Thursday, June 11, 2020

தமிழ்முஸ்லிம் என்று சொல்வதேன்?


அண்ணா, நான் தமிழ்ஹிந்து என்று என்னை என்றும் சொல்லிக் கொண்டது கிடையாது. தமிழ்முஸ்லிம் என்று ஒரு முகநூல் பக்கம் தொடங்கி ஒரு தமிழ் ஆர்வலர் பிரகடனம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. வெல்வது மனிதநேயமாகட்டும். நன்றி.

நீங்கள் தமிழ்ஹிந்து என்று உங்களைச் சொல்லிக்கொள்வதும் சொல்லாமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

ஆனால், அப்படிச் சொன்னால் அது சரியானதுதான், அதில் பிழை என்று ஏதும் இல்லை.

தமிழ் எங்கள் மொழி இஸ்லாம் எங்கள் வழி அதுவே தமிழ்முஸ்லிம்.

இது யாரையும் நோகடிப்பதற்காக அல்ல. எந்த ஏற்றத்தாழ்வுகளையும் கற்பிப்பதற்காகவும் அல்ல.


ஒருவன் தன் பெயரைச் சொல்வதும் முகவரியைச் சொல்வதும் வேற்றுமையை உருவாக்குவதற்காக அல்ல.  தான் யார்? அவன் எங்கிருந்து வருகிறான்? என்று சொல்வதற்காக மட்டுமே.

நீங்கள் ஓர் இந்து. மோடியும் ஒர் இந்து. ஆனால் அவரின் தாய்மொழி குஜராத்தி உங்களின் தாய்மொழி தமிழ்.

உங்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று தாய்மொழி சார்ந்தது. அதனால் ஏற்றத்தாழ்வுகள் என்று ஏதும் இல்லை.

சிலர் நினைப்பதுபோல அரபுமொழி அனைத்து முஸ்லிம்களுக்கும் தாய்மொழியல்ல. இருக்கவும் முடியாது.

தமிழ்தான் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் தாய்மொழி. தமிழ் எங்கள் தாய்மொழி என்று சொல்வதில் தமிழ் முஸ்லிம்களுக்குப் பாசம் நேசம் பெருமை எல்லாம் உண்டு.

இஸ்லாம் எந்த மொழியையும் மற்ற எந்த மொழியையும்விட உயர்வானது என்றோ அல்லது தாழ்வானது என்றோ கூறவில்லை. அப்படிக் கூறுவதை ஏற்பதும் இல்லை.

#தமிழ்முஸ்லிம்

கனடா கவிஞர் புகாரி

No comments: