இந்த விளம்பரம் பரவி வருகிறது. நெடுஞ்சாலைகளிலுள்ள பெரிய விளம்பரப் பலகைகள் அமைக்க ஒவ்வொன்றும் 1,000 முதல் 5000 டாலர்கள் வரையும், சிறிய விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 முதல் 500 டாலர்கள் வரையும் செலவாவதாய்த் தெரிகிறது.

"இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும்
1-877-WHY-ISLAM எனும் தொலைபேசி ஹாட்லைனுக்கு சராசரியாய் ஒரு மாதத்தில் 1000 தொலைபேசி விசாரணைகளும் ஏறக்குறைய அதே அளவு மின்அஞ்சல் விசாரண WhyIslam.org எனும் இணைய தளத்திற்கு வருவதாகவும் பார்க்கர் தெரிவிக்கிறார்.

சான்டா க்ரூஸ் பகுதியிலிருந்து பே ஏரியாவுக்குப் பயணிக்கும் ப்ரூஸ் க்ரீன் என்பார் ஒரு கிறித்தவ மத போதகர். அனைத்து மதத்திற்கு மத்தியிலும் பாலம் அமைக்கும் நல்முயற்சியில் ஈடுபட்டுள்ள இவருக்கு நிறைய இஸ்லாமிய நட்பும் உண்டு. இந்த விளம்பரங்களை நெடுஞ்சாலைகளில் கண்ணுற்ற அவர், முஸ்லிம்கள் இப்பொழுது மேற்கத்திய மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சான்டா க்ளாரா ICNA கிளையின் உதவித் தலைமையாளர் அமீன் அஷ்ரப், இந்த விளம்பரங்களுக்குப் பிறகு இஸ்லாம் பற்றி விசாரிக்கும் ஆர்வத்தில் மஸ்ஜிதுகளில் பல புதிய முகங்கள் தென்படுவதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8000 தொலைபேசி விசாரணைகள் இருந்தன என்றும் கூறினார்.

எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரே ஒருவரின் இஸ்லாமிய விரோத மனப்போக்கைக் களைய முடிந்தாலே அது இந்தத் திட்டத்தின் வெற்றிதான் என்பது இதன் அமைப்பாளர்களின் கருத்து. அவ்வகையில் நோக்கினால் பரவலாக அமெரிக்கா முழுவதும் இது சிறப்பான பலனைத் தருவதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.

தகவல் : சகோ. நூருத்தீன், சியாட்டில், யூ எஸ்.
Courtesy: SatyaMargam.com

No comments: