Wednesday, June 10, 2020

பெருமானாருக்குப் பிறகு

என் வலைத்தளம் சென்று பார்க்கத் முடியாதவர்களுக்காக இங்கே 
=========================


ஜமால் முஹம்மது கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருக்கும் சகோதரர், நண்பர் ரமீஸ் எனக்கு சமீபத்தில் பிடிஎஃப் வடிவில் ஒரு ஆங்கில நூலை அனுப்பியிருந்தார். நான் படிப்பேன் என்று அவருக்குத் தெரியும். 269 பக்கங்கள். AFTER THE PROPHET என்று தலைப்பு. Lesley Hazleton என்ற பெண் எழுத்தாளர் எழுதியது. மூன்று நாட்களாகப் படித்துக்கொண்டிருந்தேன். நேற்று முடித்துவிட்டேன். 
பெருமானாருக்குப் பிறகு ஷியா, ஸுன்னி என்று சமுதாயம் பிரிந்த வரலாறு. பெருமானாரின் மறைவில் தொடங்கி கர்பலாவில் முடிகிறது. பேரர் ஹுஸைனும் அவரது குடும்பத்தினர் பலரும் கொடூரமாகக் கொல்லப்பட்டதுவரை சொல்லப்படுகிறது. 
இது ஒரு ஷியா சார்பான நூல் என்று சொல்ல முடியாது. ஆசிரியை யார் பக்கமும் சாயவில்லை. 
முதலில் என்னைக் கவர்ந்தது அவரது அழகிய ஆங்கிலம். விஷயங்களை அவர் சொல்லிச் சென்ற விதம். வரலாற்றில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நேரிலேயே பார்த்த மாதிரி எழுதப்பட்டுள்ளது இந்த நூலின் தனிச்சிறப்பு என்று சொல்லுவேன்.
பெருமனாருக்கு இறுதியாக காய்ச்சல், தலை வலி, உடல் வலி வந்ததில் தொடங்குகிறது நூல். ”இவ்வேதனைகள் வந்தன. பின் நின்றன. பின் மீண்டும் வந்தன. ஆனால் ஒவ்வொரு முறை திரும்ப வந்தபோதும், முன்னைவிடத் தீவிரமாக வந்தன. நிலமை முன்னைவிட மோசமாகிக்கொண்டே போனது. 
மண்டையைப் பிளக்கும் தலைவலி, பிழியும் தசைவலி ஆகியவற்றால் பலவீனமாகிப் போன பெருமனாரால் உதவியின்றி எழுந்து நிற்க முடியவில்லை” என்று எழுதுகிறார். மூன்று முறை பெருமானாரைக் கொல்ல ஏற்கனவே முயற்சிகள் நடந்தன என்றும் கூறுகிறார்.
எழுத்து ஒரு மந்திரம் மாதிரியானது. சக்தி வாய்ந்தது. வாசகரை மயக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக இஸ்லாம் தொடர்பாக நூல்கள், கட்டுரைகள் எழுதும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. 
ஆனால் தங்கள் பக்தியைக் காட்ட வேண்டும் என்ற விருப்பத்துடனும், வேறு மாதிரியாக  எழுதிவிட்டால் சமுதாயம் தவறாக எண்ணுமோ என்ற உணர்வுடனும்தான் பெரும்பாலான முஸ்லிம் எழுத்தாளர்கள் எழுதுவதாக எனக்குப் படுகிறது.
பெருமானார் என்று மட்டும் எழுதிவிட்டால் அது ஏதோ குற்றம் செய்துவிட்டதைப்போலப் பார்க்கப்படுகிறது. அடைப்புக்குறிகளுக்குள் கட்டாயமாக (ஸல்) என்று போட்டாக வேண்டும்!
’இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்’ என்ற நூலை நான் எழுதினேன். அதற்கு முன் கிழக்கு பதிப்பகத்தின் பிரதான எடிட்டராக அப்போது இருந்த பா.ராகவன் என்னிடம் ஒரு கட்டளை அல்லது வேண்டுகோள் வைத்தார். அதாவது, இஸ்லாம் பற்றி ஒரு நூல் நான் எழுதித் தரவேண்டும்; அதே சமயம் அதில் எந்த இடத்திலும் ப்ராக்கட் (அடைப்புக்குறிகள்) இருக்கவே கூடாது! 
அதாவது ஸல், ரலி, ரஹ் என்றெல்லாம் நான் அடைப்புக்குறிகளுக்குள் போடக்கூடாது! நிபந்தனையை ஏற்றுக்கொண்டுதான் நான் எழுதினேன். 2004ம் ஆண்டு அந்நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும் கிடைத்தது. அது அடைப்புக்குறிகள் இல்லாமல் நான் எழுதியதற்காக அல்ல!
அப்படியானால் ரஹ், ரலி, ஸல் போன்றவற்றையெல்லாம் எழுதுவது தவறா? நான் அப்படிச் சொல்லவோ, நினைக்கவோ மாட்டேன். அவைகள் மரியாதைச் சொற்களின் சுருக்கம். 
ஆனால் மரியாதை மனதில் இருக்க வேண்டியது. தமிழ் மட்டுமே அறிந்த வாசகர்கள் படிக்கும்போது அந்த அடைப்புக்குறிகளும், அச்சொற்களும் இஸ்லாமிய வரலாற்றோடு ஒட்ட விடாமல் அவர்களைத் தடுத்துவிடும்.
இஸ்லாத்தின் நோக்கத்தையே சிதைக்கும் ஒரு காரியத்தை நாம் பக்தி என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறோம். எப்படி என்கிறீர்களா?
இஸ்லாம் என்பது ஒரு மதமே அல்ல. கிறிஸ்துவோ, புத்தரோகூட ஒரு மதத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் பின்பற்றியவர்கள்தான் அந்த தவறான காரியங்களைச் செய்துவிட்டார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் Christ was not a Christian, Buddha was not a Buddhist என்று ஓஷோ மிக அழகாகச் சொன்னார்!  
இஸ்லாம் முஸ்லிம்களுக்கான ஒரு மதமல்ல. அது ஒரு மதமே அல்ல. அது ஒரு மார்க்கம். ஒரு வழி. தலைசிறந்த வழி என்று நான் சொல்லுவேன். 
உலகில் வந்த எல்லா மார்க்கங்களும் காலம் காலமாக எந்த உண்மையை பூடகமாக சொல்லிக்கொண்டு வந்ததோ அதே உண்மையை மிக எளிமையாகவும் தெளிவாகவும் இஸ்லாம் கூறுகிறது: இறைவன் ஒருவனே. அவ்வளவுதான். 
முஹம்மது நபியவர்கள் முஸ்லிம்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர் அல்ல. அகில உலகங்களுக்கும் அருட்கொடை என்றுதான் இறைவனே அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். 
இஸ்லாம் என்பது ஒரு மதத்தின் பெயரல்ல. ஓர் உண்மையின் சுருக்கம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஓர் இறைவனின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது என்பது ‘இஸ்லாம்’ என்பதன் பொருள்களில் ஒன்று. 
உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம். அதன் மூலமாகத்தான் நமக்கு சூடும், ஒளியும் தினமும் கிடைக்கிறது. அது பூமிக்குக் கொஞ்சம் அருகில் வந்தால் நாமெல்லாம் பொசுங்கிச் சாம்பாலாகிவிடுவோம். அது பூமியைவிட்டு கொஞ்சம் அதிகமாக விலகிப்போனால் நாமெல்லாம் உறைந்து செத்துவிடுவோம். அது நமக்குத் தேவையான தூரத்தில் மிகச்சரியாகச் சென்றுகொண்டும், தேவையான அளவுக்கு மட்டுமே ஒளியையும் உஷ்ணத்தையும் வழங்கிக் கொண்டுள்ளது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக! 
இது எப்படி சாத்தியம்? அது இறைவனின் உத்தரவு. அதற்கு அடி பணிந்து அது நடக்கிறது. இப்படியே இயற்கையின் எல்லா வடிவங்களையும் பற்றிப் பேசலாம். அப்படியானால் இயற்கை முழுவதும், இப்பிரபஞ்சம் முழுவதும் இஸ்லாத்தில் இருக்கிறது, முஸ்லிமாக இருக்கிறது என்று அர்த்தம்.
முஹம்மது நபியவர்கள் இறைவனின் இறுதித்தூதர் என்ற ஒரு வாசகம் மட்டும்தான் மூமின்களையும் மற்றவர்களையும் பிரித்துக்காட்டும் கோடாகும். அதற்குள் நாம் இப்போது போகவேண்டியதில்லை.
அப்படியானால் உலக மக்களுக்கே பொதுவானதாக இருக்கும் ஒரு மிகச்சிறந்த வழிமுறையை எடுத்துச் சொன்னவர்களைப் பற்றிப் பேசும்போது சில அரபிச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள் பக்கத்துக்கு பத்து முறை போட்டுப்போட்டு எழுதி உங்கள் பக்திக்கு டார்ச் அடித்துக்கொண்டே இருந்தால், அதை யார் படிப்பார்கள்?
என் ஞானாசிரியர் ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் வேலூர் பாகியாத்தில் ஓதிக்கொண்டிருந்த காலத்தில் ஏதோ ஒரு மார்க்கக் கூட்டத்தில் அரை மணி நேரம் பேசினார்களாம். பேசிவிட்டு என் பேச்சு எப்படி இருந்தது என்று தன் ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, ‘நன்றாக இருந்தது. ஐந்து நிமிடம் நன்றாகப் பேசினாய்’ என்றார்களாம் அவர்கள்! 
ஐந்து நிமிடமா? நான் அரை  மணி நேரத்துக்கும் மேல் அல்லவா பேசினேன் என்று ஹஸ்ரத் மாமா கேட்டதற்கு,  
‘ஆமாமா, பேசினாய். ஆனால் நீ சொன்ன ரஹ்மத்துல்லாஹி அலைஹி, ரலியல்லாஹு அன்ஹும் வ ரலூ அன்ஹு, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஜல்ல ஷானஹுவத்த ஆலா – இதையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் நீ பேசிய விஷயம் ஐந்து நிமிடம்கூட வராது’ என்றார்களாம்!
படிக்கிற காலத்திலேயே அப்படி பயிற்சி கிடைத்ததால்தானோ என்னவோ, பின்னாளில் இமாம் கஸ்ஸாலியின் ’இஹ்யா’வை 70க்கும் மேற்பட்ட நூல்களாக எழுதிய அவர்களின் ஒரு நூலில்கூட அடைப்புக்குறிகள் இருக்காது. 
அதேபோல எழுதிய இன்னொரு மகத்தான எழுத்தாளர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் அவர்கள். இந்த இருவரைத்தவிர வேறு யாரும் இப்படி எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.
சரி, திரும்பவும் After the Prophet நூலுக்கு வருவோம். இந்நூலில் வரும் சில தகவல்களை நான் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. 
அபூபக்கரை கலீஃபாவாக ஏற்றுக்கொள்ளச் சொல்லி அலீயைக் கேட்க அலீயின் வீட்டுக்கு உமர் வருகிறார்கள். ஆயுதம் தாங்கிய ஆட்களை அலீயின் வீட்டைச் சுற்றி நிற்கவைத்துவிட்டு! அலீ வெளியில் வந்து அபூபக்கரை கலீஃபாவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல், தானும் தன்னோடு வந்த ஆட்களும் சேர்ந்து அவரது வீட்டை எரித்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்!
அலீ பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்ததும் மூடியிருக்கும் கதவில் வேண்டுமென்றே ஓடிவந்து மோதி உடைத்துக்கொண்டு உள்ளே வருகிறார்கள். அப்போது அந்த கதவு ஃபாத்திமா மேல் விழுந்து காயம் ஏற்படுத்துகிறது. அல்லது ஃபாத்திமாவின் கை உடைகிறது. தான் என்ன செய்வேன் என்பதை அலீக்கு உணர்த்திவிட்டதால் அதோடு உமர் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். 
மூன்றாவது குழந்தையை உண்டாகியிருந்த ஃபாத்திமாவுக்குக் கொஞ்ச நாள் கழித்து குழந்த மசித்துப் பிறக்கிறது. அது இறந்து பிறந்ததற்குக் காரணம் தடாலடியாக உமர் உள்ளே நுழைந்ததுதான் என்று நூல் கூறுகிறது (பக்கம் 79 – 80). 
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக நான் எங்குமே படித்ததில்லை. இது உமர் அவர்களின் பண்புகளுக்கு மாற்றமாக உள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் அவர்கள் முரடராக இருந்திருக்கலாம். இஸ்லாத்தையும் பெருமானாரையும் ஏற்றுக்கொண்ட பிறகு முஸ்லிம்களிடம் கடுமை காட்டவேண்டிய அவசியமில்லை. அப்படி அவர்கள் காட்டவும் இல்லை. அதுவும் பெருமானாரின் மகளிடமும் மருமகனிடமுமா? வாய்ப்பே இல்லை. 
ஆனாலும் லெஸ்லி சொல்லும் சில நிகழ்வுகள் உண்மையேலேயே நடந்தனவா? 
அவர் சொல்வது மாதிரிதான் நடந்தனவா?
என்று கண்டு பிடித்து உலகுக்குச் சொல்ல வேண்டியது நமது கடமை என்று நினைக்கிறேன். ஏனெனில் பிரம்மாதமாக எழுதுகின்ற ஒருவரால் மிக எளிதாக விஷத்தைத் தூவிவிட முடியும். 
Lesley Hazleton என்ற இந்த எழுத்தாளர் யார் என்று நான் இணையத்தில் தேடினேன். அவர் ஒரு பெண் என்றும், பிரிட்டிஷ் அமெரிக்கர் என்றும் விக்கி சொன்னது. 1966-லிருந்து ஜெருசலத்தில் 13  ஆண்டுகள் இருந்தவர் என்றும், ’டைம்’ பத்திரிக்கைக்காக ஜெருசலத்திலிருந்து எழுதியவர் என்றும், எந்த மதத்தையும் சாராதவர் என்றாலும், தன்னை ஒரு யூதர் என்றும், ஒரு யூத மதகுருவாக ஆவதற்கு அவர் விரும்பினார் என்றும் அந்தப் பக்கத்திலேயே போட்டிருக்கிறது! கிட்டத்தட்ட குட்டு உடைந்த மாதிரிதான்!
குழந்தை மசித்துப் பிறந்த பிறகு, கலீஃபா அபூபக்கரிடம் தன் தந்தையின் சொத்திலிருந்து தனக்கு சேர வேண்டிய தனக்கு வரவேண்டிய பங்கை ஃபாத்திமா கேட்டார்கள். மதினாவின் வடக்குப் பகுதியிலும், கைபர் ஃபதக் பகுதிகளிலும் இருந்த பேரீச்சம்பழத் தோட்டங்களில் இருந்து. ஆனால் நபியின் சொத்துக்கு வாரிசு கிடையாது, எல்லாம் தர்மத்துக்குத்தான் என்று பெருமனார் கூறியிருப்பதாக அபூபக்கர் கூறினார்கள். இதுவரை சரி. 
ஆனால் முஹம்மதின் மற்ற விதவை மனைவிமார்களுக்கும், குறிப்பாக தன் மகள் ஆயிஷாவுக்கும், மதினாவிலும் பஹ்ரைனிலும் இருந்த சொத்துக்களிலிலிருந்து நிறைய அபூபக்கர் வழங்கினார் என்று லெஸ்லி கூறுகிறார் (பக்கம் 81)!
அபூபக்கர் அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் ஃபாத்திமா வஃபாத்தானார்கள். ஆனால் அதை அபூபக்கருக்குத் தெரிவிக்கக் கூடாதென்றும், கலீஃபா என்ற முறையில் அவர் கலந்துகொண்டு தன் இறப்பை கௌரவிக்கக்கூடாதென்றும், யாருக்கும் தெரியாமல் தன்னை அடக்கம் செய்துவிடும்படியும் ஃபாத்திமா அலீயிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறுகிறார். 
இரவில் தன்னை அடக்கம் செய்யும்படி அன்னை ஃபாத்திமா கேட்டுக்கொண்டது உண்மைதான். ஆனால் லெஸ்லி சொல்வது போலல்ல. அந்தக் காரணங்களுக்காகவும் அல்ல. ஃபாத்திமாவை அடக்கம் செய்த பிறகுதான் அபூபக்கருக்கு தன் கரம் கொடுத்து பிரமாணம்  செய்து கொடுத்தார் அலீ என்று கூறுகிறார் லெஸ்லி (பக்கம் 84).
இறைத்தூதரின் வாரிசுகளுக்கு சொத்து கிடையாது, அவை எல்லாம் தர்ம சொத்துக்களே என்ற பெருமானாரின் கூற்றை, ஹதீதை, தெரிந்துகொண்ட பிறகு ஃபாத்திமா மௌனமானார். சமாதானமானார் என்று வரலாற்று ஆசிரியர் பைஹகி கூறுகிறார். 
ஃபாத்திமாவின்  இறுதி நாட்களில், உடல் நிலை சரியில்லாமலிருந்தபோது அபூபக்கர் பார்க்க வருகிறார். பார்ப்பதற்கு அனுமதியும் கோருகிறார். அனுமதி கொடுக்கப்படுகிறது. உள்ளே வந்து ஃபாத்திமாவைப் பார்த்து ஆறுதல் வார்த்தைகளைப் பேசுகிறார். அல்லாஹ், அவனது தூதர், மற்றும் அஹ்ல்-எ-பைத்தின் பொருத்தத்தை நாடியே தான் செயலாற்றியதாக அபூபக்கர் விளக்கம் கொடுக்கிறார். ஃபாத்திமாவும் அவ்விளக்கத்தைக் கொண்டு திருப்தியடைகிறார்.
எனவே ஃபாத்திமாவும் அபூபக்கரும் பேசிக்கொள்ளவே இல்லை என்றால், அது அவர்கள் சந்திக்கவே இல்லை என்றுதான் பொருள். சந்திக்காதவர்கள் எப்படிப் பேசிக்கொள்ள முடியும்?!
ஃபாத்திமாவின் இறுதிக்கட்டங்களில் அவருக்கு பணிவிடைகள் செய்தது அஸ்மா பின்தி உவைஸ். அவரது முதல் கணவர் அலீயின் சகோதரரான ஜாஃபர். மூத்தா போரில் அவர் இறந்தபிற்கு அஸ்மா அபூபக்கரைத் திருமணம் செய்துகொண்டார். அபூபக்கருக்கும் அஸ்மாவுக்கும் பிறந்தவர் முஹம்மது இப்னு அபூபக்கர். ஃபாத்திமா இறந்த உடன் அவரைக் குளிப்பாட்ட உதவியவும் அஸ்மாதான். அப்போது அலீயும் உடனிருந்தார்.  ஃபாத்திமா, அபூபக்கர் ஆகியோரின் இறப்புக்குப்பிறகு மூன்றாவதாக அவர் அலீயை மணந்துகொண்டார். அலீக்கும் அவருக்கும் யஹ்யா, அவ்ன் ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தன.  
ஃபாத்திமாவுக்கு ஜனாஸா தொழுகை நடத்துமுன் எங்களிடம் சொல்லவும் என்று அபூபக்கரும் உமரும் கேட்டுக்கொண்டார்கள். ஜனாஸா தொழுகையை அபூபக்கர் நின்று நடத்தியதாகவும், இல்லை அலீதான் நடத்தினார் என்றும் சொல்லப்படுகிறது. 
அன்னை ஆயிஷாவின் வீட்டில்தானே பெருமனார் அடக்கம் செய்யப்பட்டார்கள்? அதைப்பற்றி லெஸ்லி இப்படி எழுதுகிறார்: 
”ஒவ்வொரு நாளும் அந்த இளம் விதவை, தன் படுக்கையின் கீழே அடக்கம் செய்யப்பட்டிருந்த தன் கணவரோடு உறங்கினார். கேப்ரியல் கார்சியா நாவலில் வரும் மேஜிகல் ரியலிசம் காட்சி மாதிரி” (பக்கம்82). 
வீட்டுக்குள்ளே ஒருவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும்போது வீட்டில் உயிரோடு இருப்பவர்கள் வீட்டுத்தரைக்கு மேலேதானே படுக்க முடியும்? இதில் என்ன மேஜிகல் ரியலிஸம் உள்ளது? கணவரோடு படுத்திருந்தாராம், ஆனால் கணவர் தரைக்குக் கீழேயும் மனைவி தரைக்கு மேலேயும்! 
இதுதான் ’யூத லொள்ளு’ என்று நான் புரிந்துகொண்டேன்.
உமருக்கு உம்மு குல்சும் என்ற தன் மகளை அலீ மணமுடித்துக் கொடுத்தார் என்றும், உமரை விட பதிமூன்று வயது இளையவராக இருந்த அலீ உமருக்கு மாமனார் ஆனார் என்றும் கூறுகிறார். இதுவரை சரி. ஆனால் ஃபாத்திமா எதிர்பார்த்தவாறு நிறைய சொத்துக்களை அலீக்கு உமர் கொடுத்தார் என்றும் கூறுகிறார் (பக்கம் 88). 
உஸ்மான் கலீஃபா ஆனபிறகு தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே, உமய்யாக்களையே, ராணுவ அதிகாரிகளாகவும், ஆளுநர்களாகவும், பெரும் பெரும் பதவிகளிலும் அமர்த்தினார் என்றும், சுற்றிலும் பளிங்குத் தூண்களும், தோட்டங்களும் கொண்ட பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றையும் மதினாவில் கட்டிக்கொண்டார் என்றும், தன் உறவினர்களுக்கு ஆயிரக்கணக்கான குதிரைகள், தனிப்பட்ட சொத்துக்கள் என்று வாரி வழங்கினார் என்றும், ஈராக்கில் இரண்டு நதிகளுக்கும் இடையிலிருந்த விவசாய நிலங்கள் உமைய்யாக்களுக்கு தாரை வார்க்கப்பட்டது என்றும், அதற்கு உமைய்யா தோட்டம் என்றே பெயர் என்றும், உஸ்மானுடைய செயல்பாடுகளுக்கு பெருமனாரின் புகழ்பெற்ற தோழர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும், குறிப்பாக அலீ தெரிவித்தார் என்றும், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு உஸ்மான் தனக்கு எதுவும் தெரியாதென்று தோளைக்குலுக்கியதாகவும், ”வசந்த காலத்துப் புற்களை ஒட்டகங்கள் மேய்வது போல” உமய்யாக்கள் சொத்துக்களை அபகரித்துக்கொண்டிருந்தார்கள் என்றும் கூறுகிறார் (பக்கங்கள் 94 – 96). 
இதைவிட உண்மைக்குப் புறம்பான செய்தி இருக்க முடியாது. கலீஃபாவாக இருந்தும் உஸ்மான் அவர்கள் நான்கு அல்லது அதிகபட்சமாக எட்டு திர்ஹம்களுக்கு மேல் போகாத முரட்டு ஆடைகளையே அணிந்தார்கள். எப்போதும். இஸ்லாத்துக்காக வாரிவாரி வழங்கிய வள்ளல் அவர்கள். காடியுடன் அல்லது ஜைத்தூன் எண்ணெயுடன் கூடிய ரொட்டிதான் அவர்களது உணவு. மெத்தையில் அவர்கள் படுக்கவில்லை. ஒரு போர்வைதான் அவர்களது மெத்தை. அதை மடக்கிப் போட்டால் தலையணை. அவ்வளவுதான்!
’நல்ல துணி அணிய வேண்டும் என்று ஆசை கொண்டவனே, நீ கஃபனை எண்ணிப்பார். நல்ல வீட்டில் வாழவேண்டும் என்று ஆசை கொண்டவனே, நீ கப்ரை எண்ணிப்பார்’ என்பது அவர்களின் பொன்மொழிகளில் ஒன்று.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஓர் அடிமையை விடுதலை செய்வார்கள். ஒரு வெள்ளிக்கிழமை விட்டுப்போய்விட்டால், அடுத்த வெள்ளிக்கிழமை இரண்டு அடிமைகளை விடுதலை செய்வார்கள். அவர்களிடம் அடிமைகள் இல்லாவிட்டால், அடுத்தவரிடம் இருந்த அடிமையை பணம் கொடுத்து வாங்கி விடுதலை செய்வார்கள்!
தம்மிடம் யாராவது கடனாகப் பெற்ற தொகையைக்கூட திரும்ப வாங்குவதில்லை. திரும்பக் கொடுத்தால், ’இல்லை அது உங்களுக்கு என் அன்பளிப்பு’ என்று சொல்லிவிடுவார்கள். 
ஒருமுறை மனைவி கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு தோட்டம் வாங்குவதற்காக வெளியே போனார்கள். ஆனால் மக்கள் பஞ்சம் பசியால் அவதிப்படுவதைப் பார்த்துக் கண் கலங்கி, அந்தப் பணத்தையெல்லாம் மக்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். வீட்டுக்கு வெறும் கையோடு வந்த உஸ்மானைப் பார்த்து மனைவி, தோட்டம் வாங்கிவிட்டீர்களா என்று கேட்க, ‘ம், வாங்கிவிட்டேன், சொர்க்கத்தில்’ என்று பதில் சொன்னார்கள்.
தான் கொல்லப்படப் போகிறோம் என்று தெரிந்தே, யாரும் கொலைகாரர்களோடு போராட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். நமக்கெல்லாம் தார்மீகக் கோபம் வரும் அளவுக்கு கொலைக்காரர்களோடு பொறுமையாக நடந்துகொண்டார்கள். அலீ போன்ற ஆதரவாளர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டபோதும், அவர்கள் பாதுகாப்பை விரும்பவும் இல்லை, அனுமதிக்கவும் இல்லை. 
ஏன் அப்படிச் செய்தார்கள்? அதற்கு உஸ்மான் சொன்ன காரணம் நம் நெஞ்சை உறைய வைப்பது. ”நேற்றிரவு பெருமானாரைக் கனவு கண்டேன். ’நாளை நீங்கள் எங்களோடு நோன்பு திறப்பீர்கள்’ என்று சொன்னார்கள்” என்றார்! 
அதேபோல அவர்கள் நோன்பிருந்தபோது, அந்த 82 வயதில், முதியவர் என்றும் பாராது அவர்களை இரக்கமற்ற முறையில் நான்குபேர் கொன்றனர். மய்யித்தை அடக்கம் செய்வதற்குக்கூட மூன்று நாட்கள் அனுமதிக்கவில்லை. மய்யித்தை அடக்க செய்ய எடுத்துச் சென்றபோதுகூட கற்களால் அடித்தார்கள். இப்படிப்பட்ட உஸ்மானைப் பற்றி லெஸ்லி வேறு மாதிரியாக எழுதியுள்ளார். எழுத்து ஒரு மகுடி மாதிரி. அது ஒழுங்காக வாசிக்கப்பட்டால் ராஜ நாகத்தையும் மயக்கிவிடும். ஆனால் யூத மகுடிக்கு சுன்னத் வல் ஜமா’அத்தைச் சேர்ந்தவர்கள் எந்தக் காலத்திலும் மயங்கிவிட மாட்டார்கள். 
ஷியாக்கள் சொல்வதெல்லாமே தவறு என்று நான் சொல்லவரவில்லை. நான் இங்கே அவர்களைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் ஒரு கருத்தில் உள்ளவர்கள். நாம் வேறுவிதமான கருத்தில் உள்ளவர்கள். ஆனால் இடையில் பச்சையை சிவப்பாகவும், சிவப்பை பச்சையாகவும் காட்டும் திறமை பெற்ற சில எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களிடம் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 
மிகுந்த சுவாரசியமாகவும் அழகாகவும் எழுதப்பட்ட ஒரு நூல் இது. ஆனால் எது சரி, எது தவறு, எது மிகை என்று புரிந்துகொள்ள நிதானம் தேவை. 
இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:
1. After the Prophet by Lesley Hazleton
2. Ali Ibn Abi Talib by Vol 1, Dr. Ali M Sallabi
3. The Biography of Uthman Ibn Affan by Dr. Ali M Sallabi
4. அமைதிக்கு ஓர் உதுமான். எம்.ஆர்.எம். முகம்மது முஸ்தபா. 
அன்புடன்

No comments: