Sunday, June 7, 2020

Abu Haashima







அமெரிக்காவில் கறுப்பின மனிதர் ஒருவரை காவல்துறையைச் சேர்ந்தவர்களே இரக்கமற்ற முறையில் கொன்று விட்டார்கள்.
அதைத் தொடர்ந்து அங்கே கலவரம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் அந்த நாட்டில் வாழும் கறுப்பின மக்களைப் பற்றிய
உண்மையான வரலாற்று நாவலைப் பற்றிய முன்னுரை இந்தப் பதிவு .
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய
வரலாறு இது.
சில அத்தியாயங்களை ஏற்கனவே எழுதி இருந்தேன்.
மீதியையும் எழுதி நிறைவு செய்வேன்.

#ஆப்பிரிக்க_மக்கள்_அமெரிக்காவின்
#அடிமைகளாக்கப்பட்ட_வரலாறு

#குன்டா ஒருநாள் தந்தை உமரோவிடம் ...
" நம்மைப் பிடித்துப்போய் ஆங்கிலேயர்கள் என்ன செய்வார்கள் ?"
என்று கேட்டான்.
" மனிதர்களைத் தின்னும் ஆங்கிலேயர்களுக்கு விற்று விடுவார்கள்.
அவர்கள் நம்மை சாப்பிடுவார்கள் " என்றார் தந்தை உமரோ.
அச்சத்தில் உறைந்து போன குன்டா
தம்பி லாமினை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.


கழிந்த வாரத்தின் முந்திய பத்து நாட்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டேன்.
சில நாட்களாக தொடர்ந்து வீசிய வாடைக்காற்று ஏராளமான மக்களுக்கு குளிர் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.
அடித்துப் போடப்பட்ட உடல்வலியோடு அவதிப்பட்டபோதுதான் அந்த நாவலை
கையிலெடுத்தேன்.
#அலெக்ஸ்_ஹேலி எழுதிய
#Roots ஆங்கில நூலின் தமிழாக்கம்.
#M_S_அப்துல்_ஹமீது எழுதிய #வேர்கள்
ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன்.

நாவலென்றா சொன்னேன் ?
இல்லை ... இல்லை ...
அது ...
மனைவி மக்களோடு
தங்கள் கலாச்சார பெருமைகளோடு
சமுதாய அந்தஸ்தோடு
உயரிய விழுமியங்களோடு
சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்த
ஒரு இனம் அடிமையாக்கப்பட்டு
அழிந்த வரலாறு !

படிக்கப் படிக்க ஆச்சரியங்களாலும் வேதனையாலும் ஆவேசத்தாலும்
நம்மை ரத்தக் கொதிப்படைய வைக்கும்
ஆதிக்க சக்திகளின் அட்டூழியம் தலைவிரித்தாடும்
உக்கிர வரலாறு அது.

மேற்கு ஆப்ரிக்காவின் இயற்கை வளங்கள் நிரம்பிய ஒரு சிறிய நாடு #காம்பியா.

#ஜுஃப்பூர்...
காம்பியாவின் அழகான ஒரு சிறு கிராமமம் .
1750 ம் ஆண்டின் ஒரு காலை நேரத்தில் உமரோ - பின்டா கிண்டே என்ற தம்பதிகளுக்கு
ஒரு அழகான குழந்தைப் பிறந்தது. பெற்றோரைப்போலவே சுத்தமான
கருப்பு நிறக் குழந்தை.
கிராமமே சந்தோஷப்பட்டது.
#பாட்டி_ஆயிஷாவுக்கும்
கிராமத்தின் வயது முதிர்ந்த மூதாட்டி #நியோபோட்டோ பாட்டிக்கும் கூடுதல் சந்தோசம் .

பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழாவை அந்த கிராமத்தில் சிறப்பாய் நடத்துவதற்கு உமரோ ஆசைப்பட்டார்.
பறை அடிப்பவர்கள் தங்கள் பறை ஓசைகளின் மூலம் அதை தெரிவிக்க தொடர் பறை ஓசைகளால் ஆங்காங்கே உள்ள பறை அடிப்பவர்களும் அதை தங்கள் பறைகளால் எதிரொலிக்க ...
ஜுஃப்பூரின் தொலைதூர கிராமங்களில் இருந்து உமரோவின் சுற்றமும் நட்பும்
ஜுஃப்பூருக்கு வந்து சேர்ந்தது.
கிராம மக்களும் நண்பர்களும் உறவினர்களும் சூழ்ந்திருக்க குழந்தைக்கு #குன்டா என்று
தன் பாட்டனாரின் பெயரைச் சூட்டினார் உமரோ.

இந்த குன்டாதான் இந்த வரலாற்று நூலின் கதாநாயகன் !

பாட்டனார் கைபரா குன்டே கின்டா காம்பியாவின் கண்ணியத்திற்குரிய மனிதர்.
பஞ்சத்திலிருந்து மக்களை காப்பாற்றிய வள்ளல்தன்மை மிக்கவர்.
அவரது குணாதிசயங்களோடு தன் பிள்ளை குன்டாவும் வளரவேண்டும் என்பது தந்தை உமரோவின் ஆசை.
அந்த இரவு நேரத்தில் கிராமத்து எல்லையில் குழந்தையைத் தூக்கிச் சென்ற உமரோ குழந்தையை கைகளில் உயர்த்தி வானத்தின் நிலாவையும் நட்சத்திரங்களையும் காட்டிச் சொன்னார் ....

" நன்றாகப் பார் ... உன்னைவிட மிகச் சிறந்தது இது ஒன்றுதான் "

உமரோ ஒரு வீரர். பிள்ளையை தன் குடும்ப பாரம்பரிய பண்புகளோடும் சமுதாய கலாச்சார நெறியோடும் வீரத்தோடும்வளர்த்தார்.
தாயார் பின்டா குழந்தையை தன் முதுகில் கட்டிய தொட்டிலில் வைத்து சுமந்து கொண்டே
வயலில் வேலை செய்வாள்.
பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார்கள்.
சோளக் கூழும் சோள உணவும் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தாள் பின்டா.

குண்டா கின்டே வளர்ந்தான் .
அவன் வயது நிரம்பிய சிறுவர்களுக்கு நீதிக்கதைகளையும்
விழிப்புணர்வுக் கதைகளையும் நியோபோட்டோ பாட்டி சொல்லிக் கொண்டிருப்பாள்.
அப்போது குன்டாவுக்கு ஐந்து மழை வயது ஆகி இருந்தது.
ஐந்து மழைக்கால வயது என்றால் ஐந்து வயது என்பது அர்த்தம்.
குன்டாவுக்கு ஆறு வயதானபோது அவன்தாய் அவனுக்கு ஒரு தம்பியை பெற்றுக் கொடுத்தாள்.
அவன் பெயர் லாமின்.
அதே நேரம் பாட்டி ஆயிஷா இறந்து போனாள்.

குண்டா வளர வளர அவனுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது.
அது அவனது இரண்டாம் நிலைப் பருவம்.
அந்தப் பருவத்தில் ஆடு மேய்க்கவும் விவசாயம் செய்யவும் அவன் அறிந்து கொண்டான்.
#ஆலிம்சா வந்து மார்க்க கல்வியை கற்றுக் கொடுத்தார்.

நியோபேட்டோ பாட்டி ஒருநாள் வெள்ளையர்களை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
அவளது சொந்த ஊர் வேறொரு கிராமம். ஒருநாள் திடீரென்று கப்பலில் வந்திறங்கிய வெள்ளையர்கள்
கிராமத்தை தீ வைத்து எரித்தார்கள். முதியோர்களையும் குழந்தைகளையும் இரக்கமில்லாமல் கொன்றார்கள். மற்றவர்களின் கழுத்தில் தோல் கயிறுகளைக் கொண்டு கட்டி இழுத்துச் சென்றார்கள்.
வேகமாக நடப்பதற்காக சவுக்கால் அடித்தார்கள். அதில் ஏராளமானவர்கள் செத்துப் போனார்கள்.
ஆங்கிலேயர்கள் ஜுஃப்பூர் கிராமத்தை அடையும்போது கொஞ்சம் பேர்களுக்கே உயிர் மிச்சமிருந்தது. உண்ண உணவும் இல்லை. அதனால் அவர்கள் பிடித்து வந்த சிலரை உணவுக்காக விற்றார்கள்.
நியோபோட்டோ பாட்டியையும் ஒரு சோளப் பைக்காக விற்றார்கள்.
அதன்பிறகுதான் அவளுக்கு அந்தப் பெயர் வந்தது.
நியோபோட்டோ என்றால் சோளப்பை என்று பொருள்.

இப்படி ஆங்கிலேயர் கருப்பர்களை கடத்திச் சென்று கொடுமை செய்யும் நிகழ்வுகளை
பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை எச்சரிக்கை செய்து வந்தார்கள் பெரியவர்கள்.

குண்டா ஒருநாள் தந்தை உமரோவிடம் ... " நம்மைப் பிடித்துப்போய் ஆங்கிலேயர்கள் என்ன செய்வார்கள் ?" என்று கேட்டான். " மனிதர்களைத் தின்னும் ஆங்கிலேயர்களுக்கு விற்று விடுவார்கள்.அவர்கள் நம்மை சாப்பிடுவார்கள் " என்றார் தந்தை உமரோ.
அச்சத்தில் உறந்து போய் தம்பி லாமினை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் குன்டா.

மூன்றாம் நிலை பருவத்தில் அவன் தாய் மற்றொரு ஆண் குழந்தையை பெற்றாள்.
அதேநேரம் வீர தீர செயல்களில் தேர்ச்சி பெறுவதற்காக குன்டாவும் அவனைப்போன்ற சிறுவர்களும் காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். நான்கு மாதம் அங்கே கடுமையான பயிற்சி. குடும்பத்தார் யாரையும் பார்க்க முடியாது.
அங்கே வைத்து கத்னாவும் செய்யப்படும்.
குன்டாவுக்கும் அங்கே போர் பயிற்சி வழங்கப்பட்டதோடு ஆங்கிலேயரை எதிர்கொள்ளும் பாதுகாப்பு
ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
பயிற்சி முடிந்து ஊர் திரும்பிய குண்டா சில நாட்கள் மகிழ்ச்சியோடு தனது பெற்றோருடன் இருந்தான்.

அன்றைய தினம் ஊர் காவலுக்கு அவன் செல்ல வேண்டிய நாள்.
அன்று காலையிலேயே காட்டின் எல்லைக்குச் சென்றவன் மரத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த
குடிலில் தங்கி கண்காணித்துக் கொண்டிருந்தான்.
இரவு முழுவதும் கண்விழித்து காவல் காத்தவன் விடிகாலையில்
வீட்டுக்கு புறப்படுவதற்கு முன்னால் தனக்குத் தேவையான ஒரு மரத்தடியை வெட்டி எடுத்து வரும் முயற்சியில் ஈடுபட்டான்.
அப்போதுதான் ....

#நாளை_சொல்கிறேன்


Abu Haashima

No comments: