இந்தச் சமுதாயம் யாருக்கும்
தாழ்வில்லை
இந்திய வரலாற்றில் எம்பங்கும்
குறைவில்லை!
(இந்தச்)
சிந்திய ரத்தம் சரித்திரம்
சொல்லும்--அந்தச்
சிவந்த வானமும் எம்புகழ்
பாடும்!
அந்நியர் காலடி மண்ணில்
பதிந்தது---அவர்
ஆணவம் அடங்கத் தன்னுயிர்
தந்தது!
(இந்தச்)
திப்புவின் வீரம் மறப்பது
துரோகம்--அதைத்
திரித்துப் பேசுதல் தேச
விரோதம்!
கப்பிய அடிமைத் தளைகளை
அறுத்தார்---வெள்ளைக்
கார்கள் தம்மைச் சிறையிலும்
அடைத்தார்!
(இந்தச்)
பறங்கியர் தலைக்கு நாளினைக்
குறித்தார்--அவர்
பதறிக் கதற வாளினை
எடுத்தார்
உரிமைப் போரில் உயிரினை
நீத்தார்---திப்பு
உலகின் வீர அதிசயம்
ஆனார்!
(இந்தச்)
மலபார் பக்கம் மாப்பிள்ளை
மார்கள்--தம்
வரலாறு படைக்கப் போர்க்களம்
புகுந்தார்
தலைகால் சிதறித் தன்னுயிர்
இழந்தார்--இத்
தாய்த்திரு நாட்டின் மானம்
காத்தார்!
(இந்தச்)
பாக்கிஸ் தான்படை எல்லையில்
நின்றது---நம்
பாரதப் படையே முடிவில்
வென்றது!
தாக்கும் டாங்கியைத் தன்மேல்
ஏற்றார்---நம்
ஹவில்தார் ஹமீதே இன்னுயிர்
ஈந்தார்!
(இந்தச்)
மானம் காக்க அனைத்தும்
தருவோம்--எம்
மார்க்கம் தழைக்கத் தியாகம்
புரிவோம்!
ஈனர் எம்மை இழிவு
செய்தால்--இங்கு
இருப்பதோ ஓருயிர் இழக்கவும்
தயங்கோம்!
(இந்தச்)
தேசம் வெல்ல ஆயுதம்
தூக்குவோம்--எதிரி
தெரிந்தவர் எனினும் அவர்சிரம்
நீக்குவோம்!
வேஷம் புனைபவர் மோசம்
கலைப்போம்---எம்மை
வேற்றவர் என்னும் கோஷம்
அழிப்போம்!
(இந்தச்)
( 1997--ஆம் ஆண்டு,சகோதரத்துவக் குரல் மாதயிதழில் வெளியானது.
அந்த நேரம் பாடகர் குமரி அபுபக்கர் அலுவலகம் வந்திருந்தார்.
பாடலைப் பார்த்தார்.
கவிஞரே! இப்பாடலை நான் சில மேடைகளில் பாடுவேன் எனக்கு கூறி இதழை எடுத்துச் சென்றார்.
ஆனால் பாடினாராவென எனக்குத் தெரியாது)
Hilal Musthafa
No comments:
Post a Comment