Tuesday, July 14, 2020

அமெரிக்க விமானதளத்தில் எந்தவிதமான சோதனையும் செய்யாமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்


அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்துவிட்டேன். அமெரிக்க விமானதளத்தில் எந்தவிதமான சோதனையும் செய்யாமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள். ஏர் இந்தியாவும் உறுதிமொழியை மட்டும் வாங்கிக்கொண்டு பயணச்சீட்டுக் கொடுத்துவிடுகிகிறது. சென்னை விமானதளத்தில் ட்ராலி கூடக் கொடுப்பதில்லை. பயணிகளே தத்தம் பெட்டிகளைத் தள்ளிக்கொண்டு செல்லவேண்டும். உடன் வருபவர்களும் உதவ அனுமதியில்லை. பயணியரில் பாதிக்கும் மேல் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள். மற்றவர்களில் சிலர் கைக்குழந்தையுடன் வந்தவர்கள். நல்ல வேளையாக ஒருவர் என்மேல் பரிதாபப்பட்டு எனக்கு ஒரு உதவியாளரை அனுப்பினார். ஆனால் விமானதளத்திற்குள் இடைவெளி நியதி நன்றாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெப்பச் சோதனை செய்தார்கள்.

விமானத்தில் நுழையும் முன் ஒரு பிளாஸ்டிக் உறையில் சானிடைஸர் சிறு பாக்கட்டுகள் ஆறு, முகக்கவசம், முக ஷீல்ட் கொடுத்தார்கள். எல்லாப்பய்ணிகளும் அவற்றை அணிந்துகொண்டோம். விமானத்துக்குள் நுழையும் போது ஒரு தண்ணீர் பாட்டில் கொடுத்தார்கள். என் அருகிலிருந்த இருக்கையில் யாரும் இல்லை.

டெல்லி யில் நாங்கள் இறங்கிய டெர்மினல் 1 லிருந்து டெர்மினல் 3 செல்வதற்குப் பல படிநிலைகளையும் பல சோதனைகளையும், பல படிவ நிரப்புகளையும் முடித்துச் செல்லவேண்டியிருந்தது. நல்லவேளையாக எனக்கு வீல் சேர் ஏற்பாடு செய்யப்படிருந்ததால் இவை எளிதாக முடிந்தன. டெல்லி விமான தளத்தில் இடைவெளி விட்டு நிற்க அழகாக க் கோடுகள் வரைந்திருக்கிறார்கள். ஆனால் எவரும் அவற்றைச் சட்டை செய்வதில்லை. முகக்கவசம் அணிந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இமிக்ரேஷன் வரிசையில் இடைவெளி கிடையாது. நெருக்கம் அதிகம். ஆனால் ஏர் இந்தியா வாயிலுக்குள் நுழைவதற்கு முன்பு ஒரே தள்ளு முள்ளு. . அங்கும் கவச உறை கொடுக்கப்பட்ட து

விமானத்துக்ள் நுழைந்தால் ஒவ்வொரு இருக்கையிலும் அந்தப் பயணத்துக்கு வேண்டிய உணவு முழுவதும் ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது. உலர் உணவுகள்தாம். ஆனால் போதுமானவை. பயத்தினால் எல்லோரும் முகக்கவசம் ஷீல்ட் அணிந்தே பயணம் செய்தனர். பாதிக்கும் மேல் 70 வய்தைத் தாண்டியவர்கள். சிறு குழந்தைகளுக்கு முக் கவசம் இல்லை. கோவிட் 19 க்குக் குழந்தைகள் மீது பரிவாம். அவர்களைப் பாதிக்காதாம். ஆனால் அவர்களுக்குள் அமர்ந்துகொண்டு அவர்களுக்குத் தீங்கு விளைக்காமல் மற்றவர்களைப் பாதிக்கும். அவர்கள் கடத்திகளாம்.. பல வசதியானவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வெள்ளுடைக் கவச உடை அணிந்து வந்திருந்தனர். நான் அணிந்திருந்த நீளக் கை ஜிப்பா எனக்குக் கவசமாக அமைந்துவிட்ட து. கழிப்பறைக் கைப்பிடியில் கூட கோவிட் 19 குடியிருக்குமாம். எனவே அவற்றைத்தொட்டபின் சானிட்டைஸர் பயன்படுத்துவது அவசியம். சிலசமயங்களில் கையுறைகளில் கூட அவை அமர்ந்து கொள்ளும். முடிந்தவரை முகத்திற்குக் கையைக் கொண்டு செல்லாமல் பழகிகொள்வது நல்லது.

விமானம் டெல்லியிலிருந்து 14 மணி நேரத்தில் நியூயார்க் விமானதளத்தை வந்தடைந்த து. வாயில் அதை நிலைப்படுத்துவதற்கு முன்பே அதுவரை ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்துவந்த பயணியரில் பலர் அதைக் காற்றில் பறக்கவிட்டார்கள். எழுந்து நின்று சாமன்களை எடுக்கத்தொடங்கினர். கேப்டன் எவ்வளவு கெஞ்சியும் செவிசாய்க்கவில்லை..

பாதிக்கும் மேல் வீல் சேர் பயணிகளாக இருந்தால் வீல் சேர் ஏற்பாடு செய்ய அதிகாரிகள் திணறினார்கள். ஆனால் எல்லோருக்கும் வீல்சேர் கிடைக்கும் என்று உறுதியளித்தார்கள்.

வழக்கமான குடியுரிமைச் சோதனை தவிர வேறு எந்தவிதமான சோதனைகளும் இல்லை. சுங்கச் சோதனைகூட இல்லை.

என்னுடைய ஒரு பெட்டி வரக்கால தாமதமாயிற்று. வேறு யாராவது எடுத்துவைத்திருப்பார்களா என்று பார்க்க என் மற்றப்பெட்டிகளை ஓரிட த்தில் வைத்துவிட்டு வராத பெட்டியைத் தேடிச்சென்றேன். எங்கேயும் காணவில்லை. திரும்பி வந்து பார்த்தால் நான் விட்டுச் சென்ற பெட்டிகளின் அருகே அது இருந்தது. எப்படி வந் தது என்று நான் வியந்த போது அங்கு அதிகாரியாகப் பணிபுரியும் தமிழ்ப் பெண் அதிகாரி”
இந்தப்பெட்டி அங்கே ஓரிடத்தில் தனியாக இருந்தது. அதில் இராமசாமி என்று பெயர் ஒட்டப்பட்டிருந்தைப் பார்த்தேன். நமது தமிழாள் போல இருக்கிறதே என்று இராமசாமியைத் தேடி இங்கே வந்தால்
இந்தப்பெட்டியிலும் அந்தப் பேர் இருக்கவே இங்குக் கொண்டு வைத்தேன் என்றார். தமிழ்ப் பற்று எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்று வியந்து அவருக்கு நன்றி செலுத்தினேன். பிறகு அவரே நான் வசதியாக வெளியில் செல்ல ஒரு ஆளை ஏற்பாடு செய்து அனுப்பினார்.
என் மகளும் மாப்பிளையும் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.
அரசு எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்றாலும் ஒருவாரம் நான் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்படுவது என்று தீர்மானிக்கப்பட் ட.து.

இதோ என்னுடைய தனி அறை. புதிய கம்ப்யூட்டர் மேஜை. மெத்துமெத்தென்று வசதியான படுக்கை. அறையோடு இணைந்த குளியலறை/ மூன்று சன்னல்கள். அவற்றின் வழி வெளியே பார்த்தால் ஒல்லி மூங்கில் காடு. மீண்டும் வந்துவிட்டாயா என த் தலையசைத்து மூங்கில் மரங்கள் என்னை வரவேற்கின்றன. இதோ நான் அமர்ந்திருக்கும் இடக்த்திற்கு அருகே உள்ளே சன்னலின் வெளியே வாழைமரக் கன்றுகள், எலுமிச்சைச் செடி, பூத்துக்குலுங்கும் செம்பருத்தி , ரோஜாச் செடிகள், கறிவேப்பிலைக் கன்றுகள், குரோட்டன்ஸ்
என க் கண்ணுக்குக் குளுமையாகக் காட்சி யளிக்கின்றன.. இவ்வளவு வசதிகள் இருக்கும் போது தனிமை கூட ஒரு சுகம்தான்..

No comments: