என் கண்களை கசிய வைத்த ஒரு பின்னோட்டம்......
------------------------------------------
என்னுடைய ஐந்து ஆண்டு கால முகநூல் பயணத்தில் முகநூல் எவ்வளவு பயனுள்ளது என்பதை நேற்று முழுமையாக உணர்ந்துக் கொண்டேன்.
என் குடும்ப திருமண விழாவில் என் சகோதரர்களுடன் பிடித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தேன்.
அதை பார்த்த என்னுடன் தொடர்பில் இல்லாத என் ஊரை சேர்ந்த Hajee Hajee Muhammad Ismayil என்ற சகோதரர் தன்னுடைய பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
அவருடைய நட்பு வட்டாரத்தில் இருந்த என்னுடன் தொடர்பில் இல்லாத கணியூர் ஹமீத் Kaniyur Hameedஎன்ற சகோதரர் எழுதிய பின்னோட்டம் தான் என் கண்களை கலங்க வைத்தது.
அதில் அவர், என் தந்தை என் மீது வைத்திருந்த பாசத்தை தான் அறிவதாகவும், நான் தேவ்பந்த் மதரசாவில் பட்டம் பெற்று ஊர் திரும்பிய உடன் முதல் வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் பயான் செய்து விட்டு குத்பா மேடையில் ஏறி அஸா கோலை கையில் பிடித்து குத்பா ஓத ஆரம்பித்த பொழுது வழக்கம் போல் மிம்பரின் அருகே அமர்ந்திருந்த என் தந்தை ஒரு கணம் தலையை நிமிர்த்தி என்னை பார்த்து விட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்ட பொழுது அவர் முகத்தில் புன்னகையையும் நல்ல ஒரு ஆலிமை நாம் மகனாக பெற்று இருக்கிறோம் என்று பெருமிதம் கொண்டதை தான் அருகே இருந்து பார்த்ததாகவும் உங்களுக்கு, உங்களின் தந்தையின் துஆ இருக்கிறது நீங்கள் மேலும் மேலும் சிறப்பாக வாழ்வீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது எனக்கு புதிய தகவலாக தெரிந்தது. அதை படித்த உடன், என் தந்தையை நினைத்து என் கண்கள் கலங்கியதை என் குழந்தைகளும் கவனித்தார்கள்.
இஸ்லாமிய பாடசாலைக்கு தாளாளராக இருந்த என் தந்தை முஹம்மது யாகூப் வாத்தியார் அவர்கள் கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிப்பார்கள். சிறுவயதில் துடுக்குத்தனமாக இருந்த நான் பலமுறை அவர்களிடம் அடி வாங்கியுள்ளேன். நான் புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்டபதால்மகிழ்ச்சி அடைந்து வெளியூர்களுக்கு என்னை அழைத்து செல்வார்கள். அப்பொழுது நிறைய கேள்விகள் அவர்கள் என்னிடம் கேட்டு அதற்கு விடையும் சொல்லி தருவார்கள். அரசியல் கூட்டங்களுக்கு என்னை அழைத்து செல்வார்கள். என் தந்தையின் மனம் புண்படும்படி நடந்ததை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன்.
அக்காலத்தில், ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஊதியம் குறைவு தான். என் தாயாரின் மறைவுக்கு பின்னால், என் தந்தை மறுமணம் செய்துக் கொண்டார்கள். அப்பொழுது எனக்கு வயது மூன்று. என் தம்பிக்கு வயது ஒன்று.
எனக்கு பத்து வயது இருக்கும் பொழுது, மாயா பஜார் என்ற மாயாஜால சினிமா படம் ஒன்று வந்தது. அதை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு என் தந்தையிடம் காசு கேட்டேன். “ அதல்லாம் போக கூடாது” என்று சொல்லி விட்டு, மஃரிப் தொழுகைக்கு சென்று விட்டார். மஃரிப் தொழுது விட்டு வரும்பொழுது நான் என் வீட்டு வாசலில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தேன். என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இங்கே வா என்று என்னை அழைத்துக் கொண்டு அவர்களுடைய நண்பர் கடைக்கு என்னை அழைத்து சென்றார். சற்று கூட்டமாக இருந்தது. அங்குள்ள பெஞ்சில் சிறிது நேரம் அமர்ந்தார்.
சிறிது கூட்டம் குறைந்தவுடன் கடைக்காரரிடம் நாலணா காசு கொடுங்கள் என்று கேட்டார். அப்பொழுது தரை டிக்கெட் மூன்றுஅணா
ஒரு அணா வைத் தான் வைத்துக் கொண்டு மூன்று அணா என் கையில் கொடுத்து, போய் சினிமா பார்த்து விட்டு வா என்று என்னை அனுப்பி விட்டார்.
பின்னாளில் , இதை நினைத்து நினைத்து நான் அழுதிருக்கிறேன். அவர் எவ்வளவு வறுமையில் இருந்திருந்தால், ஒரு நாலணா காசு கூட இல்லாமல் இருந்திருப்பார் என்பதையும், தாய் இல்லாத தன் குழந்தையின் முகவாட்டத்தை கண்டு மிக தயக்கத்துடன் கடன் வாங்கி கொடுத்தார் என்பதை எண்ணி எண்ணி நான் அழுதிருக்கிறேன்.
அதன்பின், என் தந்தை ஒரு பொழுதும் என்னை சினிமா போக அனுமதித்ததில்லை. நான் தியேட்டருக்கு போயிருப்பது தெரிந்தால் கடுமையாக அடிப்பார்கள்.
பள்ளிக்கூடம் போவதாக பொய் சொல்லிவிட்டு நண்பர்களுடன் ஆற்றங்கரைக்கு சென்று விடுவேன். அப்பொழுதெல்லாம், என்னை கண்டிப்பதுடன், தந்தையின் மனதை புண்படுத்துபவன் உருப்படவே மாட்டான்.என்பார்கள்
நான் தேவ்பந்த் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ஆண்டு என் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான் அறியாத காலத்தில், நான் உங்கள் மனதை பெரிதும் புண்படுத்தியிருக்கிறேன். நீ உருப்பட மாட்டாய் என்று பல முறை நீங்கள் சபித்துள்ளீர்கள். இதோ எனது மாணவ பருவம் முடிவடைந்து வாழ்க்கை பயணம் தொடங்குகிறது.
உங்களது சாபம் பலித்து விடுமோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது தஹஜ்ஜத் தொழுது விட்டு என்னை மன்னிப்பதாக அல்லாஹ்விடம் சொல்லி என் நல்வாழ்க்கைக்கு துஆ செய்ய வேண்டும் என்று எழுதினேன்.
அதற்கு என் தந்தை பதில் எழுதியிருந்தார்,
ஒரு தந்தை தன் மகன் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக சபிப்பதை போன்று நடிப்பார். அவருடைய சாபத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். தந்தை அடிப்பது, தோட்டக்காரன், ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றுவதைப் போல, அந்த நேரத்தில் அந்த செடிக்கு அதனை வேதனை படுத்தியது போன்று இருக்கும். ஆனால், அது தான் அதன் வளர்ச்சிக்கு காரணம். என் சாபத்தை பற்றி நீ கவலைப் பட வேண்டாம். உன்னுடைய மன ஆறுதலுக்காக, இன்றைய தஹஜ்ஜத் தொழுகைக்கு பின், உனக்காக் துஆ செய்தேன். என்னுடைய துஆ என்றும் உனக்கு உண்டு. நீ ஒரு சிறந்த ஆலிமாக வரும் காலத்தில் திகழ்வாய். என்று எழுதியிருந்தார்
அவர்கள் வாழ்நாளிலேயே, நான் ஆசிரியராக பணியாற்றுவதை பார்த்து மகிழ்ந்தார்கள். அவர்கள் தப்லீக் ஜமாஅத்திலேயே மிக ஈடுபாடு உடையவர்கள். தான் ஜமாஅத்தில் பல ஊர்களுக்கு செல்கின்ற போது தான் கணியூர் என்றவுடன் இஸ்மாயில் ஆலிமை தெரியுமா? என்று பலர் கேட்பதாகவும்
என்மகன் தான் என்று பெருமையாக சொல்வதாகவும் என் தாயாரிடம் சொல்வதை ஒரு முறை கேட்டேன்.\
இந்த நினைவெல்லாம்,முகநூலில் கணியூர் ஹமீத் Kaniyur Hameedபோட்ட பின்னோட்டத்தை படித்த பின் எழுந்த நினைவலைகள்.
அல்லாஹ் என் தந்தையின் பாவங்களை மன்னித்து அவர்களை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவனத்தில் சேர்ப்பனாக!
என் தந்தையின் மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்யுங்கள்
------கணியூர் இஸ்மாயீல் நாஜி
No comments:
Post a Comment