Tuesday, July 7, 2020

· மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதி வைக்காதே

Saif Saif
· 
மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதி வைக்காதே என்று
என்னிடம் பலபேர் சொல்லியது உண்டு.

அது சிலசமயம் உண்மையாக கூட இருக்கலாம்..

(ஆனாலும் சில உள்ளக்
கிறுக்கல்கள் வந்து விழுவதை தடுக்க முடியவில்லை..)

சீரியஸான விஷயங்கள் கூட சிலருக்கு காமெடியாகவே இருக்கிறது..

படிப்பவரின் தரம் சிந்தனை பொறுத்து அது எடுத்துக் கொள்ளப்படும்..

வாழ்க்கை எல்லோருக்கும் நல்லவர்களையும் கெட்டவர்களையும் மிக கெட்டவர்களையும் அடையாளம் காட்டி கொண்டே இருக்கிறது..

சிலருடைய நடைமுறை வாழ்க்கை அவர்களுக்கு வெறுப்பை மட்டுமே காட்டி வளர்த்து வருகிறது..

நல்லவராக யாரையும் பார்த்தே இருக்க மாட்டார்கள்..பழகியவன் ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு கெடுதலை உண்டு
பண்ணியிருப்பான்.. பலரும் காரியத்திற்காக மட்டுமே கால்புடித்திருப்பார்கள். இப்படி பல நிகழ்வுகளின் பாதிப்பால் இதுபோன்றவர்களின் மனது எப்போதும் இறுகிய நிலையில் கிடக்கும்..

இந்த விதிவிலக்குகளில் இருந்து மீண்டு வருபவர்களால் மட்டுமே பிறரை பார்க்கும் கண்ணோட்டம் மாறும்.. நெகடிவ் எண்ணங்கள் மறையும்.

இதுபோக சிலர்..,

வெட்கம் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது என்றும் ஆண்பிள்ளை என்றால் முரட்டு தனமாக தான் இருக்க வேண்டும்.. பிறரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை ஆண்களுக்கு இருக்கக் கூடாத செயல் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

இதிலும் விதிவிலக்கானவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

உஸ்மான் (ரலி)
அவர்கள் அபூபக்கர்
உமர் (ரலி) ஆகியோரைவிட அதிக நாணம்
உள்ளவராக
இருந்ததாக வரலாறு வரைகிறது..

அதனால் தான்
நபி (ஸல்)
அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் முன் கூடுதல் கண்ணியமாக இருப்பார்கள்.. வெட்கமுள்ளவருக்கு
உள்ள தனிச்சிறப்பு இது..
(வரலாற்றில் காணப்படும்
நிகழ்வு இது.)

தன் இருபிள்ளைகளை உஸ்மான் (ரலி)க்கு மணமுடித்து கொடுத்ததும் உதுமான்(ரலி)மேல் வைத்திருந்த கூடுதல் கண்ணியம் தான் காரணம்..

பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்து மென்மையான மனதுடன் பழகுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்..

புன்னகை முகத்துடன் இருந்து கோபத்தில்
சீறி விழுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கவே செய்கிறார்கள்..

சிலர் வாய்சொல்லில் எப்போதும் வீரராக இருப்பார்கள்.. அவர்கள் பேச்சை யாருமே கேட்காத போது வாய்ச்சொல் வெறும் வீச்சுக்கு பயன்படும்.. விரோதத்தை மட்டும் வளர்க்கும்..எந்த பலனையும் தராது..

நபிகள் நாயகம் எவ்வளவு மென்மை குணம் உள்ளவர்களாக இருந்தார்கள்.. எதிரிகளை கூட மன்னிக்கும் மனப்பக்குவத்தை
எப்படி பெற்றார்கள்..!?

ஆயிஷா(ரலி) மீது அவதூறு கூறிய இப்னு உபைக்கு உமர் தடுத்த பிறகும் ஜனாஸா தொழுகை நடத்தும் கருணை மனசு
எப்படி வந்தது..!?

உமர்(ரலி) அவர்கள் நபிகள் காலத்தில் எடுத்ததெற்கெல்லாம் வாளை உருவும்
முரட்டு தனத்தோடு இருந்தார்கள்..

அவர் கலீபாவாக பொறுப்பேற்ற
பிறகு எப்படி மென்மையானவராக மாறினார்கள்..!?
(குடிகளின் நிலையறிய சிரியா பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ஒரு மூதாட்டி உமரென்று அறியாமல் அவரிடமே குடிமக்களை பற்றிய நிலவரங்களை அறிய தெரியாதவர் எதற்காக கிலாஃபத் செய்கிறார் என்று சினத்தோடு வினவிய போது கோபம் கொண்டு வாளை உருவவில்லை தாங்க முடியாத வருத்தத்தில் அங்கே அமர்ந்து அழுதார்கள். இது வரலாறு)

தான் இறந்து போனால் நபி(ஸல்) அருகில் அடங்கப்பட(மையவாடி) இருந்த இடத்தை உமர்(ரலி) மரண தருவாயில் ‌ மகனிடம் கேட்டு அனுப்பியதும் சம்மதித்து விட்டுகொடுக்கும்
பெரிய மனசு ஆயிஷா (ரலி)க்கு எப்படி வந்தது..!?

வரலாறுகளை தெரிந்து வைத்தால் மட்டும் போதாது.. அதில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்..
அதன் படி நடக்க நம்மை பக்குவப்படுத்த மனதைக் கற்பிக்க வேண்டும்..

இன்று சாத்தான்குளம் முதல் உ.பி வரை உள்ள இந்த கொலைவெறிக்கு என்ன காரணம்.. மனதில் இரக்கக்குணம் தொலைந்து அரக்கக்குணம் என்ற மன பிறழ்வு வந்ததால் தானே..

உ.பியில் காவல் அதிகாரிகளை கொன்றவனை அவனை பெற்ற தாய் சுட்டு கொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்..

பிறந்த போதே
அந்த மகனை கொன்றிருந்தால் இப்படி சொல்லும் அவசியம் வந்திருக்காது..

கத்தி எடுத்தவனுக்கு சாவு கத்தி தான்..

உன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து தான் உனக்கு அன்பு கொடுக்கப்படுகிறது என்றிருக்குமானால் அந்த பணம் உன்னை விட்டு போனபிறகு உன்னிடம் அன்பு காட்ட யாருமே இருக்க மாட்டார்கள்..

அந்த பயத்தின் காரணமாக தான் உங்களுக்கு முன்னால் நான் போய் சேர்ந்து விட வேண்டும் என்று மனைவி கணவனிடமும்

என்னை அடக்கி விட்டு நீ போ என்று கணவன் மனைவியிடமும் சொல்லும் நிலை இருக்கிறது..

ஆனால் நம்ம இரண்டு பேரும் ஒன்று போல் சேர்ந்து போய் சேருவோம் என்று சொல்லும் நிலை வரவில்லை..(விதிவிலக்குகள் இருக்கிறது) காரணம் இங்கும் சுயநலம் தான் தலைதூக்கி நிற்கிறது..

வசதியான நிலையில் இளமையில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு உணவு சாப்பிடும் பழக்கம் இருந்து கடைசி காலத்தில் கட்டிலில் கிடக்கும் போது மலம் போய் விடும் என்று வெறும் நீராகாரத்தோடு நிறுத்தி விடும் அவலமும் இந்த பணத்தை அதிகமாக நேசிக்கும் உள்ளங்களால்
மட்டுமே சாத்தியம்..

தினம் தினம் பார்க்கும் அனுபவிக்கும்..
அனுபவித்த பல விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. அவ்வப்போது பகிரலாம் தான்..அதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடப்போவதில்லை என்பதும் தெரியும்..

யாரையும் திருத்துவதற்காக திருந்துவதற்காக எதையும் சொல்லிச் செல்லவில்லை..
என்னை நானே
திரும்பி பார்க்க
திருத்திக் கொள்ள வேண்டியது இருக்கிறது.. (on this day ல் கூட பார்த்து கொள்ளலாம்..)

மனம் ஒரு குரங்கு என்பார்கள்.. தனக்கு எதுவும் நடக்காத வரை அது ஒரு சம்பவம்.. சுவாரஸ்யம். தனக்கு நடக்கும் போது அது வேதனை.. சோதனை..

அடுத்தவனை போல வாழவேண்டும் என்று நினைக்கும் போதே அங்கு பொறாமை தலை
தூக்க ஆரம்பிக்கிறது..
எதிர்பார்ப்பு வருகிறது..
காழ்ப்புணர்ச்சி வருகிறது..

அதேசமயம் அவன் சாகும் போது அந்த பொறாமை மறைந்து அவன் மீது கரிசனம் வந்து விடுகிறது..

மனதின் அமைப்பு அப்படி தான்..

வேடிக்கையும் விளையாட்டும் நிறைந்த உலகம் மனதை வைத்து விளையாடி வருகிறது..

அந்த விளையாட்டில் மன சைத்தானை கட்டிப்போட்டவர்கள் ஜெயிக்கிறார்கள்..

பலியானவர்கள்
குறுகிய குதர்க்க
கேலி சிந்தனைகளை
வளர்த்து காலத்தை கடத்துகிறார்கள்..



No comments: