முஹம்மத் அலி ஐ பீ எஸ் (ஓ)
என் சமீபத்திய(ஜூலை, 2010) அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் சான்டியாகோ நகரில் தமிழ் முஸ்லிம் தொண்டு நிறுவன நண்பர் சாதிக் அவர்களைக் காண சந்தர்ப்பம் கிடைத்தது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ‘நமது சமுதாய இளைஞர்களிடையே நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆகவே அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கட்டுரை எழுதுங்கள’ என்று கேட்டுக் கொண்டார். அந்த வேண்டுகோள் உண்மைதான் என்று சமீபத்திய பிளஸ் 2 பரிட்சையில் முஸ்லிம் மாணவிகள் அபார வெற்றி யடைந்தது போன்று மாணவர்கள் சோபிக்க வில்லை. உதாரணத்திற்கு நெல்லையைச் சார்ந்த கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த மாணவி யாஸ்மின் மாநிலத்திலே முதல் மாணவியாக வெற்றி பெற்றது போல பணத்தினைக் கொட்டி பல்வேறு டூயூஷன் வைத்தாலும் மாணவர்கள் சிறப்புடன் வெற்றியடைவில்லை. இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிப்பரீட்சை எழுதிய 170 மாணவிகளும் 117 பத்தாம் வகுப்பு எழுதிய மாணவிகளும் வெற்றியடைந்திருப்பது பாராட்டலுக்குரியது. ஆனால் ஆண்கள் படிக்கும் தமிழக பள்ளிகளின் வெற்றி சதவீதம் பாராட்டுவதுக்குரியதாக இல்லை. கல்வியறிஞர் ‘யாஸ்பால’ அறிக்கைப்படி நாட்டில் பள்ளி இறுதி வகுப்பு எழுதிய 70 லட்ச மாணவர்களில் வெறும் 30 லட்சம் பேர்கள் தான் உயர்கல்விக்குச் செல்கிறார்கள் என்று தெரிகிறது. மற்றவர்கள் பள்ளிப்படிப்பினை பாதியில் நிறுத்தி வேலை தேடி ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் மாணவிகளை பெற்றோர் கண்டிப்புடன் வளர்ப்பது போல மாணவர்களை பெற்றோர் கண்டிக்காமல் பேனிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களெல்லாம் சம்பாதிக்கும் மிஷினாகவும், திருமண வியார சந்தையில் அதிக விளை போகும் பொருளாக கருதப்படுவதால்தானே அந்த நிலை! மாணவன் படிப்பில் கவனம் செலுத்தாததிற்கு டி.வி. சினிமா, விளையாட்டு, தந்தையின் செல்வக்கொழிப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. தமிழக அரசு 3.5 சதவீதம் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வாய்ப்புக் கொடுத்தாலும் பணியிடங்களில் ஆட்களை நிரப்ப தகுதியான முஸ்லிம்களில்லை என இடங்கள் காலியாக வைக்கப்பட்டு அதனில் வேறு பிரிவினருக்கு ஒதுக்கும் நிலை பரிதாபமானது என உங்களுக்குத் தோன்றவில்லையா? நமது மாணவர்களும், பட்டதாரிகளும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தால் சோர்ந்து விடுவதினை விட்டு மறுபடியும் அந்தத்தோல்விக்கான காரணங்கள் கண்டுபிடித்து வெற்றிக்கனியினைப் பறிக்க உதவுவதிற்காக தீட்டப்பட்டதே இந்த தன்னம்பிக்கைக் கட்டுரை.