Tuesday, July 21, 2020

மகராஜரும்_மகராசியும்


மகராஜர் என்ற அடைமொழி சிலருக்கு வியப்பாக இருக்கலாம்: அவர்களை அறியாதவர்களுக்கு! அவர்களைத் தெரிந்தவர்களுக்கு இந்த அடைமொழி ஓர் ஆச்சர்யக் குறி இல்லை.
ஏனெனில் அவர் தன்னளவில் ஒரு சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தவர், சட்டைப் பையில் காலணா இல்லாதிருப்பினும்!

இந்த அடை மொழிக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பல வால்யூம்கள் பலரால் எழுதப்படும் என்ற நம்பிக்கை உண்டு இன்ஷா அல்லாஹ்.

அவர்களது இந்த நினைவு தினத்தில் அவர்களைப் பற்றிச் சிந்திப்பதை விட, அவர்களுடைய வாழ்க்கைத் துணைவியாகிய நர்கீஸ் அம்மா அவர்களைப் பற்றி எழுதுவது சாலப் பொருத்தம் என்று நினைக்கின்றேன்.

#நர்கீஸ்_அம்மா
அவர் பெற்றெடுத்த ஐந்து பிள்ளைகளுக்கு மாத்திரமல்லாமல், முஸ்லிம் லீக்கர்கள் அனைவருக்கும் அன்னையாக விளங்கியவர்.

#அவர்_கையால்_அமுதூட்டப்படாத_முஸ்லிம்_லீக்_செயல்வீரர்கள்_யாரேனும்_உண்டா?
#தலைவரைப்_பார்க்க_வாலஸ்_கார்டனுக்கு_வந்தவர்களில்_பெரும்பாலோனோர்_ஓர்_கவளமாவது_உண்டிருப்பர்.

காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து விடும் தலைவர் அவர்கள் இருக்கையில் அமர்ந்தவுடன், தன் இல்லாளுக்குத் தான் முதல் தொலைபேசி!

நலமே அலுவலகம் வந்து சேர்ந்தேன் என்ற செய்தி! அதற்காக அந்த ஆன்மா அங்கே காத்துக் கொண்டிருக்கும்!

எத்தகைய நல்லறமாம் இல்லறம் இத்தனை சமுதாயப் பணிகளுக்கு மத்தியில்!

பிறகு சரியாக பகல் 12 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மற்றுமொரு தொலைபேசி!

பின்பு
ஸலாம் பாய் என்றொரு கணீர் குரல்!

பெரியகுளம் மர்ஹூம் அப்துஸ் ஸலாம் பாய் அவர்கள் அவர்களது முறையிலே பணிவாக கதவைத் திறந்து கொண்டு வருவார்கள்.

முஸ்லிம் லீக் அன்பர்கள் வெளியூரில் இருந்து யாரும் வந்துள்ளார்களா? வந்திருந்தால் எத்தனை பேர்? என்று கேட்டுக் கொள்வார்கள்.

பிறகு எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு 8 பேர், 10 பேர், 15 பேர் என்று தலைவர் அவர்கள் தொலைபேசியில் அன்னை அவர்களிடத்தில் கூறுவார்கள்.

இன்றும் அந்தப் பெரிய தூக்குச் சட்டியும், பாதி ஆள் உயர டிஃபன் கேரியரும் கண்ணுக்குள் நிற்கின்றது.

அன்னையவர்களின் கரத்தால் சமைக்கப்பட்ட அமுதம் அந்தப் பெரிய தூக்குச் சட்டியில் பத்திருபது பேருக்கு சோறும், ஆளுயர டிஃபன் கேரியரில் ஆனமும், கூட்டும், வறுவலும், பொரியலும், ரஸமும் டிரைவர் முஸ்தஃபா பாய் அவர்கள் தூக்கிக் கொண்டு வருவது இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றனதே யா அல்லாஹ்!

அது தினமும் சாப்பிடுகின்ற சாப்பாடாக அல்லாது ஒரு விருந்தாகவே அமைந்திருக்கும்.

இவ்வாறு ஒரு நாள் அல்ல, ஒரு வாரம் அல்ல, அல்லது ஒரு மாதமல்ல!
அன்னையவர்கள் வாழ்ந்த காலம் முழுவதும் தலைவர் அவர்களுக்கு அமுதூட்டிய அந்தக் கரம் தலைவர் அவர்களைப் பார்க்க வருகின்ற தாய்ச்சபை செயல் வீரர்கள் அனைவருக்கும், குறைகளுக்குப் பரிகாரம் காணத் தேடி வந்த சமுதாய அன்பர்கள் அனைவருக்கும் அமுதூட்டியது!

ஏனெனில் அந்த அன்னை அவர்கள் விருப்பப்படியே, தலைவர் அவர்கள் இவ்வுலகை விட்டு மறைவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டார்!

அந்தச் சத்தியவதியின் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்ட விதம் தான் என்ன!

தன் கணவருக்கு பதினெட்டு ஆண்டுகள் தான் இளையவராக இருந்தபோதும், தலைவர் அவர்களுடைய காலத்திலேயே தன் உயிர் பிரிந்து விட வேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொண்டே இருந்ததை இறைவன் ஏற்றுக் கொண்டான்.

#அவரின்_மனைவியாக_என்_உயிர்_பிரிவதல்லவா_எனக்குப்_பெருமை!
#எனக்கென்று_ஓர்_அங்கீகாரம்_உண்டா_என்று_துடித்துக்_கொண்டேயிருந்த_புண்ணிய_ஆன்மா!

சென்னையிலேயே புகழ் வாய்ந்த ஓர் வக்கீலின் மகளாகப் பிறந்து, வாழ்க்கையின் உயர்ந்த நிலையிலிருந்து வந்த பொழுதிலும், ஏற்றுக்கொண்ட துணையின் ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் ஈடு கொடுத்துப் பயணித்து அதன் முழு பாரத்தையும் வெளியுலகிற்குத் தெரியாமல் தாங்கி, #புன்னகையோடு_இப்பூவுலகை_விட்டுப்_பிரிவதற்கும்_ஒரு_வரம்_வேண்டும்!

#அவ்வரம்_பெற்றவரின்_தளிர்_கைப்_பிடிப்பதற்கும்_ஓர்_தந்தக்_கரம்_வேண்டும்!

#வரம்_பெற்றவரையும்_கரம்_பற்றியவரையும்_கண்டு_களிப்பதற்கும்
#அவர்களோடு_உண்டு_உறவாடுவதற்கும்_சிறு_நல்லறமாவது_செய்திருக்க_வேண்டும்!

அந்த நல்லறம் பெற்ற பலநூறு பேரில் இப்பாவியும் ஒருவனே!

04-11-1997 அன்று அன்னை மறைந்தார்!
11-04-1999 அன்று தாய்ச்சபையினர் அனைவருக்கும் தந்தையாய் இருந்த தலைவர் மறைந்தார்!

என்னை நினைக்கும் பொழுதெல்லாம், என் இல்லாளையும் நினையுங்கள் என்று சொல்லாமல் சொல்கின்றன மறைந்த தேதிகள்!

அவர்களின் இதயங்கள் இடம் மாறிக் கொண்டதைப் போல் மாதமும், தேதிகளும் மாறிக் கொண்டன போலும்!

#மகராஜரும்_மகராசியும்
#இன்ஷா_அல்லாஹ்_இன்னும்_வரும்_குறு_தொடராய்!

யா அல்லாஹ்!
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பொருட்டால், அவர்கள் புனிதக் குடும்பத்தினர் பொருட்டால் தலைவர் மற்றும் அம்மா அவர்களது மண்ணறை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் மணமுள்ள வாழ்க்கையாக ஆக்கியருள்வாயாக! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

No comments: