Monday, December 5, 2022

இந்த மனசுதான் சார் கடவுள்…அனாதை சடலங்களை அடக்கம் செய்யும் கபூர்!

 

இந்த மனசுதான் சார் கடவுள்அனாதை சடலங்களை அடக்கம் செய்யும் கபூர்


!

நன்றி  கலைமகள்

இந்த உலகிலேயே பெரிய வலி என்ன தெரியுமா? நம் மரணத்தின் போது நமக்கென்று யாரும் இல்லாமல் தனிமையில் செத்துப் போவது! இறப்புக்குப் பின்பு எந்த மதமாக இருந்தாலும், அந்த மத வழக்கத்தின்படி நடக்க வேண்டிய சடங்குகளைச் செய்யக் கூட ஆள்கள் இல்லாமல் தனிமையில் மரணிப்பதைவிட வலி மிகுந்த வாழ்வே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் அப்படி இருப்பவர்களை தன் சொந்த செலவில் அடக்கம் செய்து கொண்டிருக்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த முகமது கபூர்!


இஸ்லாமியரான இவர் இந்த சேவைக்காக தன் மதத்தை மட்டும் என எடுத்துக் கொள்ளவில்லை. மதம் கடந்த மனிதத்தோடு இந்த சேவையை அனைத்து மக்களுக்கும் செய்து வருகிறார். நிமிர்ந்து நில் இணையப் பக்கத்திற்காக நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் இருக்கும் கபூரை, நம் குழுவினரோடு சந்தித்தோம். இனி அவருடனான உரையாடல் தொடங்குகிறது.

இதுவரை 17 ஆதரவற்ற முதியோரை என் சொந்த செலவில் அடக்கம் செய்து உள்ளேன். அதில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அதில் 15 பேர் இந்துகள். ஒருவர் கிறிஸ்தவர். ஒருவர் இஸ்லாமியர். எனக்கு இந்தப் பணி செய்வதற்கு தூண்டுதலாக இருந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூறக் கடமைப்பட்டு உள்ளேன். நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஒரு பெண் கணவரை இழந்துவிட்டார். அவர் வேதனையின் விளிம்பில் இருந்தார். அடக்கம் செய்வதற்குக் கூட பொருளாதார வசதி இல்லை என அவர் கண்கலங்கினார். அழுதார். மருத்துவமனையில் இருந்து நண்பர் ஒருவர் இதை என்னிடம் சொன்னார்.

உலகில் வாழ வழியில்லாமல் பலர் தவிப்பதைப் பார்த்திருப்போம். இறந்தும் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள் எனத் தெரிந்த போது மிகுந்த சங்கடத்திற்கு உள்ளானேன். முதன்முதலில் ஒரு இந்து சகோதிரி ஈமக்கிரியை தன் கணவருக்கு செய்ய பணம் இல்லாமல் தவிப்பது பற்றிச் சொன்னார்கள். அந்தப் பெண்ணைப் போய் பார்த்தேன். அவர் கணவரை இந்து மத சடங்கின்படியே அடக்கம் செய்தேன். அந்த மத சடங்குகள் அனைத்தையும், இந்து மத சகோதரர்களிடம் கேட்டு ஒரு அய்யரை வைத்து செய்தேன். தொடர்ந்து ஒரு ஆதரவற்ற இஸ்லாமியரையும் அடக்கம் செய்தேன்.”என்கிறார். ஆனால் இந்தப் பணிகளையெல்லாம் மிகவும் தன்னடக்கத்தோடே குறிப்பிடுகிறார் முகமது கபூர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமல்லாது உறவுகளால் கைவிடப்பட்டு, மன நலம் பாதிக்கப்பட்டு அல்லது உறவுகளே இல்லாமல் சாலையோரம் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்கும் கருணை இல்லத்தை சேர்ந்தவர்களும் அங்கு யாராவது இறந்துவிட்டால் முகமது கபூருக்குத் தகவல் கொடுக்கின்றனர். அவரும் தன் சொந்த செலவில் போய் அடக்கம் செய்கின்றார். தொடர்ந்து நம்மிடம் பேசிய முகமது கபூர், “என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் யாருமே அனாதையாக ஆதரவு இல்லாமல் சாகவே கூடாது. அதனால் தான் இந்த பணியை செய்கிறேன். நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் இருந்து இறந்தவர் குறித்த தகவல் வந்ததும், துறை ரீதியாக அதிகாரிகளை அணுகி அனைத்து சான்றிதழ்களையும் வாங்கிவிடுவேன். ஆதரவற்றவர்களை அடக்கம் செய்வதற்காகவே நாகர்கோவில், ஒழுகினசேரியில் தனிச் சுடுகாடு இருக்கிறது அங்கு உரிய ஆவணங்களோடு போய் அடக்கம் செய்வேன். அங்கு இருக்கும் பன்னீர் செல்வம் என்பவரும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்.”என நினைவுகளைப் பகிர்கிறார் முகமது கபூர்.

பெரும்பாலும் இப்படி மனதோடு இருப்பவர்களை மற்றவர்கள் ஊக்குவிப்பதும், குடும்பத்தினர் ஒத்துழைப்பு கொடுப்பதும் அரிதான நிகழ்வு. முகமது கபூருக்கு அவ்விசயத்தில் ஒத்துழைப்பு கிடைக்கிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தோம். அதற்கு தொடர்ந்து பேசியவர், “எங்க ஆளுகளைக் கூப்பிட்டால் முதலில் பக்கத்தில் வரவில்லை. நீ அங்கே..இங்கே போகிறாய். ஏதாவது வந்துவிடும் என பயந்தனர். அது அவர்களுக்கு என் மேல் இருந்த அக்கறை! நம்ம எங்கே இறக்கிறோம். எங்கே அடக்கம் செய்யப்பட உள்ளோம் என்பதே நமக்குத் தெரியாது. அது இறைவனுக்குத்தான் தெரியும். இந்த உலகில் ஆதரவு இல்லாமல் யாரும் அடக்கமாகக் கூடாது என்னும் என் மன நோக்கத்தை புரிந்த பின் அனைவரும் ஆதரிக்கிறார்கள். என்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வை ஊட்டி வருகிறேன். அவர்களும் இப்போது என் சிந்தாந்தத்தை உள்வாங்கிக் கொண்டு ஆதரவு தருகிறார்கள். இந்தப் பணியை பாராட்டுகின்றார்கள்.

என்னைப் பொறுத்தமட்டில் இந்த உலகில் உயிரோடு இருக்கும் போதும் இறந்த பின்பும் யாரும் அனாதை கிடையாதுஎன்பதுதான் என் சிந்தாந்தம். இதற்குள் மனிதாபிமானக் கடமையும் இருக்கிறது. நான் உகாண்டா நாட்டில் வேலை செய்தேன். வெளிநாட்டு வேலை என்றாலும் பெரிய வசதியெல்லாம் சேர்த்து வைக்கவில்லை. அதேநேரம் என் குடும்பத் தேவைக்கு போதுமான சம்பாத்தியமாகவே உள்ளது. மன நிறைவுக்காக இந்தப் பணியைச் செய்கிறேன்.”என்கிறார்.

தானம், தர்மம் பலவகைகளிலும் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஏழைக்கு அன்னமிடுவது தொடங்கி, கல்வியறிவு கொடுக்கும் கல்விக்கு நிதி உதவி செய்வது வரை ஒவ்வொன்றுமே புண்ணியம் தான். அந்தவகையில் முகமது கபூர், ‘ஆள் ஆதரவு இல்லாமல் அனாதையாக யாரும் அடக்கம் செய்யப்படக் கூடாதுஎன்னும் கொள்கை முடிவோடு ஆதரவற்ற சடலங்களை அவர், அவர்களின் மதச் சடங்குகளோடு அடக்கம் செய்கிறார். இங்கே சாதியோ, மதமோ குறுக்காக இல்லை. மனிதத்துவம் மட்டுமே நிரம்பி வழிகிறது. இந்த உயர்ந்த பண்பாளரை வாசகர்கள் மத்தியில் அறிமுகம் செய்ததில் நிமிர்ந்து நில் தளமும் பெருமிதம் கொள்கிறது!

Mohamed Kaffoor

No comments: