ஓருவன் எவ்வித எண்ணங்களை கொண்டுள்ளானோ அவற்றிற்குத் தக்கபடியே அவன் தோற்றமளிப்பான். அவன் இளமை எண்ணங்களைக் கொண்டிருப்பானாயின் இளமைப் பொலிவுடன் காட்சியளிப்பான். முதுமை எண்ணங்களை கொண்டிருப்பானாயின் முதுமைத் தன்மையுடன் தோற்றம் வழங்குவான்.
இதற்கு காந்தியடிகள், பண்டித நேரு ஆகிய இருவரின் வாழ்க்கையும் சிறந்த சான்றுகளாகும்.
காந்தியடிகள் தம்முடைய வாணாளின் ஐம்பதாவது மைல்கல்லை தாண்டியதுமே தம்மை கிழவரென்று கருதத் தொடங்கிவிட்டார். எனவே மக்களும் அவரை அப்பொழுதே ‘காந்தி தாத்தா’ என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள். அவரும் அப்பொழுதே பல்லெல்லாம் விழப்பெற்று பொக்கை வாயில் புன்னகை மிளிர காட்சி வழங்கலானார்.
ஆனால் பண்டித நேருவோ, தம்முடைய வாழ்க்கை பாதையில் 73-வது மைல்கல்லை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது கூடத் தம்மை இளைஞரென்றே கருதி கொண்டார். தம்முடைய பிறந்த நாளை மக்கள் கொண்டாடுவதை கூட வெறுத்தார். அவ்விதம் செய்வது தம்முடைய வயதைப் பற்றியே சிந்தனைப் பற்றியிருக்கும் தமக்கு தம்முடைய வயதை நினைவுறுத்தி கிழவனாக்க முயல்வதென்றும் அவர் வருந்தினார்.
இளமையை என்றென்றும் பெற்றிருப்பதற்குச் சிறந்த வழி சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் ஒரு சிறுவராக மாறி அவர்களுடன் சிரிக்கவும், விளையாடவும் செவ்யது தான் என்பதை உணர்ந்து அவ்விதமே செய்தும் வந்தார். எனவே காந்தியடிகளை அவருடைய ஐம்பது வயதுக்கு மேற்பட்டு தாத்தா என்று அழைத்த சிறுவர்கள் 73 வயது நிரம்பப் பெற்றிருந்த நேருவை ‘சாச்சா’ என்று அழைத்தார்கள்.
உங்களின் தலைமை அமைச்சருடன் சேர்ந்து எங்களால் ஒத்து நடைபோட இயலவில்லையே, அவர் அவ்வளவு வேகமாக அல்லவா நடக்கின்றார்! என்று ரஷ்யர்கள் வியப்பு மொழி பகர்ந்தார்கள். எழுபத்து மூன்று வயது நிரம்பப் பெற்றிருந்த போதும் அவர் இளமை எழிலுடன் காட்சி வழங்கினார். அவருடைய கடும் உழைப்பைக் கண்டு இளைஞரும் வெட்கித் தலைகுனிய வேண்டியிருந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படை என்ன ? அவருடைய இளமை எண்ணம் தான்.
ஆதலின் ஒருவன் எப்பொழுதும் இளமை எழிலுடன் தோற்றமளிக்க விரும்புவானாயின் அவன் இளமையின் பகைவர்களைத் தன்னுடைய மூளையை விட்டும் விரட்டியடிப்பானாக. தனக்கு வயதாகிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு இளைஞர்கள் செய்யும் இன்பம் பயக்கும் நற்செயல்களில் ஈடுபடாமலும் சிறுவர், சிறுமியர்களுடன் சேர்ந்து அவர்களில் ஒருவனாகத் தானும் ஆகி கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடாமலும் இருப்பதே இளமையின் இருபெரும் பகைவர்கள் என்று நான் கூறுவேன்.
--
( யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1955 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அப்துற்-றஹீம் எழுதிய ‘ எண்ணமே வாழ்வு ‘ என்ற நூலிலிருந்து )
No comments:
Post a Comment