அனைத்தும் உடைக்கும்...!
வந்தோம் இருப்போம் போவோம்
மரணமில்லை!
வந்தது போனது இதுதான்
நடப்புஎல்லை!
( வந்தோம்...)
வானம் படைத்தவன் பூமி படைத்தவன்
வாழ்வையும் தருவான்---மண்
ஆன மனிதனைக் கொத்துக் கொத்தாய்
அழிக்கவா செய்வான்?
( வந்தோம்...)
ஓடும் நதியில் புரளும் பரல்கள்
இடம்தான் மாறும்---இதில்
போடும் கணக்கில் தப்புகள் இல்லை
கடந்தும் போகும்!
இருட்டறைச் சுவற்றில் ஒட்டிக் கிடந்தது
உருவம் ஆகும்---அது
விருட்டென மண்ணில் குதித்தே ஒருநாள்
பிணமென ஏகும்!
( வந்தோம்...)
உருளும் வாழ்வு தனது போக்கை
நிறுத்தவும் நேரும்---அதை
இருளும் பகலும் இல்லா வெளியில்
போடவும் கூடும்!
( வந்தோம்...)
நோயும் நலமும் காரணம் காட்டும்
பொம்மை யாட்டம்---இந்த
வாயும் வயிறும் அதற்கென வாய்த்தக்
கானல் தோற்றம்!
( வந்தோம்...)
சொத்தும் பத்தும் நிரந்தரம் என்னும்
மானுடக் கூட்டம்---அது
கத்தும் கதறும் துடிக்கும் நடிக்கும்
கண்ணீர் கொட்டும்!
( வந்தோம்...)
தோட்டம் துறவு ஆட்டம் பாட்டம்
பஞ்செனப் பறக்கும்---வான்
காற்றும் நிலவும் கடலில் குதிக்கும்
கூழாய்த் தெறிக்கும்!
( வந்தோம்...)
பெண்நலம் ஆண்பலம் இன்னும் வளமும்
இங்கே கிடைக்கும்---இது
உண்மை இருப்பு நிலைத்தல் மறுப்பு
அனைத்தும் உடைக்கும்!
( வந்தோம்...)
Hilal Musthafa
No comments:
Post a Comment