முதல் முஅத்தின் பிலால்
அபிசீனிய அடிமை பிலால்
அழகானது பாங்கு அவர் குரலால்
அபீசீனியா பிலால் தந்தை வாழ்ந்த ஊரின் பேராகும்
புனித மக்காதான் பிலால் பிறந்த ஊராகும்
அரபி உச்சரிப்பு பிலாலுக்கு கொஞ்சம் கொன்னல்தான்
ஆனால் அவர் குரலில் இருந்தது கன்னல்தான்
ஒரேயொருநாள் சொல்லவில்லை பிலால் ஃபஜ்ருக்கான பாங்கு
அண்ணலின் அனுமதியுடன் ஜியாத் இப்னு ஹாரிஸ் சொன்னார் ஆங்கு
அன்று ஏன் பாங்கொலி கேட்கவில்லை என்று கேட்டார் ஜிப்ரயீல் வானவர்
அர்ஷின் எல்லைவரை கேட்ட குரலுக்கு பிலால் சொந்தக்காரர் ஆனவர்
உமய்யா இப்னு கலஃப் என்று ஒரு பெரும் பணக்காரன்
அடிமைகளை வதைத்து மகிழ்ந்த குணக்காரன்
ஒட்டகம் மேய்ப்பது, கடவுளர் சிலைகளை கவனிப்பது
அடிமை பிலாலின் அன்றாட வேலைகள்
ஆனாலும் பதுமைக்கு முன்னால் உமையா படுத்துப் புரண்டது
புதுமையாக இருந்தது பிலாலுக்கு
பெருமானாருக்கு அப்போது இறைக்கட்டளை பிறக்கவில்லை
மக்கள் நெஞ்சங்களில் இஸ்லாம் மீண்டும் திறக்கவில்லை
முப்பது வயதானபோதுதான் முஸ்தஃபாவை முதன்முதலாகப் பார்த்தார் பிலால்
அபூபக்கரைப் பார்க்க அண்ணல் வந்தபோது அந்த வாய்ப்பு கிடைத்தது பிலாலுக்கு
அபூபக்கரைத் தொடர்ந்து பிலாலும் இஸ்லாத்தில் இணைந்தார்
அந்த உண்மையைக் குறைக்கவும் இல்லை, பிறரிடம் மறைக்கவும் இல்லை
ஆத்திரத்தில் உமையா கொதித்தான்
அடிமை பிலாலுக்கு சித்திரவதைகளை விதித்தான்
பகல் முழுதும் உருக்குச் சட்டையும் பாறாங்கல்லும்
இரவுகளில் சங்கிலிகளும் சாட்டையடிகளும்
பாலைச் சுடுமணலில் படுக்க வைத்து நெஞ்சில் பாறையேற்றி
குருதியும் கொழுப்பும் வழிந்தோட கொடுமைகள் செய்தபோதும்
அழுத்தி அழுத்தி நெஞ்சில் ஆக்ரோஷமாய் மிதித்தபோதும்
’அஹதுன் அஹதுன்’ என்றே அடித்துச் சொன்னார் அடிமை பிலால்
நிறத்தால் பிலால் நிறைவான கருப்பு
உளத்திறத்தால் நிறைந்திருந்தது ஈமானின் சிறப்பு
அபூபக்கர்தான் அடிமை பிலாலை தன் பணத்தில் விடுவித்தார்
அண்ணலாரை அதன் பலனாய் அபூபக்கர் மகிழ்வித்தார்
பிலாலை விடுவித்தார் அபூபக்கர் இருநூறு காசுகள் எடுத்துச் சென்று
பிலாலை அழைத்தார், ’எழுந்திருங்கள், எம் தலைவரே’ என்று!
அபூபக்கர் இல்லத்துக்கு மெல்ல வந்தார் பிலால் தயங்கி
ஐந்து நாட்கள் தொடர்ந்து கிடந்தார் மயங்கி
ஆறாவது நாள் அண்ணலார் பிலாலை அணைத்துக்கொண்டார்கள்
உடல் சிலிர்த்த பிலாலை தன்னோடு இணைத்துக்கொண்டார்கள்
அடிக்கப்படுவதுதான் பிலாலின் அன்றாட அனுபவம்
அணைக்கப்பட்டது அன்று முதல் அனுபவம்
அடிமை பிலாலை வதைத்த உமையா இப்னு கலஃப் பத்ருப்போரில் அழிந்தான்
அருமை பிலாலின் கையாலே அன்று அவன் ஒழிந்தான்
தொழுகைக்கான அழைப்பு உருவாகாத காலமது
பாங்கின் சொற்கள் முழுமையாக முடிவாகாத காலமது
’ஹானதிஸ்ஸலாஹ்’ என்று அப்துல்லாஹ் இப்ன் ஜைது தெருக்களில் கூறுவார்
’அஸ்ஸலாத்துல் ஜாமி’ஆ’ என்று பிலால் பள்ளிவாசலில் கூறுவார்
பின் வந்தது அப்துல்லாஹ் இப்னு ஜைதுக்கு ஒரு கனவாக
பாங்கிற்கான சொற்கள், ஆன்மாவுக்கான உணவாக
கும் யா பிலால், அரிஹ்னீ பிஸ்ஸலா
எழுங்கள் பிலாலே, உம் அழைப்பால் எனக்கு உயிரூட்டுங்கள்
என்று பெருமானார் கூறுவார்கள்
பாங்கை ஒலிக்க பிலால் முன்னேறுவார்கள்
ஒருமுறை பிலால் பாங்கு சொல்லிவிட்டார் வைகறைக்கு முன்பே
அதையும் ஏற்றுக்கொண்டது பெருமனாரின் அன்பே
மக்கா மதினாவில் ஃபஜ்ருக்கு பாங்கு சொல்வது இரண்டு முறை
அன்றிலிருந்து வழக்கமானது இன்று வரை
பிலாலின் வைகறை பாங்கு காதில் விழ
பள்ளிக்கு விரைந்திடுவார்கள் பெருமானார் இறைவனைத்தொழ
ஒருநாள் பெருமானார் தொழுகைக்கு வந்தார்கள் சற்று மெதுவாக
அக்கணத்தின் உதிப்பில் சொன்னார் பிலால் ’அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்’ என்று புதிதாக
’இன்றிலிருந்து இதையும் வைகறை பாங்கில் சேருங்கள்’ என்று பெருமானார் சொல்ல
அன்றிலிருந்து அதுவும் சொல்லப்படுகிறது தொழுவோர்கள் விழித்துக்கொள்ள
இறைவனைத் தொழ அழைப்பதும் பிலால்தான்
போருக்கு எழ அழைப்பதும் பிலால்தான்
’ஹய்ய அலஸ்ஸலா’ (தொழுகைக்கு வாருங்கள்) என்றும் அழைப்பார்
தேவைப்பட்டால் ’ஹய்ய அலல் ஜிஹாத்’ (புனிதப்போருக்கு வாருங்கள்) என்றும் அழைப்பார்
பெருமானார் சொன்னார்கள்:
எனக்கு முன்னால் சுவனத்தில் கேட்டேன் உம் காலடி ஓசை
எந்த நற்செயலால் நீர் பெற்றீர் அப்பேற்றை என்று தெரிந்துகொள்ள ஆசை!
தீமை எதுவும் செய்ததில்லை, பிழைபொறுக்க இரண்டு ரக்’அத் தொழுதிடுவேன்
வளூ முறிந்துவிட்டால் உடனே வளூ செய்து இறைவனிடம் அழுதிடுவேன்
பெருமானார் சொன்னார்கள்:
அதன் பலனே நீர் பெற்ற அப்பேறு
அது இறைவன் உமக்களித்த கைம்மாறு
க’அபாவின் முகட்டின் மீது ஏறி பாங்கு சொன்ன ஒரே நபர் பிலால்
அது கண்டு குறைஷிகள் பொறாமைப்பட்ட ஒரே நபரும் பிலால்
அண்ணலார் மறைந்த அன்று பிலாலால் பாங்கு சொல்ல முடியவில்லை
மயங்கி விழுந்த பிலாலால் அண்ணலின் இழப்பைத் தாங்கிகொள்ள முடியவில்லை
பெருமானாரின் பிரிவுக்குப்பின் பிலால் பாங்கு சொல்ல மறுத்துவிட்டார்
அபூபக்கர் கேட்டுக்கொண்டும் அவர் அதனை வெறுத்துவிட்டார்
உமரின் ஆட்சியில்தான் சிரியா சென்றார் பிலால்
உமர் கேட்டுக்கொள்ள ஜெருசலத்தில் மீண்டும் சொன்னார் பாங்கு
கனவில் பெருமானாரைக் கண்டு மீண்டும் மதினா சென்றார் பிலால்
பேரர்கள் கேட்டுக்கொண்டதால் மீண்டும் சொன்னார் பாங்கு
அதுதான் அவர் கடைசியாக விடுத்த தொழுகைக்கான அழைப்பு
பின் சிரியாவில் அவர் கண்டது ஆரோக்கியத்தின் இழப்பு
மனைவியிடம், ’நாளை என் வேந்தரை நான் சந்திப்பேன்’ என்றார்
சொன்னதுபோலவே இவ்வுலகை விட்டு மறுநாள் சென்றார்
Mohamed Rafee நாகூர் ரூமி
---------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment