Monday, July 6, 2020

ஆனந்தத் தருணம்...!


Hilal Musthafa


ஆஹாஹா ஆனந்தத் தருணம்!--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!


தென்னங் கீற்றில்
சிட்டுகள் சிரிக்கும்!--அது
தென்றல் காற்றில்
பட்டுத் தெறிக்கும்!

சற்றைச் சணத்தில்
மாலை விடை பெறும்!
ஒற்றைக் கோட்டில்
நிலவு வலம்வரும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்!--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!




நதியின் அடியில்
நெடுமீன் துடிக்கும்!--அதன்
குறுவிதழ் கவ்விப்
பெண்மீன் கடிக்கும்!

கரையின் விளிம்பில்
ஒற்றை நாரை
கடைசி மீனை
கடத்தக் கணிக்கும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்!--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!

பூவிதழ் குவிந்து
மகரந்தம் மறைக்கும்!--வண்டு
புகுந்து கடந்து
தேனை முகர்க்கும்!

தேனின் மடியில்
உண்டு கிறங்கும்!
தேடிய இன்பம்
திக்குமுக் காடும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்!--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்।

இரவின் வானில்
பிறைநிலா உதிக்கும்!
உறவினில் நாகம்
பிணைந்து தகிக்கும்!

ஒருபுறம் சட்டை
உறிந்த சாரைச்
சரசரத் தோடும்!
சரசம் தேடும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்!--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!

எங்கோ ஒற்றைக்
குயிலது இசைக்கும்!--ஆம்
எனக்கும் சம்மதம்
எதிர்புறம் பதில்வரும்!

இணைகளின் உரசல்
இணைப்பின் கரைசல்
சல்லா பத்தின்
சரிதம் நடக்கும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்!--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!

பூக்கள் உடையும்
பருவ வாசம்
தாக்கும்! மயக்கும்!
தன்னிலை இழக்கும்!

சேர்க்கும் தர்மம்
அமைதியில் தோயும்!
அங்கிரு அணில்கள்
அசந்து துயிலும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்!--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!

அரவம் வாயில்
தவளை சப்தம்!
அடுத்தநாள் இல்லை
தனக்கென கத்தும்!

வாழ்வின் சாரம்
வழங்கிய கணிதம்!
ஒருவுயிர் இழக்கும்
உறுபசி அடங்கும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்!--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!

தாழை மடலின்
குமரித் தழுவல்!
வேகம் பதிக்கும்
காதல் கொதிக்கும்!

பனித்துளி சிலிர்க்கும்
தளிரிதழ் சிணுங்கும்!
கனியின் நறுமணம்
கசியும் கமழும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!


உதயம் விழிக்கும்
இளயொளி திரியும்!
இதயம் குளிரும்
செவ்வொளி விரியும்!

காகம் நீரில்
குளியல் நடத்தும்!
கதிரவன் பனைமரம்
உச்சியில் ஏறும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!


விடியல் முகவரி
அடிவான் எழுதும்!
முடிவில் இரவின்
முத்தம் பதியும்!

கிளிகள் சிறகு
கிர்ரெனப் பறக்கும்!
கிளையில் அமர்ந்து
கிளர்ச்சியில் திமிரும்!

ஆஹாஹா ஆனந்தத் தருணம்--இறை
அருளை வழங்க உயிர்கள் சரணம்!

Hilal Musthafa

No comments: