Wednesday, July 8, 2020

வெட்டுண்ட மரம் போல வீழ்ந்தான் தம்பி.


30 வயதுதான். திடகாத்திரமானவன். 70 கிலோ எடை. ஐந்தேமுக்கால் அடி உயரம். புகை, மது, மாது, இத்யாதிகளென்று கெட்டப் பழக்கமென சமூகம் சுட்டும் எந்தப் பழக்கமும் இல்லாதவன். சித்தா, ஆயுர்வேதம் தொடங்கி நாட்டு மருத்துவம் வரை நல்ல பரிச்சயம் கொண்டவன். ஆரோக்கியம் மீது அத்தனை அக்கறை. லிட்டர் லிட்டராக கபசுரக் குடிநீர் அருந்தி, எப்போதும் கைகளை சானிட்டைஸ் செய்து, மாஸ்க் அணிந்து உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தீவிரமாகக் கடைப்பிடித்தவன்தான்.

வீழ்ந்தவன் அப்படியே மயக்கநிலைக்குப் போனான். அண்ணன் சிவராமன் மடியில் தாங்கியிருக்க, அவனது வாயில் தண்ணீரை ஊற்றினேன். நாக்கை மடக்கி தண்ணீரை உட்கொள்ள மறுத்தான். முகத்தில் பளிச்சென்று குளிர்ந்த நீரை அடித்தவுடன் மயக்கம் தெளிந்தான்.

“ஒண்ணுமில்லைண்ணா. சாப்பாடு ஒத்துக்கலை. வாந்தி வர்றமாதிரி இருக்கு...” என்றவன் ஓங்காரத்தோடு வாந்தியெடுத்தான்.

உடனடியாக மருத்துவரைப் போய் பார்த்தான். ‘ஃபுட் பாய்ஸன்’ என்று சொல்லி, ஏதோ மாத்திரைகளை தந்திருக்கிறார்கள். அடுத்தநாள் வழக்கம்போல வந்தான்.

அவனுக்குள் என்னவோ தோன்றியிருக்கிறது. மீண்டும் மருத்துவரைப் பார்த்தபோது ‘கோவிட் டெஸ்ட்’ எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

உடனடியாக டெஸ்ட் எடுத்தான். ரிசல்ட் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆனது. அதற்குள் அவனுக்கு புதிதாக மூச்சுத்திணறல் பிரச்சினை. காலையில் சரியாக இருப்பவனுக்கு மாலை ஆனாலே மூச்சுத்திணறல்.

ஆம்புலன்ஸைக் கூப்பிடப் போன அறை நண்பர்களிடம், “ஆம்புலன்ஸெல்லாம் வந்தா ஏரியாவில் பிரச்சினை ஆயிடும். ரூமை கூட காலி பண்ணச் சொல்ல சான்ஸ் இருக்கு” என்று மறுத்திருக்கிறான்.

அடுத்தநாள் மூச்சுத்திணறல் இன்னும் மோசமானது. இதற்கிடையே ரிசல்ட்டும் வந்தது. பாசிட்டிவ்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மூச்சுத் திணறித் திணறி தொலைபேசியில் கதறுகிறான். “எப்படியாவது காப்பாத்துங்கண்ணா...” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

நம் தொடர்புகள் அத்தனைப் பேரிடமும் பேசி அவனுக்கு உதவ ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்த நிலையில், திரும்பத் திரும்ப போன் செய்து கதறிக் கொண்டே இருக்கிறான். “மூச்சு விட முடியலைண்ணா... ரொம்ப கஷ்டமா இருக்கு...”

கையறு நிலை.

மறுநாள் அவனுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. நுரையீரல் 35% பணியாற்றவில்லை என்பதைக் கண்டறிந்தார்கள். உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது.

அரசு மருத்துவமனை அளித்த சத்தான உணவு, கனிவான சேவையில் அடுத்த இரண்டு நாட்களில் இயல்பாக சுவாசிக்குமளவுக்கு தேறினான்.

கடந்த ஐந்து, ஆறு நாட்களாக அவனுடைய உடல்நிலை தொடர் கண்காணிப்பில் இருந்தது. நேற்றைய பரிசோதனைகளில் அவன் கோவிட்டிலிருந்து விடுதலை பெற்றுவிட்டது தெரிந்தது. நுரையீரலில் இப்போது வெறும் 5%தான் பாதிப்பு. அதுவும் அடுத்த ஓரிரு நாட்களில் சரியாகி இரண்டு வாரங்களுக்கு முந்தைய ஆரோக்கியத்தை எட்டிவிடுவான்.

இடைப்பட்ட நாட்களில் தினமும் இருமுறை அவனோடு பேசிக்கொண்டிருந்தது மட்டுமே இச்சூழலில் நம்மால் செய்யமுடிந்த உபகாரம். கொரோனாவை கவனமாகத் தவிர்த்து டிக்டொக் தடை, ரவுடி பேபி தற்கொலை முயற்சி, விஜய் வீட்டில் பெண் எடுக்கும் அதர்வாவின் தம்பி என்று பேசிப்பேசியே தம்பியை இயல்புநிலைக்குக் கொண்டு வந்தாயிற்று.

பத்து நாட்கள் ஆஸ்பிட்டல் வாசம் முடிந்து இன்று டிஸ்சார்ஜ்.

சொர்க்கத்தின் வாசல் வரை சென்று, கடவுள் என்று சொல்லப் படுபவருக்கு ‘ஹாய்’ சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறான்.

மிக நெருங்கிய தம்பிக்கு நேர்ந்த கொரோனா அனுபவம் இது.

“அவங்கள்லாம் வெறும் டாக்டர்கள்தான். கடவுள்கள் இல்லை. நமக்குத் தெரிஞ்சதுதான் அவங்களுக்கும் தெரியும்.”

“கொரோனான்னு ஒரு நோயே இல்லை. அது சைனீஸ் கான்ஸ்பிரஸி.”

“அலோபதியிலே ஏமாத்துறானுங்க. சித்த மருத்துவத்துலேதான் இதை சரி பண்ண முடியும்”

“உப்புத் தண்ணியிலே வாயைக் கொப்பளிச்சா போதும்.”

....இம்மாதிரி கொரோனா குறித்து ஏகப்பட்ட கருத்துகள் சோஷியல் மீடியாவில் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால் இஷ்டத்துக்கும் பரப்பப்படுகிறது.

தம்பிக்கு நேர்ந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

ஹோமியோபதி / சித்த மருத்துவம் / யுனானி / ஆயுர்வேதம் / அக்குபஞ்சர் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவமுறைகள் மீது எனக்கும் பெரிய மதிப்புண்டு. வைரைஸை எதிர்கொள்ளும் ஆற்றலுக்கு நானும் ஹோமியோபதி மருந்துகளைதான் உட்கொள்கிறேன்.

ஆனால் -

உயிர் போகும் அவசரத்துக்கு அலோபதிதான் உதவும். அவர்களிடம்தான் ஆக்சிஜன் மாஸ்க் இருக்கிறது. வெண்டிலேட்டர் முறையில் சுவாசம் கொடுக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. நுரையீரல் எவ்வளவு சதவிகிதம் பணியாற்றுகிறது என்பதை அறிந்துக்கொள்ளும் மருத்துவப் பரிசோதனை முறைகள் இருக்கின்றன.

இதுமாதிரி மருத்துவ உபசரணைகள் தேவைப்படாத, கொரொனா பாசிட்டிவ்.. ஆனால் மூச்சுவிடும் பிரச்சினைகள் இல்லாதவர்கள் வேண்டுமானால் சித்த மருத்துவம் உள்ளிட்ட மற்றவற்றை முயற்சிக்கலாம்.

கோவிட் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததுமே, சம்மந்தப்பட்ட நோயாளிக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று தெரிந்தால் சித்த மருத்துவ முகாமுக்கு அலோபதி டாக்டர்களே கூட அனுப்புகிறார்கள். அவர்களும் சித்த மருத்துவத்துக்கு எதிரிகளெல்லாம் இல்லை.

அடுத்து -

அரசு மருத்துவமனையென்றால் அலட்சியப் படுத்துவார்கள் என்று தனியார் மருத்துவமனைகளில்தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்ற மூடநம்பிக்கை.

அரசு முகாம்களில் அஞ்சு பைசா செலவில்லாமல், கொரோனாவிலிருந்து பல ஆயிரம் பேர் விடுதலை பெற்றிருக்கிறார்கள். இதைவிட சிறந்த சிகிச்சையை எந்தத் தனியார் மருத்துவமனையும் வழங்கியதாகத் தெரியவில்லை. ஆனால், பல லட்சங்களை கருணையே இன்றி கறந்திருக்கிறார்கள். 15 நாட்கள் சும்மா வைத்திருந்து பாராசிட்டிமால் போட்டு அனுப்பியதற்கு மூன்றரை லட்சம், நான்கு லட்சம் தண்டம் அழுதிருக்கிறார்கள். சில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் 10, 15, 20 லட்சமெல்லாம் செலவாகிறது என்றெல்லாம் கூட சொல்கிறார்கள்.

இந்த கொரோனாவை எதிர்கொள்ளக் கூடிய நல்ல அனுபவமும், ஆற்றலும் தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளுக்கே பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது. சிகிச்சையும் இலவசம். ஃபைவ் ஸ்டார் ஓட்டலில்தான் டிஃபன் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களை நாம் கையைப் பிடித்து இழுக்க முடியாது. அது அவரவர் விருப்பம்.

தம்பி விஷயத்தில் எல்லாம் நலமாக முடிந்தது என்றாலும், “எப்படியாவது காப்பாத்துங்கண்ணா...” என்கிற குரல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

சரி, மயங்கி விழுந்த தம்பிக்கு சிஷ்ருசை செய்த நானும், சிவராமனும், அவனை ரூமுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்ற இன்னொரு தம்பி லலித் சர்மாவும் என்ன ஆனோம்?

ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டோம். காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் என்று எந்த அறிகுறிகளும் இல்லையென்று தெரிந்தவுடன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டோம்.

வாட்ஸப் வதந்திகளை நம்பாதீர்கள். கொரோனாவிலிருந்து உங்களை மருத்துவர்கள் மட்டுமே காக்க முடியும். இச்சூழலில் அரசு மட்டுமே நமக்கு இறுதி நம்பிக்கை.

No comments: