இந்த பள்ளிவாசல் திறக்கப்பட்ட போது கட்டிட கலையின் மாஸ்டர்பீஸ் எனவும், ஐரோப்பாவின் மிக அழகிய மசூதிகளில் ஒன்றாகவும் வர்ணிக்கப்பட்டது. வெறுமனே அழகு என்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பயன் தரும் வேறு பல தனித்துவங்களும் இந்த பள்ளிவாசலில் இருந்தன. குரோஷியாவின் மூன்றாவது பெரிய நகரமான Rijeka-வில் அமைந்துள்ளது இந்த பள்ளி. இந்நகரத்தின் முஸ்லிம் மக்கட்தொகை சில ஆயிரம்களை தொட்ட நிலையில், தங்களுக்கான முதல் மசூதியை கட்டமைக்க முயன்றனர் இந்நகர முஸ்லிம்கள்.
இவர்களின் பரந்து விரிந்த பார்வையானது, தொழுகைக்கான இடமாக மட்டும் இந்த பள்ளிவாசல் இல்லாமல் மேலும் பல பயன்களுக்கும் வழிவகுத்தது. ஒரு நூலகம், சமுதாயக் கூடம், அழைப்பு பணி மேற்கொள்வதற்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி பகுதிகள், பயிற்றுவிக்கும் கூடம், இஸ்லாமிய வழியிலான ஆரம்ப பள்ளிக்கூடம் என 10,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மசூதியில் இவை அனைத்தையும் அடக்கினர். இவ்வளவு ஏன், உணவகம் கூட இந்த மசூதியில் உண்டென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 2009-ல் தொடங்கி 2013-ல் முடிக்கப்பட்ட இந்த பள்ளியின் கட்டுமான பணியில் கணிசமான பங்கு கத்தார் அரசிற்கு உண்டு.
இம்மக்களின் தொலைநோக்கு பார்வைக்கு இன்று பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. உணவு, புத்தகங்கள் என சகல வசதிகளும் இருப்பதால், இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள வரும் பிற சமய மக்கள், பொறுமையாக ஒரு முழு நாளையும் கூட இங்கே கழிக்கின்றனர். குரோஷியாவின் இரண்டாவது பெரிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே இஸ்லாமை தழுவிய பூர்வ குடிமக்களாவர். தங்களின் அணுகுமுறையின் மூலம் சீராக வளர்ந்துவரும் இந்த சமுதாயம் மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.
No comments:
Post a Comment