Tuesday, June 30, 2020

நட்புகளின் கூடல் மகிழ்வின் தேடல் ....


வயல் வெளிகள்
வாயல் திறக்க
ஜில்லென்ற காற்றடித்து
குமரியை போர்த்தும்
பச்சை பசேலென்ற
சேலை உடுத்திய சோலை ....

இடலாக்குடி குடும்பங்களின்
வாரிசோடும் பாரிசோடும்
அழகான இயற்கை
கைகள் குலுக்குகிறது ....

மனப்பை நிறைய
ஆனந்தம் நிரப்பி
பசுமையின் வனப்பை
ரசிக்கும் பண்பர்கள் ....

இரவை அழைக்கும்
ரம்மிய மாலையில்
சூரிய ஒளியது
கம்மிய வேளையில்
அளவான அளவளாவல் ....

அன்பெனும் கூடங்களின்
அங்கமானவர்கள்
பாசமெனும் ஓடங்களில்
சங்கமமானவர்கள் ....

கொரோனா ஊடுருவலில்
நன்னிலை இழந்த
உலகச் சூழலின்
பன்னிலை குறித்து
தினமும் பேசுகையில்
தன்னிலை பேணும்
நல்ல நண்பர்கள் ....

இலைகள் அசைந்து
உடலை தழுவுகிற
தென்றலின் தூவல்
சுகமாக வருடுகையில்
கையில் அள்ளியெடுத்து
ஆவல் கொண்டு
மெல்லும் சீவல்
சவைத்து சுவைத்ததும்
குடலுக்குள் தாவல் ....

சுசீந்திரம் போகும் பாதையில்
சாலைகளின் மருங்கொன்றில்
சுதந்திரமாக அமர்ந்து
இருக்கைகளை ஆக்கிரமித்து
இரு கைகளை உயர்த்தி
உரையாடி மகிழுகிறார்கள் ....

பல பணிகள் தவிர்த்து
சில மணிகள் ஒதுக்கி
புன்னகைக்கும் நட்பில்
எண்ணங்களின் மீட்பில்
நிதமும் சந்திக்கட்டுமாக
ஆரோக்கியம் நிலைக்கட்டுமாக
இறைவன் அருளட்டுமாக
உளமார்ந்த வாழ்த்துக்கள் ....

விழிகளை நனைக்கும்
காட்சிகளின் கோர்ப்புக்கும்
செவிகளை தாலாட்டும்
பாடலின் சேர்ப்புக்கும்
அருமையான பாராட்டுக்கள் ....

'காணொளி தென்றல்'
Mohamed Ansari அவர்களின்
காட்சியொளி
அதை படமாக்கிய விதமே
அவரின் திறமைக்கு
சாட்சியொளி ....

அப்துல் கபூர்


29.06.2020 ....

No comments: