Monday, July 27, 2020

கதவுகள்

கதவுகள்
Senthilkumar Deenadhayalan


எங்கள் வீட்டுக் கதவுகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்! அதில் கி. ரா வின் கதவு சிறுகதையை வாசித்துப் பாருங்கள் என்று சொல்லி இருந்தேன்!

நண்பர் ஒருவர் அது ஏழையின் வீட்டுக் கதவு, உழைத்து சம்பளம் வாங்குபவர்கள் வீட்டு கதவிற்கும், அவனுக்கு சம்பளம் தருபவன் வீட்டு கதவிற்கும் வித்யாசம் உண்டல்லவா என்று கேட்டிருந்தார்.

ஏழை, பணக்காரன், யார் வீட்டுக் கதவுகளுக்கு உள்ளும் புறமும் பல கதைகள் இருக்கும். அதில் களிப்பும் இருக்கும்! கண்ணீரும் இருக்கும். அதில் பொருளாதார வித்யாசங்கள் ஏதுமில்லை!

மகிழ்ச்சி மட்டுமல்ல, பல சொல்லொணாத் துயரங்களும் கூட அந்தக் கதவுகளில் பின்னால் புதைந்து இருக்கலாம்!

கதவே இல்லாமல் சாக்கு படுதா போட்டு மறைத்த வீடுகளுக்கும் அந்தக் கதவு ஒரு கௌரவம் தான்!

கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் கதவுகள் ஒரு சம்சாரி வீட்டிற்கு எவ்வளவு கௌரவம் என்று ஒரு உதாரணம் சொல்கிறேன். கிராமங்களில் பெரும்பாலும் விவசாயக் குடிகள். அவர்கள் என்ன தான் பெரிய விவசாயியாக இருந்தாலும் சிறிய விவசாயியாக இருந்தாலும், கையில் காசு இருக்காது!


நகையை அடகு வைத்தோ, கடன் வாங்கியோ தான் நடவு நடுவார்கள். குறுவை அறுத்து தீபாவளி, தாளடி அறுத்து பொங்கல், அதன் பின் நகை மீட்டல், கடன் அடைத்தல் போன்றவை இருக்கும்.

இவர்கள் பெரும்பாலும் நகை அடகு வைப்பதோ கடன் வாங்குவதோ, கிராம கூட்டுறவு சொசைட்டிகளிலும் விவசாய கூட்டுறவு சங்கங்களிலும் தான்.,

இவர்கள் தவணை முடிந்த கடன்களை வசூலிக்க கிராமங்களுக்கு கிராமங்களுக்கு வருவார்கள். வந்து பணம் கட்டச் சொல்வார்கள். இருப்பவர்கள் கையிலிருப்பதைக் கட்டி தவணை வாங்கிக் கொள்வார்கள்.

இல்லாதவர்களிடம் ஜப்தி நடவடிக்கை என்பார்கள்! ஜப்திக்கு எந்த சட்ட பூர்வமான நோட்டீசும் கொடுத்திருக்க மாட்டார்கள்!

இவர்களில் வரும் அதிகாரிகள் அலுவலர்களை விட, கூட வரும் கடை நிலை ஊழியர்களின் அட்டகாசம் தான் தாங்க முடியாது. இவர்கள் விவசாயிகள் வீடுகளிலிருந்து எதை ஜப்தி செய்வார்கள் தெரியுமா?

ஆடு மாடுகளையோ, ஏர் கலப்பைகளையோ, அல்லது வீட்டிலிருக்கும் அண்டா குண்டாக்களையோ அல்ல! வீட்டின் முன் வாசல் கதவுகளை!

ஒரு வீட்டின் முன் வாசல் கதவுகளைப் பிடுங்குவதை விட அவமானம் கிராமங்களில் வேறொன்றும் கிடையாது! பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் கழுவுவதற்கு கூட கழற்றாமல், ஈரத் துணியால் தான் துடைப்பார்கள்!

அப்படிப் பட்டவர்களின் வீட்டுக் கதவுகளைப் பிடுங்குவது, அவர்களின் ஈரல் குலையையே பிடுங்குவதற்கு ஒப்பானது! கதவில் கை வைத்தவுடன், காலில் விழுந்து கெஞ்சிக் கதறுபவர்களை பார்த்திருக்கிறேன். உடனே கொல்லைக்கு ஓடிப் போய் தூக்கு மாட்டிக் கொண்டவர்களையும் பார்த்திருக்கிறேன்.

தெருவிலுள்ள மற்றவர்கள் தம்மிடம் இருப்பதைக் கொடுத்து மற்றவர்களின் மானத்தைக் காப்பார்கள். அப்படியும் இயலாதவர்கள் வீடு, அந்தக் கதவுகள் திரும்பி வரும் வரை, ஒரு மரண வீட்டைப் போல் துக்கமும், அவலமும் பொங்கி வழிந்திருக்கும்!

கதவென்பது வெறும் பாதுகாப்போ, தடுப்போ அல்ல! அதையும் தாண்டி அது கிராம மக்களின் கௌரவம், மானம்!

அது பர்மா தேக்கில் செய்ததானாலும் சரி, படுதா சாக்கில் செய்ததானாலும் சரி!

Senthilkumar Deenadhayalan

பதிப்பித்தவர்


No comments: