Thursday, June 4, 2020

வீரமா முனிவரும் சந்தா ஸாஹிபும்!

by .Yembal Thajammul Mohammad ஏம்பல் தஜம்முல் முகம்மது 



வீரமாமுனிவர்-1

வீரமா முனிவரும் சந்தா ஸாஹிபும்!
***************************************
ஒரு வழக்கு விசாரணைக்காக அந்தத் தமிழ் முனிவர் ஒரு தளபதியின் முன் நிறுத்தப்படுகிறார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தளபதி, தமிழ்முனிவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று விடுவிக்கிறார்.

இருவரும் வெவ்வேறு மதமாக இருந்தும் வெறுப்பு எதையும் கொள்ளாமல் பொறுப்பாய் நீதி வழங்கிய தளபதியை சந்திக்க விரும்புகிறார் முனிவர்.

முனிவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்ற தளபதி அவரைக் கட்டித் தழுவினார்.சரியாசனத்தில் அமரச் செய்து அளவளாவினார்.

தளபதியின் நீதியை வியந்த அந்த முனிவர்- கான்ஸ்டன்ஸ் யுசேபியுஸ் ஜோசப் பெஸ்கி எனும்- வீரமா முனிவர்!

இறுதிவரை அவரை உற்ற நண்பராகக் கொண்டிருந்த தளபதி -திருச்சிராப்பள்ளிப் பகுதியில் கோவோச்சிய சந்தா ஸாஹிப்!!


மதுரையை ஆண்ட வி.கி.மு. வீ. சொக்கநாத நாயக்கரின் எட்டு மனைவியருள் ஒருவரான மீனாட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட அரசிப் பொறுப்பைக் காப்பாற்றிக் கொடுத்த பெருமையும் (ஆற்காடு நவாபின் மருமனான) இந்த சந்தாசாகிபுக்கு உண்டு.

இவர் 1735-ஆம் ஆண்டு திருச்சி கல்பாளையம் ஊரிலிருந்த இந்து கோவில் அழிக்கப்படக் கூடிய அபாயத்தைத் தடுத்தவரும் ஆவார்.

" ஒரு கிறித்தவ மன்னர் கூடச் சந்தா சாகிபைப் போல கிறித்தவ குருக்களுக்கு அன்பும் ஆதரவும் காட்டி இருக்க இயலாது" என்று சின்ன சவேரியார்- ரோஸ் அடிகளார் 1743-ஆம் ஆண்டு ஒரு கடிதத்தில் பாராட்டி இருப்பதும் இவரைத்தான்.

1737-40 -ஆம் ஆண்டுகளில் கோவா மறை மாநிலத் தலைவர் பொருளாதார நெருக்கடியில் துன்புற்றதை அறிந்ததும் 350 பொற்காசுகளை அனுப்பி உதவியவர் சந்தா ஸாஹிப்.

"அருந்தமிழ் இலக்கணம் ஐந்தையும்
விரித்து விளக்கின வீரமா முனி",
தமிழுக்குக் கதையும் காப்பியமும் அளித்த அருந்தமிழ்ப் பணியாளரும் ஆவார்.

அவருக்கு இறுதிவரை உற்ற நண்பராக இருந்து ஒல்லும் வகையெல்லாம் உதவியவர்,
சமய நல்லிணக்க ஆர்வலரான சந்தா ஸாஹிப்!

-------------------------------------------------------------------------
(A map of the Carnatic containing the territory of Tanjore ruled by the Nawab of the Carnatic, Chanda Sahib.)/ மறுபதிவு/

No comments: