உப்புக் காற்றும் கருவேலங் காடும் !
கதவைச் சாத்திவிட்டு
கலைந்து போக
காலைக் கருக்கலாகிவிடும்
‘இரவு 10 மணிக்கு மேல்’
என்றழைக்கப்பட்ட திருமணங்கள்
நள்ளிரவைத் தாண்டியே
கைகோத்து விடப்படும்
விளக்கனைக்கப்பட்ட
தனியறையில்
தொட்டும் தொடர்ந்துமென
இளமை இளைப்பாறும்
மாமியார் வீட்டுச் சாப்பாட்டில்
மஸ்த்து கூடிப் போக
கட்டில் பிடித்துப் போகும் !
பினாங் செட்டியிடம்
கிஸ்திக்கு வாங்கி வந்தத் தொகை
மனைவிக்கு வாங்கித் தந்த
கள்ளத் தீணியிலும்
காதராக்கா சூடாய் விற்ற
ஆட்டுக்கால் சூப்பிலும்
சில்லறையாய்ச் செலவாகிவிட...
மலேசியப் பெண்களின்
மஞ்சள் மேனியையும்
அரைகுறை உடைகளையும்...
பொட்டிபீஸ் மேல்துணியும்
பத்தாய் கைலியுமாய் வாய்த்த
பலிங்குவளை மனைவியிடம்
தேடி
ஏமாந்து நிற்கும்போது...
ரஜூலா கப்பக்கல்லுக்கு
அல்கத்தை அடகு வைத்து
பணம் பொரட்டித் தருவாள்
பொண்டாட்டி!
பப்பாளியும் பூண்டும் சேர்த்த
நார்த்தங்கா ஊறுகாய்
மொம்பிச்சை மகனுக்கு
பொண்ணு வீட்டிலிருந்து வந்த
வலமை அரியதரப் பனியான்
கூடுதலாக
வீட்டில் சுட்ட நானக்கத்தான்,
சீப்பனியான், சீனிச் சேவு என
பயண ஆயத்தங்கள் நடக்கும் !
கப்பல் கடலைக் கடக்குகையில்
கட்டியவள் நினைப்பும்
கடன்பட்டத் தொகையும்
கலந்துகட்டித் தாக்கும் !
பினாங் ஹார்பாரில்
உச்சகட்ட இளமை
மெல்லமெல்லக் கரைய...
வாழ்க்கை எதற்காகவும் காத்திராமல்
காலக்குதிரையில்
கனவுகளாய்க் கடக்கும் !
கடிதப் போக்குவரத்து
கர்ப்பத்தை அறிவிக்க
அன்றையக் கனவில்
கண்களிரண்டிலும்
அதிக ஈரமிருக்கும் !
கிஸ்தி கட்டி முடிக்க
கடந்துவிடும் ஈராண்டு;
அல்கத்து மீட்டெடுக்க
ஆகிவிடும் ஈராண்டு!
காசு மிச்சம்பிடித்து
கிலுகிலுப்பை வாங்கிவைத்து
பையனோ பொண்ணோ
பாபாசெட்டும் வாங்கிவிடும்
பிள்ளைக்கு ஓடிகோலன்
பொண்டாட்டிக்கு பூவெண்ணெய்
உம்மாவுக்கு ஒத்தப்பொடவை
வாப்பாவுக்கு கஞ்சிப்ராக்கு
ராத்தா தங்கச்சிகளுக்கு
ஜப்பான் ஜார்ஜெட் சாரி
தம்பி கேட்டானேயென்று
ஜாமிண்ட்ரி பாக்ஸொன்று...
காலை ஏழு மணிக்கு
ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரெஸில்
விட்ட ஊர் வந்திறங்கி
உம்மா வீட்டில் வைத்து
பொட்டி பிரித்து பகிர்ந்தபின்...
கொடுக்கல் வாங்களிலும்
ஏச்சு பேச்சுகளிலும்
பிணங்கிக் கிடந்த சம்மந்தியர்...
மத்தியஸ்தம் செய்தபின்னர்
மாமியா வீடு செல்ல
மாப்பிள்ளையை அனுமதிப்பர்!
மற்றுமொரு மாலைப்பொழிதில்
கடற்கரை நோக்கிய நடையில்
உப்புக் காற்றும் - அதில் அசையும்
கருவேலங் காடுகளும்...
விடுபட்ட வாழ்க்கையை
அசைபோடத் தூண்ட...
விடை தெரியாக் கேள்விகளோடு
வீடு வந்து சேர
மஃரிபு அடுத்துவிடும் !
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
No comments:
Post a Comment