Thursday, July 23, 2020

காளியாகுடி_காஃபி_பில்டர்!

காளியாகுடி_காஃபி_பில்டர்!


மயிலாடுதுறையில் 18 வருடங்களுக்கு முன் ஒரு கணிப்பொறி பயிற்சி மையத்தை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது!

எல்லா நாளும் இரவு முழுவதும் மாணவர்களுக்கு லேப் கொடுப்போம். வாரத்திற்கு ஒரு நாளென இரவுப் பணியை பகிர்ந்து கொள்வோம்! என்னுடைய முறை புதன் இரவு.

இரவு பதினொரு மணிக்குமேல் லேபில் எங்கள் உதவி தேவைப்படாது. அதன் பிறகு முதுகலை படிக்கும் மாணவர்கள்தான்! அவர்களையே பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு உறங்கி விடுவேன். அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்து பல் துலக்கிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பேப்பரை வாங்கி அதை அரிவாள் போல காலரின் பின் புறம் செருகிக் கொண்டு மணிக் கூண்டு அருகிலிருக்கும் டிபன் காளியாகுடியை வந்தடைவேன்.

ஓட்டலை திறந்து வைத்து, சாம்பிராணி போட்டு பூஜை செய்து கொண்டிருப்பார் சாமா என்ற அண்ணா! மெல்ல நடந்து சென்று கடைசி மேசையில் அமர்ந்தால் கமகமவென்று நெய் தாளித்த பொங்கலை கிளறும் மணமும், கொதிக்கும் பில்டர் டிகாக்ஷன் மணமும் கலந்து ஒரு கலவையான மணம் நாசியையும் மனதையும் நிறைக்கும்.

உள்ளே "தை நாயி! (தையல் நாயகி!) சட்னிய கல்லேர்ந்து எடுத்திட்டியா? எலயெல்லாம் கழுவியாச்சா?" என்ற கிச்சா மாமாவின் அதட்டும் குரல் கேட்டுக்கொண்டிருக்கும்!

காலரில் செருகியிருந்த அரிவாளை... சாரி பேப்பரை எடுத்து முதல் பக்கத்தை மேய்வதற்குள் "வாங்கோ" என்ற வைத்தா அண்ணாவின் குரல் கேட்கும். பதில் வணக்கம் சொல்வதற்குள் இலையைப் போட்டு குறு மிளகும் நெய்யும், முந்திரியும் மிதக்கும் பொங்கலை ஆவி பறக்க இலையில் வைத்து விட்டு, பச்சை மிளகாயும், தேங்காயும் சேர்த்தரைத்த கெட்டி சட்னியையும் வைப்பார். கூடவே உயரமான டம்ளரில் பதமான வெந்நீர்!

காலை ஆறு ஆறரை மணிக்கு அந்த நெய் மிளகுப் பொங்கலையும் தேங்காய் சட்னியையும் கலந்து அடிப்பது தெய்வீகம்! கூடுதலாக கொஞ்சம் இஞ்சி தொக்கும் வைப்பார் வைத்தா அண்ணா!

அநேகமாக வியாழன் காலைகளில் முதல் கஸ்டமர் நான்தான்! அதனால்தான் இஞ்சி தொக்கு சலுகை! அதற்குப் பின் வருபவர்களுக்கு கிடையாது! அது பணியாளர்களுக்காக தயார் செய்வது!

சாப்பிட்டு கை கழுவி வந்ததும் இரண்டு பித்தளை டபரா செட்களில் ஆவி பறக்கும் ஃபில்டர் காஃபியை கொண்டு வந்து வைத்து விட்டு ஃபேனை நிறுத்தி விடுவார் வைத்தா அண்ணன்! ஒரு டம்ளர் காஃபி போதாது எனக்கு!

கள்ளிச் சொட்டு போன்ற பாலில் முதலில் இறங்கிய டிகாக்ஷனை ஊற்றி நிறைய ஜீனி போட்டு ஆற்றாமல் கொண்டு வந்து வைத்து விடுவார்! ரொம்ப ஆற்றாமல் சூடாகவே குடிக்கும் வழக்கம் எனக்கு! அந்த காஃபியை வாயில் வைத்தால் நாவில் ஒட்டிக் கொள்ளும்!

இரண்டு காபியும் குடித்து விட்டு மெல்லக் கையூன்றி எழுந்து வைத்தா அண்ணாவுக்கான டிப்சுடன் காசைக் கொடுத்து விட்டு வெளியில் வந்தால் மதியம் மூன்று மணி வரை பசிக்காது. காலை பதினொரு மணி வரையாவது அந்த டிகாக்ஷனின் சுவையும் ஸ்ட்ராங்கும் நாவில் ஒட்டிக் கொண்டே இருக்கும்!

பொதுவாக தஞ்சை மாவட்டத்தில் டிகிரி காபி எனப்படும் பில்டர் காபி பிரசித்தம்! அதில் மயிலாடுதுறையில் காளியாகுடி பில்டர் காபி ஒரு கால கட்டம் வரை வெகு பிரசித்தம்!

காளியாகுடி பில்டர் காபி மட்டுமல்ல, காபி பில்டரும் பிரசித்தம்! யாராவது கல்யாணத்துக்கு பெண் பார்த்துவிட்டு வருபவரை பெண் எப்படி இருக்கிறது என்று கேட்டால் காளியாகுடி காபி பில்டர் போல இருக்கிறது என்று சலித்துக் கொண்டு கூறுவார்!

எனில் பெண் நாலரை அடி உயரத்தில் ஒன்னரை அடி விட்டத்தில் கட்டை குண்டாக இருக்கிறது என்று அர்த்தம்! அதே அளவில்தான் காளியாகுடி காபி பில்டரும் இருக்கும்! கலர் மட்டும் நல்ல புளி போட்டு விளக்கியதால் மஞ்சளாக பளபளவென்று பித்தளையில் இருக்கும்!

காளியாகுடி உரிமையாளர்கள் பிள்ளைகள் படித்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டதால் குத்தகைக்கு விடப் பட்டு தரமும் குணமும் மாறிவிட்டது. இன்றைய யூனிபார்ம் அணிந்த சர்வர்களிடம் அன்றைய நாலு முழ வேஷ்டியும் காசித் துண்டும், காதில் பென்சிலும் அணிந்த வைத்தா அண்ணாக்களையோ அவர்தம் அன்பையோ, வாஞ்சையையோ காண முடிவதில்லை!

புகைப்படம் மாடலே! இது ஏதோ ஒரு ஜானகியின் காபி ஃபில்டர்! அப்போதைய பில்டரை படம் எடுக்க வாய்க்கவில்லை! இப்போது இருக்கிறதா எனவும் தெரியவில்லை!

No comments: