Tuesday, October 8, 2019

புன்னகை


புன்னகை...
உதடுகள் புரியும் உன்னத மொழி !
உலகத்தார் அனைவருக்கும் புரிந்த மொழி
காதலின் பிள்ளையார் சுழி !
கல்லையும் கனியாக்கும் மந்திரக் கழி !!

உச்சரிப்பே இல்லாத ஒரே மொழி
உலகில் புன்னகை மட்டும்தானே !!

புன்னகைக்கு மொழிபெயர்ப்பு தேவையில்லை !
இந்த நாலெழுத்து மந்திரம்
யாரையும் நட்டப்படுத்தியதில்லை !



புன்னகைக்கு விலை இல்லை என
புரிந்திருந்தும்
புதிர் போடும் குசும்பர்கள்
இந்த கவிஞர் பெருமக்கள்
“உன் புன்னகை என்ன விலை?” என்று

அது….
விரிசல்களை ஒட்டவைக்கும் ஃபெவிகால் !
உறவின் இடைவெளியை சுருக்கும்
குறுக்குப் பாதை !
அள்ளி அள்ளி கொடுத்தாலும்
அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் !
எதிரியையும் நிலைகுலைய வைக்கும் ஆயுதம்!!

பூக்களும் சிரிக்க கற்றுக்கொண்டதால்தான்
நந்தவனமே அழகை அணிந்துக் கொண்டது !
வானத்தின் சிரிப்புதானே விடியல் ?
கடலலைகளின் சிரிப்புதானே வெண்நுரை..?

இறைவனைத் தேடுபவர்க்கு
அண்ணா பரிந்துரைத்த சூரணம்
“ஏழையின் சிரிப்பில் இறைவன்”

உதடுகள் புரிவது
இலேசான அசைவுகள்தான் !
ஆனால். ரிக்டர் அளவுகோல்
அளவிட முடியாதது..!

புன்னகையின் சென்செக்ஸ் புள்ளியில்
இருந்த பங்கையும் இழந்தவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள் !

புன்னகை வலிமையானது !
வரலாற்றை புரட்டி பார்த்தபோது
அழகிகளின் புன்னகையில்
சாம்ராஜ்யங்களே சரிந்திருக்கின்றனவே..?

தனக்கு தொற்றுநோய் இருக்கிற விடயம்
புன்னகைக்கே தெரியாது !
நலம் சேர்க்கும் வியாதி
அது ஒன்றே ஒன்றுதான் !

புன்னகையை சேமித்து வைப்பதால்
யாதொரு பலனும் இல்லை !
செலவழித்துத்தான் பாருங்களேன் !!

உன்னிடம் கொடுப்பதற்கு
உண்மையிலேயே எதுவுமில்லையா..?
பரவாயில்லை..! புன்னகை இருக்கிறதே !!

கொஞ்சம் சிரித்துத்தான் பாரேன் !
என்ன..? மாட்டாயா.. ?
டால்ஃபினும் சிரிக்கிறதே..
உனக்கென்ன கேடு..?



#அப்துல்கையூம்

No comments: