Thursday, July 23, 2020

என் இறைவனை எப்படி இன்னும் அதிகமாக நேசிப்பது

Fazil Rahman

என் இறைவனை எப்படி இன்னும் அதிகமாக நேசிப்பது என்று நினைத்தவண்ணமே இருட்டில் கொட்டக்கொட்ட விழித்த படியே படுத்து கிடத்தேன். வெகுநேரமாயிற்று உறக்கம் வர நேற்று!

அவன் மீதான என் நேசம் நிஜம் தானா என்ற எண்ணம் எப்பொழுதுமே எனக்குண்டு. அதன் விளைவு தான் இந்த உறக்கம் ஊறாத இரவு. நினைத்து பார்க்கையில், ரமளான் மாதம், பிறகு இந்த துல்ஹஜ்ஜின் முதல் பத்து, வருடாவருடம் நிகழ்கிற நான்கைந்து நாள்நீள பயிற்சி வகுப்புகள், அவ்வப்போது நிகழ்கிற அறிஞர்களின் உரைகள் தொடங்குவது முதல் அன்றைய இரவு படுக்கையை உதறி விளக்கணைத்து கிடந்துறங்குகிற வரை... இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களில் தான் அவன் நினைவு என்னை நனைக்கிறது.

எப்படி அவனை நேசிக்கலாம் என்றெண்ணிய போது எனக்கு சில உபாயங்கள் தோன்றின...

எனக்கு என்னை பெற்றவளை பிடிக்கும். அவளுக்கு நான் அவளது சொல்பேச்சை கேட்பது பிடிக்கும், நான் அவளது உதவியை நாடுவது பிடிக்கும், அவள் எனக்கு தருகிறவற்றை கொண்டு திருப்தியடைவது பிடிக்கும், தினம் அவளருகில் சிலநேரம் செலவிடுவது பிடிக்கும், அவள் உதவ விரும்புகிறவர்களுக்கு நான் உதவுவது பிடிக்கும், என் தாய் அவள் தானென்று நான் பெருமை பூண்டால் அது மிகவும் பிடிக்கும், எல்லா எப்பொழுதுகளிலும் அவளுக்கு என்னை பிடிக்கும் என்று புரிந்து கொள்வது பிடிக்கும்... இனி நான் என் இறைவனிடத்திலும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்!

பிறகு எனக்கு என்னவளை பிடிக்கும். அவளுக்கோ நான் சதா நேரமும் அவள் நினைவோடிருப்பது பிடிக்கும், அவள் இடத்தில் மற்றெவரையும் மனதில் அண்டவிடாமலிருப்பது பிடிக்கும், எனதன்பு நிலையாக பாய்வது மிக பிடிக்கும், நான் உடுத்தி கொள்வது பிடிக்கும், உடலை பேணுவது பிடிக்கும், உறவை நேசிப்பது பிடிக்கும், உரக்க சிரிப்பதும், உழைத்து தின்பதும், வாசிப்பதும், யோசிப்பதும், புனைவதும், அவளை புகழ்வதும் எல்லாம் பிடிக்கும்... இனி நான் என் இறைவனிடத்திலும் இவற்றை பிரயோகிக்க வேண்டும்!

எனக்கு என் பொன் மகளை மிகமிக பிடிக்கும். அவளுக்கு காரணமே காணாமல் என்னை பிடிக்கும், அவள் என்னை வருத்தினால் வலியை காண்பிக்காமலிருப்பது பிடிக்கும், மனதில் அவளை சுமப்பது பிடிக்கும், பார்த்து சிரிப்பதும், பாசமாய் நினைப்பதும், நான் கேட்பதை எடுத்து கொடுப்பதும், சில நேரம் கொடுக்காமல் ஒளித்து வைத்து என் தவிப்பை ரசிப்பதும், கொடுத்து விட்டதனை தட்டிப்பறிப்பதும், அவளிடம் கெஞ்சுவதும், அவளை கொஞ்சுவதும், என்னோடு கண்ணாமூச்சி ஆடுவதும், காணாமலிருக்கையில் அவள் முகம் காண நான் தவிப்பதும் எல்லாமே அவளுக்கு பிடிக்கும்... இனி என் இறைவனிடத்திலும் இப்படியெல்லாம் இருக்க வேண்டும்!

இவர்களின் நேசங்களை எல்லாம் பெற்றுத்தந்த என் இறைவனை நான் இத்துணையாவது நேசிக்க வேண்டும்



No comments: