Monday, June 7, 2021

அஞ்சி_கறி_சோறு

 Senthilkumar Deenadhayalan

#அஞ்சி_கறி_சோறு!

பிரியாணி பற்றிய எனது பதிவைப் படித்த நண்பரொருவர் போன் செய்தார்!

ஒய்!  என்ன ஒய் பிரியாணி பத்தில்லாம் எழுதிறீமோ?

ஆமா!

அதென்ன ஒய்!  இப்பதான் பிரியாணி அல்லாரும் செஞ்சி திங்கிறாஹளே!  நீமரு, நம்மூரு அஞ்சி கறி சோறு பத்தி எழுதும்ப்ள!

அது இன்னும் எங்காளுக தாம்ப்ள செய்யறாஹ!  நீமரு அதப் பத்தி எழுதும்ப்ள!  பிரியாணி தான் சிரிப்பா சிரிச்சிக்கீதேங்கனி!

சரிப்பா!  எழுதிடறேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவர் சொன்னதைப் போல பிரியாணி இன்று எங்கேயும் கிடைக்கிறது!  எல்லோரும் செய்கிறார்கள்!  ஆனால் அஞ்சி கறி சோறு என்ற சிறப்பான உணவு, இன்னமும் இஸ்லாமிய பெரு மக்கள் மட்டுமே உண்டாக்குகிறார்கள்!

பிரியாணிக்கு முன், அஞ்சி கறி சோறு தான் திருமணம் போன்ற விழாக்களிலேயே சமைத்திருக்கிறார்கள். பின்னர் பிரியாணி வந்து, ஒரே வேலையாக்கி, செய்வதை சுலபமாக்கியதால் பிரியாணிக்கு மாறி விட்டனர்!

அஞ்சி கறி சோறு செய்வது கொஞ்சம் மெனக்கெட்ட வேலை என்றாலும், இன்றும் தோழர் சாப்பாடு என்று மாப்பிள்ளை மற்றும் தோழர்களுக்கு அளிக்கும் விருந்திலும்,  தனிப்பட்ட வீட்டு விருந்துகளிலும் அஞ்சி கறி சோறு தான் இடம் பெறுகிறது!

இது தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம் போன்றவற்றில் கூட இருந்தாலும்,  கீழத் தஞ்சை மாவட்டத்து (இன்றைய நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை)  அஞ்சி கறி சோறு மிகப் பிரபலமானது!  நன்றாக ருசித்து சாப்பிடுபவர்கள், பிரியாணியை விட அஞ்சி கறி சோறையே விரும்புவார்கள்!!

பெயருக்கேற்றார் போல இதில் ஐந்து முக்கிய ஐட்டங்கள் இடம் பெறும்!  அதன் பிறகு அவரவர் வசதிக் கேற்ப கூடுதல் ஐட்டங்களும் தருவார்கள்!

1. நெய் சோறு!  இது தான் இதன் முக்கிய ஐட்டம்!  இதனை பண்டாரிகள் (சமையற் கலைஞர்கள்)  புலாவ் என்றும்,  தாளிச்ச சோறு என்றும் கூறுவார்கள்!  கிராம்பு, முந்திரி, புதினா போன்றவை தாளித்து இதில் இடுவதால் இதற்கு தாளிச்ச சோறு என்றும் பெயர்!

 நன்கு வெந்த பாசுமதி அரிசியில், வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த சோறை செம்பு சட்டியில் (சோறு சமைக்கும் பாத்திரம்.  பேச்சு வழக்கில் கெம்பு சட்டி!. மற்றபடி இந்தப் பாத்திரத்திற்கும் கெம்புக் கல்லுக்கும் எந்த சம்பநதமும் இல்லை!) இருந்து எடுத்த பின், சட்டியில் கொஞ்சம் ஆரஞ்சு கலர் பொடி போட்டு, அதில் கொஞ்சம் சோறைப் போட்டு கிளறி எடுத்து, அதை ஏற்கனவே உள்ள சோறுடன் கலந்து விடுவதால், வெண்மையும், ஆங்காங்கே ஆரஞ்சு நிறமும் கலந்து, பரிமாறும் போதே, அதன் நெய் வாசனை, மூக்கிற்கும், வண்ணக் கலவை கண்ணுக்கும் விருந்தளித்து, நாவில் சுவை நரம்புகளைத் தூண்டி விடும்!

2. அடுத்து தாளிச்சா! (ஆனம்)  கத்தரி, உருளை, மாங்காய், சௌசௌ, கொழுப்பு போட்ட பருப்புக் குழம்பு தான் இது!

3. கறி ஆனம் (தனிக் கறி)  நல்ல கெட்டியான கறிக் குழம்பில் ஒரு பெரிய துண்டு ஆட்டிறைச்சி போட்டு தருவார்கள்!  பொது விருந்துகளில்  இறைச்சி அனைவருக்கும் ஒரு துண்டு தான்!  ஆனம் எவ்வளவு கேட்டாலும் கிடைக்கும்.  தனிப்பட்ட விருந்துகளில் கணக்கொன்றும் கிடையாது!

4.  இறைச்சி குருமா!  இது பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை வறுத்தரைத்து, அதில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட இறைச்சியை புரட்டி அதைப் போட்டு செய்யப் படும், வெண்மையான கெட்டிக் குருமா!

5.    புளிப்பு!  இது மாங்காய், கத்தரிக்காய், அரைத்த மிளகு சேர்த்துச் செய்த புளிப்புப் பச்சடி!  நெய் சோறுக்கு மேற் சொன்ன வேறு எந்த வெஞ்சனமும் இல்லாமல், வெறும் புளிப்புப் பச்சடியை வைத்துக் கொண்டே சாப்பிட்டு விடலாம்!  அத்தனை ருசி!

இவை தான் அஞ்சி கறி சோற்றின் முக்கிய ஐந்து ஐட்டங்கள்! இவை தவிர, அவரவர் வசதிக் கேற்ப இதில் கூடுதல் ஐட்டங்களும் சேர்ப்பார்கள்!

இதற்கு Dessert ஆக சீனி துவையல் என்று ஒன்று உண்டு!  கொஞ்சம் தளர்வான சீனிப்பாகு, வாழைப்பழம்,  தக்காளியில் செய்த இனிப்புப் பச்சடி இவற்றை தட்டிலோ இலையிலோ போட்டு கையால் நன்றாகப் பிசைந்து, ஒன்றோடொன்று சேரும் வகையில் கூழாக்கி, அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கி சாப்பிடுவார்கள்!

அது தான் சீனித் துவையல்!  எவ்வளவு பெரிய கருங்கல்லைத் தின்றிருந்தாலும்,விரைவில் சீரணித்து, ஏப்பம் விட வைக்கும் சக்தி உள்ளது இந்த சீனித் துவையல்!

இவை தவிர முடிந்தால் எக்ஸ்ட்ரா ஐட்டம் தருவார்கள் என்று சொன்னேனல்லவா? அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்!

1.  பேரிச்சை பச்சடி!    பேரிச்சம் பழத்தில் செய்த இனிப்புப் பச்சடி!  இதற்கு விளையாட்டாக இன்னொரு பெயர் உண்டு!  அது, தள்ளு வண்டி பச்சடி!  நீங்கள் எவ்வளவு சோறு தின்றாலும், அதை ஒரு தள்ளு வண்டி போல், வயிற்றுக்குள் தள்ளிச் செல்லும் இந்தப் பச்சடி!  அதனால் இந்தப் பெயர்!

2. கலியா!   ஆட்டின் கல்லீரல், மண்ணீரல், உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் ஒரு வகை குருமா!

3.  முட்டை மசாலா!  மாசாலாவுடன் கூடிய இரண்டாக, நான்காக நறுக்கப் பட்ட அவித்த முட்டை!

4. பொறித்த கோழி!  சிங்கிள் பீஸ் அல்லது சிக்கன் 65.

5. தால்!  கத்தரிக்காய், மாங்காய் சேர்த்த, எலும்போ, கொழுப்போ சேர்க்காத, சைவ தாளிச்சா!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எங்கள் ஊரில் அஜீஸ் என்றொரு நண்பர் இருந்தார்!  அவரை வெறும் அஜீஸ் என்றால் எவருக்கும் தெரியாது!  அஞ்சி கறி அஜீஸ் என்றால் அனைவருக்கும் தெரியும்!

அவர் ஒன்றும் அஞ்சி கறி சமைப்பதில்  வல்லவர் அல்ல! ஆனால்  சாப்பிடுவதில் வல்லவர்!   எந்த விருந்துக்கு அழைத்தாலும், என்ன சாப்பாடு?  பிரியாணியா?  அடப் போப்பா!  என்பவர், அஞ்சி கறி என்றால், மதிய சாப்பாட்டுக்கு, காலையிலேயே ஆஜர் ஆகி விடுவார்!

காலையிலேயே சமைக்கும் இடத்துக்கு வந்து பண்டாரிகளை இதைப் போட்டீஹளா? அதைச் செஞ்சீஹளா?  எனஅதிகாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்!  உள்ளூர் பண்டாரிகளுக்கு இவரைத் தெரியும்.  அதனால் கண்டு கொள்ள மாட்டார்கள்!  வெளியூர் பண்டாரிகள், கடுப்பாகி, பிரசினையானதும் உண்டு!  அஞ்சி கறின்னு சொன்னா, சமைக்க பண்டாரி வரதுக்கு முன்னால, அஜீஸ் வந்திடுவாருன்னு சொல்ற அளவுக்கு பிரபலம்!

 எல்லாம் தயாரானதும், முதல் பந்தியில் உட்கார்ந்து ஒரு ரவுண்டு, ஃபுல் கட்டு கட்டுவார்!  சீனித் துவையலையும் ஒரு கை பார்த்து விட்டு எழுவார்!  எழுந்தவர் கை கழுவி விட்டுப் போக மாட்டார்!  இரண்டாவது பந்திக்கு வந்து, அஹாளுக்கு அது வைங்க! , இஹாளுக்கு இது வைங்க! என அங்கேயும், இங்கேயும் நடந்து பந்தி விசாரித்து, அதிகாரம் செய்வார்!

 அது முடிந்ததும், மூன்றாவது பந்தியில்  உட்கார்ந்து, மீண்டும் ஒரு ரவுண்டு கட்டி விட்டு, சீனித் துவையலுடன் தான்! எழ முடியாமல், வாப்பா!  ஒரு கை தூக்கி விடுறீஹளா?  என பிறர் உதவியுடன் எழுந்து, கை கழுவி விட்டு, படைச்சோனே!  என்று ஒரு ஏப்பம் விட்டு விட்டுப் போய் விடுவார்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

With inputs from Mohamed Kamil


 Senthilkumar Deenadhayalan

No comments: