Friday, June 12, 2020

ஷாக்கைக் குறைப்போம்


ஷாக்கைக் குறைப்போம் 
Shahjahan R

அரசு அலுவலகங்களுக்குப் போகும்போது, ஆள் இல்லாத அறையிலும் பேன் ஓடிக்கொண்டிருக்கும், லைட்டுகள் எல்லாமே எரிந்து கொண்டிருக்கும். நீங்கள் பொது விஷயங்களில் அக்கறை உள்ளவர் என்றால், மனதுக்குள் கோபம் பொங்கும். ஒவ்வொரு மாதமும் வீட்டு மின்சாரக் கட்டண பில் வந்ததும் ஷாக் அடித்ததுபோல உணர்ந்தது ஞாபகம் வரும். எல்லாம் நம்முடைய பணம்... இவனுக வீட்டுப்பணமா இருந்தா இப்படி வீணடிப்பாங்களா என்று கோபத்தில் மனதுக்குள் திட்டுவீர்கள்.

உங்களுடைய தார்மீகக் கோபம் மிகச்சரியானதே. சரி, உங்களுடைய வீட்டுப் பணத்தை நீங்கள் வீணடிக்கவில்லையா என்ன? எங்கே நெஞ்சைத் தொட்டுப் பாருங்கள், நீங்களும் வீணடிக்கிறீர்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? சொல்கிறேன்.



இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் மாதத்துக்கு சுமார் 100 யூனிட் மின்சாரம் செலவு செய்கிறது என்கிறது ஓர் ஆய்வு. (சீனாவில் சுமார் 150, அமெரிக்காவில் 1000, உலக அளவில் சராசரி 300). இது சராசரிதான். ஒரு வீட்டில் 4 டியூப்லைட்டுகள், 2-3 பேன்கள், ஒரு டிவி, ஒரு ஃப்ரிஜ், இன்னபிற சிறிய மின்சாதனங்கள் அளவுக்குள் பயன்படுத்துகிற குடும்பத்தின் சராசரி இது. ஒவ்வொரு அறைக்கும் ஏசி, நவீன மின் சாதனங்கள் எனப் பயன்படுத்துகிற வீடுகளும், ஏராளமான வசதிகளைக் கொண்ட மாளிகைகளும் பயன்படுத்துவது தனிக்கதை. அது ஒருபுறம் இருக்கட்டும். இங்கே, உங்களையும் என்னையும்போல - ஊஹும்... என்னைப்போன்ற நடுத்தர வர்க்க வீட்டில் பயன்படுத்துகிற பொருட்களையும், அவற்றில் எவ்வாறெல்லாம் வீணாகிறது என்று பார்ப்போம்.

டியூப் லைட் / விளக்குகள்
மின்விசிறிகள்
ப்ரிஜ்
கெய்சர்
ஓவன்
கம்ப்யூட்டர்
லேப்டாப்
சிடி பிளேயர்
கூலர் / ஹீட்டர்
செல்போன்

இவை எல்லாவற்றையுமே சரியாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். உடனே பதில் தர வேண்டாம். நிதானமாக யோசியுங்கள்.
பெட் ரூமிலிருந்து வெளியே வரும்போது பெட்ரூமின் ஃபேனையும் லைட்டையும் அணைத்து விட்டு வந்தீர்களா?
குளிர் காலத்தில் குளிப்பதற்கு பாத்ரூமில் ஹீட்டர் / கெய்சர் போட்டீர்கள். வேலை முடிந்ததும் அணைத்தீர்களா?
கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தீர்கள். இடையில் எழுந்து வேறு வேலையாகச் சென்றீர்கள். கம்ப்யூட்டரை அணைத்தீர்களா? மானிட்டரையாவது அணைத்தீர்களா?
வெயில் காலத்தில் கூலரைப் போட்டீர்கள். தேவையில்லாதபோது அணைத்தீர்களா?
லேப்டாப் பயன்படுத்துகிறீர்கள். அது எந்நேரமும் சார்ஜில் இருக்கிறதா இல்லையா?
செல்போன் சார்ஜ் ஏற்றினீர்கள். சார்ஜரை கழட்டினீர்களா இல்லை ப்ளக் பாயின்டில் அப்படியே இருக்கிறதா?

என்னது... சார்ஜரா? ஹ... சார்ஜருக்கெல்லாம் என்ன பெரிதாக செலவாகி விடும்?
இப்படித்தானே நினைத்தீர்கள்?
சார்ஜருக்கு மட்டுமல்ல, எல்லாவற்றுக்குமே மின்சாரம் செலவாகும். கண்ணுக்குத் தெரியாமல் இப்படி பல வகைகளில் நம் வீட்டிலும் மின்சாரம் வீணாகிறது, நம்முடைய பணத்தை நாம் அறியாமலே வீணடிக்கிறோம். மின்சார சாதனங்களைப் பற்றிய விஷயம் மிகவும் விரிவானது. அடுத்தடுத்த பதிவுகளில் எழுத முயற்சி செய்வேன். இப்போதைக்கு நீங்களும் நானும் இந்த பேஸ்புக் பதிவைப் பார்க்கப் பயன்படுத்துகிற செல்போன் சார்ஜரைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

அதற்கும் முன்னால், மின்சாரக் கட்டணத்தில் குறிப்பிடப்படும் யூனிட் எப்படி கணக்கிடப்படுகிறது என்றும் எளிமையாகப் பார்ப்போம்.
வீட்டில் ஒரே ஒரு ட்யூப் லைட்தான் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ட்யூப் லைட்டுக்குத் தேவையான மின்சாரம் சுமார் 40 வாட்.
அதாவது, ஒரு மணிநேரம் லைட் எரிந்தால் 40 வாட் செலவாகும்.
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை எரிகிறது என்றால், 4 x 40 = 160 வாட்
ஒரு யூனிட் என்பது 1000 வாட்கள்.
6 x 160 = 960. ஆக, சுமார் ஆறு நாளுக்கு ஒரு யூனிட் செலவாகும். அதற்கான கட்டணம் செலுத்துவீர்கள்.

இப்படியே ஒவ்வொரு பொருளுக்கும் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு வித்தியாசப்படும். அதைப் பிறகு பார்ப்போம். இப்போது சார்ஜரை மட்டும் பார்ப்போம்.

இன்று சார்ஜருக்குத் தேவைப்படும் மின்சாரம் சுமார் 5-7 வாட்.
5 வாட் என்றே வைத்துக் கொள்வோம்.
ஒரு மணி நேரம் சார்ஜ் போட்டால் செலவாகிற மின்சக்தி 5 வாட்.
பொதுவாக ஒரு முறை முழு சார்ஜ் ஏற ஒரு மணி நேரம் ஆகிறது என்றால் 5 வாட் செலவு.
சார்ஜ் ஏற இரண்டு மணி நேரம் என்றாலும்கூட, 10 வாட் செலவு.
முப்பது நாளுக்கு 300 வாட் செலவு - அதாவது 0.3 யூனிட்.
யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 5 ரூபாய் கட்டணம் என்றால் மாதத்துக்கு செல்போன் சார்ஜருக்கு ஆகும் செலவு 1 ரூபாய் ஐம்பது பைசா. நாளுக்கு இரண்டு முறை சார்ஜ் போட்டாலும், மாதத்துக்கு செலவு 3 ரூபாய்.

24 மணி நேரமும் ப்ளக் பாயின்ட்டில் போட்டு வைத்திருந்தால், ஆகிற மின்சாரச் செலவு 24 x 5 = 120 வாட்.
முப்பது நாட்களுக்கு 30 x 120 = 3600 வாட் - அதாவது 3.6 யூனிட்.
யூனிட்டுக்கு 5 ரூபாய் வீதம், மாதத்துக்கு சுமார் 18 ரூபாய்.
மிகச்சிறிய விஷயம். இதில் வீணடிக்கப்படுவது 18 – 3 = 15 ரூபாய்.
ஹ... இவ்வளவுதானே என்று யோசித்தால், வருடத்துக்கு 12 x 15 = 180 ரூபாய்.

உங்கள் பர்சிலிருந்த 10 ரூபாயோ 50 ரூபாயோ காணாமல் போனால் பதற மாட்டீர்களா. அதுவே 200 ரூபாய் என்றால்? எங்கே தொலைத்திருப்பேன் என்று வெகுநேரத்துக்குக் குழம்புவீர்களா இல்லையா? எந்தக் கடைக்காரன் ஏமாற்றியிருப்பான் என்று சந்தேகம் வருமா இல்லையா? வீட்டில் இருக்கிற யாரேனும் எடுத்திருப்பார்கள் என்று சந்தேகப்படுவீர்களா இல்லையா? சந்தேகமும் தீராமல், காரணமும் தெரியாமல் வீட்டில் மறறவர்களுடன் கோபப்படுவீர்கள் இல்லையா?

இதோ... நம்முடைய அலட்சியத்தால், சின்ன விஷயம் என்ற கவனக்குறைவால் 180 ரூபாய் வீணடிக்கிறோம்.

ஒண்ணொண்ணா நூறா... ஒருமிக்க நூறா என்பதில் இதுவும், இன்னும் இதுபோலப் பலதும் அடங்கும். அவற்றை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

மின்சாரத்தை மட்டுமல்ல, போனையும் சிக்கனமாகப் பயன்படுத்த சில டிப்ஸ்களையும் இதில் பார்ப்போம். இவை தயாரிப்பாளர்கள் கூறும் அறிவுரைகள். இப்போது பயன்படுத்தப்படும் பேட்டரிகள் லிதியம்-அயன் பேட்டரிகள்.
• போன் பேட்டரிக்கு தினமும் 100% சார்ஜ் ஏற்ற வேண்டாம்.
• மாதம் ஒருமுறை மட்டும் 0%-100% வரை சார்ஜ் ஏற்றலாம். அதாவது, ஃபோனை ரீஸ்டார்ட் செய்வது போல.
• தினமும் 80% ஏற்றினால் போதும். தினமும் முழு ரீசார்ஜ் செய்வது பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும்.
• பேட்டரி 20%க்குக் குறைவாக இருக்க விட வேண்டாம்.
• இரவில் படுக்கப்போகும்போது சார்ஜில் போட்டுவைத்து விட்டுப் போக வேண்டாம்.
• சூடாக இருக்கும் இடங்களில் போனை வைக்க வேண்டாம். (சமையலறையில் அடுப்புக்கு / ஓவனுக்கு அருகில், அல்லது காரில்.) பேட்டரி கெட்டுப்போகும்.
• சார்ஜ் இல்லாமல் 0% நிலையில் நீண்ட நாட்களுக்கு விட்டுவைக்க வேண்டாம். பேட்டரி மொத்தமாக செத்துப்போகும் ஆபத்து உண்டு.
• சார்ஜில் போட்டிருக்கும்போது கேம் விளையாடவோ, பேசவோ வேண்டாம்.
• தவிர்க்க முடியாத சூழல் இருந்தால் தவிர, உங்கள் போன் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். வேறு போன்களுக்கான சார்ஜர் வேண்டாம்.

செல்போனுக்குச் சொன்ன இந்த விஷயங்கள் லேப்டாப்புக்கும் பொருந்தும். லேப்டாப் பேட்டரியையும் எந்நேரமும் சார்ஜ் ஆகும் நிலையில் வைத்திருக்க வேண்டாம். சார்ஜ் இருக்கும்போது நீக்கி விடுங்கள், தீரும் நிலையில் போட்டுக்கொள்ளுங்கள். (நானும் இன்று முதல் இதை கறாராகப் பின்பற்றப் போகிறேன்.)

மின்தடை ஏற்பட்டு விட்டால் சற்று நேரத்தில் பேட்டரி தீர்ந்து போய் வேலை தடங்கலாகி விடுமே... என்று சிலர் கேட்கலாம். வொர்க் ஃப்ரம் ஹோம் நிலையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினைதான். அப்படிப்பட்டவர்கள் வீட்டில் பெரும்பாலும் யுபிஎஸ் (இன்வர்ட்டர்) இருக்கும், அதில் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் மின்சாரம் வரும்வரை காத்திருப்பதால் ஏதும் நஷ்டமாகிவிடப் போவதில்லை.

மின்சாரம் தொட்டால் மட்டுமே ஷாக் தருவதில்லை. பில்லைப் பார்த்தாலும் ஷாக் அடிக்கும். :)

Simplicity boils down to two steps: Identify the essential. Eliminate the rest.
எளிமையின் சாரம் இதுதான் : அத்தியாவசியங்களை அடையாளம் காணுங்கள். மற்றவற்றை நீக்குங்கள்.
- Leo Babauta

#சிக்கனம் 4


Shahjahan R

No comments: