கலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களுடன் ஒரு நேர் கானல் ......!
நேர் கானல் : கிண்ணியா பாயிஸா அலி
தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணின் கிராமம் ஒன்றின் தெருக்கோடியில் நின்று கொண்டு கூழான் கல்லொன்றை கூலிக்கெடுத்தாவது விழிகளை மூடிக் கொண்டு வீசினால் விர்ரென்று விரைந்தேகும் அக் கல் விழும் இடம் ஒரு கவிஞனின் வீடாக இருக்கும் இல்லாவிட்டால் ஒரு எழுத்தாளனின் தலையாக இருக்கும்.
கன்னித் தமிழின் கழுத்துக்கு கனகமணி மாலையிட்டு விண்ணுலகம் விரைந்திட்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்த அடிகளார்.அவர் அன்புச் சீடன் ஆசுகவி புலவர்மணி ஆ.மூ.சரிபுதீன் போன்ற ஆன்றோர்களும் ;வாடிநிற்கும் பயிராய்,வாழ்வோடிந்த உயிராய்,வரண்டு போன நதியாய் கிடந்த ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தி வாகை சூடிய சான்றோர்களும் பிறந்து சரித்திரம் படைத்த மண் தென் கிழக்கு மண்.அம் மண்ணில் வைரக்கற்களோடு வைரக்கல்லாக தன்னையும் பதித்துக் கொண்ட பெண் படைப்பாளி தான்சகோதரி கலைமகள் ஹிதாயா றிஸ்வி..