கவுன்சிலிங் !
(Hyper Active Psychology)
தற்காலத் தலைமுறையின் மற்றுமொரு நவீனக் கண்டுபிடிப்பு ‘கவுன்சிலிங்’! முந்தையத் தலைமுறைகள் அதிகம் கேட்டிராதச் சொல். படிப்பறிவே இல்லாத கிராமத்தில் போய்க் கேட்டாலும் ‘கவுன்சிலிங்’ கவுன்சிலிங்தான். தமிழ்ச் சொல் தெரியாது. அவ்வளவு பிரபல்யம் இச்சொல்.
என்னாயிற்று? ஏன் கவுன்ஸிலிங்?
“பையன் நல்லாப் படிக்கிறான். துறுதுறுன்னு இருக்கான். வேர்க்க விறுவிறுக்க விளையாடுறான். ரொம்பவும் சுறுசுறுப்பாக இருக்கான். நாட்டி பாய்” என்று புகழாரம் சூட்டிக் கொஞ்சிக் கொண்டாடியக் காலம் போய், “என்ன உங்க பையன் ரொம்பச் சுட்டித்தனம் பண்றான்! ஒழுங்கா உடனே டாக்டரிடம் அழைச்சிட்டுப் போய் கவுன்சிலிங் கொடுங்க. ஹைப்பர் ஆக்டிவா இருக்கான்” என்று பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் காலத்தில் இருக்கிறோம்.
இதென்ன ‘ஹைப்பர் ஆக்டிவ்’? இந்தச் சொல்லுக்குள் ஏகப்பட்டப் பொருட்களை உள்ளடக்கிவிட்டது சமூகம்.
“காம்பவுண்ட் சுவத்திலே ஏறி நிக்கிறான் உன் மகன்!”
“மழைத் தண்ணியிலே விளையாடுறான், போய்ப் பாரு”
“வகுப்பிலே எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கிறான்”
“என்ன புள்ள வளர்த்திருக்கே? இங்கே பாரு என் பிள்ளைக் கன்னம் செவந்து போற அளவுக்கு அடிச்சிட்டான்”
மேலே சொன்னவற்றிற்கு எல்லாம் தீர்வு? கவுன்சிலிங்!
எங்கள் தெரு வெட்டிக்குளத்தில் படிக்கட்டுகளுக்கு இருபுறமும் கட்டப்பட்ட அடைப்புச்சுவற்றிலிருந்து ரிவர்ஸ் டைவ் செய்து குளத்தில் குதித்தபோது தண்ணீருக்குள்ளிருந்து திடீரென எழுந்த மூத்த சகோதரர் ஒருவரின் தலையில் போய் விழுந்ததில் அவருக்கு கபாலம் பிளந்துத் ‘தக்காளிச்சட்னி’ பிதுங்கி வழிய, என் கீழ் உதட்டில் குத்திக் கிழித்த மேல் பற்கள் அப்படியே உதட்டிலேயேச் சிக்கிக்கொண்டு ‘ரத்தம்’ வடிய, வலியால் ’உம்மா உம்மா’ என்ற அலறல்கூட ‘ம்ம்...ம்ம்..’ என்று இழுக்க, ‘மா’ என்று வாய் திறந்து அலற முடியாமல் பற்களும் உதடும் சிக்கிக்கிடக்க, திருடனுக்குத் தேள் கொட்டியக் கதையாய் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தேன். காரணம், அது மதிய நேரம். “உச்சி உரும நேரத்தில் குளத்தில் குளிக்கப் போனே, கொன்னுடுவேன்” என்ற உம்மாவின் மிரட்டல்தான். வீட்டுக்குத் தெரிந்துவிடாமல் இருக்க டவுசரையும் சட்டையையும் கழட்டி புத்தகப்பையோடு கரையில் வைத்துவிட்டுத்தான் எங்க செட்டு தண்ணீருக்குள் இறங்கும். உடுப்பு ஈரமானால் குளத்தில் இறங்கியது தெரிந்துபோய் இடுப்பை உடைத்துவிடும் உம்மா.
ஆயினும், இம்முறை பெருசுகள் எல்லாம் சேர்ந்து என்னைத் தூக்கிக்கொன்ண்டுபோய் உம்மாவிடம் ஒப்படைக்க, முதலில் முதுகில் அடி, அப்புறம் பற்களை உதட்டிலிருந்து பிய்த்தெடுத்து (உம்மா உம்மா என்று வலியால் கதற) ஏதோ கருப்புப் பொடியை வைத்து அழுத்திவிட ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நின்றது. என்னைக் கட்டிக்கொண்டு அழுத உம்மாவிடம் யாரும், “இவன் ஹைப்பர் ஆக்டிவா இருக்கான், கவுன்சிலிங் கூட்டிப்போங்கள்” என்று சொல்லவில்லை.
என் உறவினர் ஒருவர் சொன்னார், “ இளைய மகனை கவுன்சிலிங் கூட்டிப்போகச் சொல்கிறாள் மனைவி. ஃபுட்பால் விளையாடப் போகும்போதெல்லாம் யாருக்காகவது அடிபடுறமாதிரியே விளையாடுகிறானாம்”. சொல்லும்போது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
எனக்கோ நினைவுகள் பின்னோக்கி ஓடின. வெட்டிக்குளத்தை ஒட்டியுள்ள ஸ்கூல் மைதானத்தில் நான், எஞ்சோட்டுப் பசங்களோடு டீம் ‘கொறுத்துப்போட்டுக்கொண்டு’ ஃபுட்பாலில் மோதிக்கொள்வோம். ரத்தம் காணாமல் ஒரு நாள்கூட விளையாட்டு முடியாது. கால்கள் இரண்டும் முழங்கால்களுக்குக் கீழே அம்மிக் கொத்திய மாதிரி தழும்புகள் இப்பவும் இருக்கிறது. அடை மழையடித்தாலும் விடாது ஆட்டம் நடக்கும். அப்போதெல்லாம் எங்களை கவின்சிலிங் அனுப்ப யாருக்கும் தோன்றவில்லை.
“என் ஃப்ரெண்ட் வாட்ஸப் அனுப்பியிருக்கான். ஃபோட்டோவ்ல அவன் மகன் மண்டைல கட்டு போட்டு ஆஸ்பத்ரியில் க்ளுக்கோஸ் ஏறுது. இளையவன் கல்லை வீசி மண்டையை உடைச்சிட்டானாம். அட்டகாசம் தாங்க முடியலே, கண்டிச்சி வை என்கிறான். இந்தப் பக்கம் மனைவி, ‘உங்க மகனை வச்சி சமாளிக்க முடியல, வீட்டு சாமான்களையெல்லாம் போட்டு உடைக்கிறான், கவுன்சிலிங் கூட்டிப்போகப்போறேன்றா.” என்று கவலையோடு சொன்ன உறவினர் மேலும் சொன்னதைக் கேட்டதும் எனக்குக் குபீரெனச் சிரிப்பு வந்துவிட்டது, “நாங்கள்லாம் சின்னப் பசங்களாக இருந்தப்ப நான் கல்லை வீசி என் ஃப்ரெண்ட் மண்டையை உடைச்சேன். இப்ப அவன் மகன் மண்டையை என் மகன் உடைச்சிட்டான்”.
இதே இளைய மகன், சுற்றிப்பார்க்க இங்கு துபை வந்திருந்தபோது மிகவும் சாந்தச் சொரூபியாக இருந்ததும் ஊரில் எங்கள் வீட்டுக்கு வரும்போதும், அவன் தன் சாச்சி வீட்டில் மாதக்கணக்கில் தங்கும்போதும் ரொம்ப நல்ல பிள்ளையாக இருந்தது கண்டு, ‘அவனா இவன்?’ என்று வியந்திருக்கிறேன். பின்னர் ஒரு முறை அவனிடம் பேசிய வகையில் அவனை அவன் வீட்டில் சில விஷயங்கள் பாதிப்பதை உறுதி செய்து கொண்டு, “கவுன்சிலிங்கும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம், அவனைப் பாதிக்கும் விஷயங்கள்தாம் சரியில்லை, அவற்றைச் சரி செய்” என்றேன்.
கவின்சிலிங் இல்லாதக் காலத்தில், வெட்டிக்குளத்தின் தண்ணீரையும் சூரியன் உறிஞ்சிவிட, நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஊரே செடியன் குளத்திற்குத்தான் குளிக்கச் செல்வோம். அப்படி ஒருநாள் குளத்தில் இறங்கி கண்டு விளையாடி, தொட்டு விளையாடி, உள்நீச்சல் அடித்து, குளத்தைக் கலக்குவதாகப் பெருசுகளிடம் திட்டு/அடி வாங்கி (குளிக்கிறோமாம்! ஹிஹி) கரை ஏறும்போது, ஷாலமீதும் ஜலாலும் சைக்கிளில் வந்திருந்ததால் என்னையும் ஏறிக்கொள்ளச் சொன்னான் ஜலால். ‘அதுவோ கேரியர் இல்லாத சைக்கிள், எப்படி ஏறுவான்’ என்றுதானே நினைக்கிறீர்கள்?. அங்குதான் ஹைப்பர் ஆக்டிவ் வேலை செய்தது. ஷாலமீது சைக்கிள் மிதிக்க, ஜலால் முன்னால் கம்பியில் உட்கார்ந்துகொள்ள நான் பின் சக்கரத்தின் அச்சுக்கான இரண்டு பக்க போல்ட் நட்களின்மீது பெருவிரல்களால் நின்றுகொண்டு... ‘ரைரை...போலாம்’!
ஓர் அசாதாரணத் திருப்பத்தில் கல்லூரி வளைவில் என் வலது பெருவிரல் தடுமாறி சக்கரத்தில் சிக்கி தடதடவெனச் சப்தமும், ‘ஆ’ வென்ற என் அலறலும் கேட்டு வண்டியை நிறுத்தினான் ஷாலமீது. இறங்கிப் பார்த்தால், என் வலது பெருவிரல் நகத்தைக் காணவே காணோம். சைக்கிள் கம்பிகளில் சிக்கி, சிதைந்து, பெயர்ந்து எங்கோ விழுந்துவிட ரத்தம் கொட்டுகிறது. வீட்டுக்குப் போய் உதைவாங்கி, ராஜு டாக்டரிடம் கட்டுப்போட்டு ஊசி குத்தி... பட் நோ ஹைப்பர் ஆக்டிவ் வார்னிங்ஸ். (ஆனால், அதற்குப் பிறகு வளர்ந்த பெருவிரல் நகம், அடி வாங்கிய அதிர்ச்சியில் பழசெல்லாம் மறந்து, கஜினியாகி, தன் தொண்மையான வடிவை மறந்து, ஒரே பீஸாக வளராமல், ஓடிப்போன காதல் ஜோடியைப்போல சைட் பை சைட் ரெண்டு பீஸாகவே வளர்ந்து வருவதுதான் உச்சகட்ட சோகம்!)
அந்தக் காலத்தில் ஒரு லைஃபாய் சோப் விளம்பரம் வரும். அறுவியாய்க் கொட்டும் தண்ணீரில் குளித்துக்கொண்டே ‘லைஃபாய் இருக்குமிடம் ஆரோக்யம் இருப்பிடமே’ என்று குளிப்பார் ஓர் ஆண். (தற்காலத்தில் ஆண்கள் குளிப்பது அறுகிப்போய் பெண்கள் மட்டுமே ‘ஒரு க்ளப் டான்ஸ்’அளவுக்குக் குளிக்கின்றனர்) அதைப் பார்த்துவிட்டு நம்ம ஏரியில் தண்ணீர் திறந்துவிடும்போதெல்லாம் (ஏரி, தண்ணீர் திறந்துவிடுதல் போன்ற அருஞ்சொட்களுக்குப் பொருள் விளங்காதோர் அதிரையின் அகராதியில் தேடினால் கிடைக்கலாம்) பாலத்தின் சறுக்கலில் லைஃபாய் சறுக்கிக் குளிப்போம். அவ்வாறான ஹைப்பர் ஆக்டிவ் நடத்தை ஒரு முறை கூரியக் கற்கொண்டு தோளின் தோலைப் பெயர்த்துவிட வழக்கம்போல் அடி உதைக்குப் பிறகு உம்மா மருந்து போட்டுவிட்டது.
இன்னும் கவுன்சிலிங் தேவைப்படாத ஹைப்பர் ஆக்டிவ்களின் தலைப்பை மட்டும் சொல்லிவிடுகிறேன்.(முழு விவரம் தேவைப்படுவோர், சுய விலாசமிட்ட கவரில் 2 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி எனக்கு அனுப்பவும்)
-கடற்கரைத்தெரு புளிய மரத்தில் கிளைக்குக்கிளைத் தாவும்போது விழுந்து அடிபட்டவை.
-10வது பரீட்சை முடிந்தக் கையோடு துவங்கப்பட்டக் கையெழுத்துப் பத்திரிகை.
-காமிக்ஸ் ஹீரோக்களுக்காகத் துறந்த கல்கோனா, தேன் மிட்டாய்கள்.
-கிரிக்கெட்டில் கார்க் பாலால் அடிபட்டவை.
-வாலிபாலில் பறிகொடுத்த விரல் நகங்கள்.
-ஸ்கூல் படிக்கும்போதே கொடுத்த லவ் லட்டர்ஸ்.
-உப்பளத்தில் கண்ணிவச்சி உல்லான் குருவி பிடித்தது.
-இறால் மண்டைக் கிள்ளிக்கொடுத்து கிடைத்த காசில் ரிவால்வார் ரீட்டா பார்த்தது.
-ரயில்வே ட்ராக்கில் நடந்தே முத்துப்பேட்டை சென்றது.
-இப்படி ஏராளம் உள்ளன. எல்லாத் தலைப்புக்கும் முடிவாக முதுகில் உம்மாவின் அடி இருக்கும்.
என் பேரன் வகுப்பில் படிப்பில் முதலிடம்; விளையாட்டுகளில் ஃபர்ஸ்ட் ப்ரைஸ், ஆண்டுவிழா நடனங்களில் முன் வரிசை, அப்பாவிடம் BOTIM வழியாக குர் ஆன் ஓதிக்காட்டுவது பேரழகு! எனினும்,
எனக்கு, அவன் துபை வந்திருந்தபோது, வந்த அதே நாளே என் ஃபோனின் பேட்டர்ன் லாக்கைச் சுலபமாகத் திறந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன்.
“அவன் எல்லோர் ஃபோனையும் ஓபன் செய்திடுறான், வாப்பா. ஷஹ்பாஸ் ஹைப்பர் ஆக்டிவாம் வாப்பா. ரொம்ப சடப்படம் பண்றான். விளையாட்டு விளையாட்டு என்று வெளியேவே ஓட்றான். கதவை லாக் பண்ணி வச்சாலும் எப்டியோ திறந்துட்றான். கண்டிச்சா, ‘ நான் வளர்ந்தபிறகு உனக்கும் வாப்பாவுக்கும் நான்தான் சாப்பாடு தரனும்னு’ மெரட்றான்.எல்லோரும் கவுன்சிலிங் கூட்டிப்போகச் சொல்றாங்க, கூட்டிப்போகவா?”
என் பதில்தான் இந்தக் கட்டுரையின் கரு.
“வேண்டாம் கூட்டிப்போகாதே.உலகத்திலேயே ஷஹ்பாஸ்மீது அதிக அக்கறை, அன்பு உள்ளவர் யார்? “ என்று கேட்டேன். “கவுன்சிலிங் தரும் டாக்டரா? அம்மாவா?” “அம்மாதான்” என்றவளிடம்,
“ஒரு காகிதம் எடுத்துக்கொள். அதில் 24 மணி நேரத்தில் நீ அவனோடு செலவிடும் நேரம் எவ்வளவு? அதை எவ்வாறு செலவிடுகிறாய்? உணவளிக்க, உடையிட, ஓதிக்கொடுக்க, படித்துக்கொடுக்க, கதைகள் சொல்ல, விளையாட என்று எல்லாவற்றையும் குறிப்பெடு. அவ்வாறான இரண்டு நாட்களுக்கானக் குறிப்புகளை எனக்கு அனுப்பு. கவுன்சிலிங் கொடுக்கவேண்டியது பிள்ளைகளுக்கல்ல; பெற்றோருக்குத்தான் என்று நிரூபிக்கிறேன்.”
(என் ஹைப்பர் ஆக்டிவ் அடையாளங்கள் இன்றும் உடம்பின் பல உறுப்புகளில் காணக்கிடைக்கின்றன . இந்த அத்தாட்சிகளைப் பார்க்க விரும்புவோர் தேவையான ஈ பாஸ்களை வாங்கிக்கொண்டு சமூக இடைவெளியோடு வரிசையில் நின்று கண்டு வியந்து செல்லலாம்)
வாழ்க மனநலத்தோடு!
No comments:
Post a Comment