Sunday, June 7, 2020

#ஆப்பிரிக்க_மக்கள்_அமெரிக்காவின் #அடிமைகளாக_மாற்றப்பட்ட_வரலாறு அத்தியாயம் - ஐந்து

Abu Haashima

·







#லூதர் ....
மாசா வாலரின் வண்டி ஓட்டியாக இருந்த கறுப்பு அடிமை.
ஒரு அடிமைப்பெண் தப்பியோட உதவி செய்தான் என்பதற்காக
அவனை போலீசில் பிடித்துக் கொடுத்து அடிமைச் சந்தையில் விற்கச் சொன்னார்மாசா வாலர் .
கதறக் கதற ஷெரீப் அவனை இழுத்துச் சென்று அடிமை வியாபாரியிடம் விற்று விடுவான்.



லூதருக்கு பதிலாக குன்டா புதிய வண்டியோட்டியாக நியமிக்கப்பட்டான்.
குன்டாவுக்கு இப்போது 37 வயது ஆகி இருந்தது.அவன் பெல்லை தனது இருபதாவது வயதில் விரும்ப ஆரம்பித்திருந்தான் .
இத்தனை வருஷம் ஆனபிறகும் அவளை மணமுடிக்க முடியவில்லை.
திருமணத்திற்கு மாசாவிடம் அனுமதி வாங்குவது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.

குன்டா மாசாவின் வண்டியோட்டி ஆனபிறகு மாசாவோடு கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டது.
மாசாவுக்கும் குன்டா பெல் காதல் விவகாரம் தெரிந்திருந்ததால் திருமணத்திற்குஅனுமதி கொடுத்து விட்டார்.

மாசா வாலர் வீட்டு முற்றத்தில் ஒரு மாலை நேரத்தில்
#குண்டா_பெல்_திருமணம்_நடந்தது.
பிடிலர் உட்பட அடிமைச்சேரியிலுள்ள மக்கள் வந்து வாழ்த்தினார்கள்.
திருமணத்தின்போது குண்டாவுக்கு வயது நாற்பது ஆகி இருந்தது.
பெல்லுக்கு 42 வயது.
குண்டாவை விட பெல்லுக்கு இரண்டு வயசு அதிகம்.

1790 ம் ஆண்டு பெல் தனது 43 வது வயதில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.
தன் தந்தை தனக்குப் பெயர் வைத்த குடும்ப பாரம்பரிய வழக்கப்படி இரவு நேரத்தில் குழந்தையை தூக்கி கொண்டு இருட்டான பகுதிக்குச் சென்ற குன்டா
குழந்தையை வானத்தை நோக்கி உயரே தூக்கி
#உன்_பெயர்_கிஸ்ஸி என்று மூன்று தரம் சொன்னான்.
தந்தை உமரோ அவன் காதில் சொன்னவைகளையே தன் குழந்தைக்கும்அவன் சொன்னான்.

• உமரோ பின்டா தம்பதிகள் முதல் தலைமுறை
• குன்டா இரண்டாம் தலைமுறை
• கிஸ்ஸி மூன்றாம் தலைமுறை

மாசா வாலரின் தம்பி ஜான் வாலருக்கும் ஒரு பெண் குழந்தை ஒரு வருடத்திற்கு முன்னால் பிறந்திருந்தது .
அதன் பெயர் மிஸ்ஸி அன்னி.

மாசா வாலருக்கு அந்தக் குழந்தை மீது கொள்ளைப் பிரியம்.
தம்பி வீட்டிலிருந்து குழந்தையை அடிக்கடி தனது வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்.காரணம் மாசா வாலருக்கு குழந்தை கிடையாது.
நாட்கள் செல்லச் செல்ல மிஸ்ஸி அன்னியும் கிஸ்ஷியும் நெருக்கமாகப்
பழகினார்கள். இருவரும் நல்ல தோழிகளாக இருந்தார்கள்.
அதை மாசா தவறாக எண்ணவில்லை. மாறாக மிஸ்ஸி அன்னி தன் வீட்டிற்கு வந்து தங்கி இருக்கும் நாளெல்லாம் கிஸ்ஸியும் அவளோடு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதனால் எப்போதும் மாசாவின் வீட்டில் சர்வ சுதந்திரமாக நடமாடினாள் கிஸ்ஸி.

கிஸ்ஸி வளர வளர அவளுக்கு தனது வரலாறையும் தனது பெற்றோரைப் பற்றியும் ஜுஃப்பூரின் கலாச்சாரப் பெருமைகளையும் மாண்டிங்கா மொழியையும் கற்றுக் கொடுத்தான் குன்டா .
கூடவே ... வெள்ளையர்களால் தான் கடத்தப்பட்ட வரலாறையும் அனுபவித்த சித்திரவதைகளையும் சொன்னான்.
பெல்லும் அவைகளை கேட்டு அறிந்து கொண்டாள்.

மிஸ்ஸி அன்னி பருவம் வந்த பிறகு மாசா வாலரின் வீட்டுக்கு வருவதை
நிறுத்திக் கொண்டாள்.
கிஸ்ஸியின் நட்பையும் துண்டித்துக் கொண்டாள்.
கிஸ்ஸிக்கு பதினாறு வயதானபோது நோவா என்ற கருப்பு இளைஞனோடு
அவளுக்கு நட்பு ஏற்பட்டது.
மிஸ்ஸி அன்னியுடனான நட்பின் காரணத்தால் கிஸ்ஸி நன்றாக எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டிருந்தாள்.
அதை தெரிந்துகொண்டு நோவா கிஸ்ஸியிடம் ஒரு போலி பயணச் சான்றிதழை எழுத வைத்தான்.
தான் வடக்கே தப்பிச் சென்று நிறைய பணம் சம்பாதித்து வந்து கிஸ்ஸியை தன்னோடு அழைத்துச் செல்வதாகச் சொன்னான். கிஸ்ஸியும் அதை ஏற்று
தன் கைப்பட ஒரு போலி பயணச் சீட்டை எழுதிக் கொடுப்பாள்.
அதை எடுத்துக் கொண்டு நோவா அடிமைச்சேரியிலிருந்து தப்பிச் சென்று விடுவான். ஆனால் அநியாயமாக போலீசிடம் மாட்டிக் கொண்டு அடிதாங்க முடியாமல் அவன் தப்பிக்க சான்றிதழ் எழுதிக் கொடுத்தது கிஸ்ஸி என்பதை சொல்லி விடுவான்.
விஷயம் தெரிந்ததும் மாசா கடும் கோபத்துக்கு ஆளாகி மிருகமாகி விடுவான்.

பிறந்தது முதல் இத்தனை வருஷங்கள் தன் வீட்டில் வளர்ந்த பிள்ளை என்றும் பாராமல்அவளை ஷெரீபிடம் ஒப்படைத்து அடிமை சந்தையில் ஏலத்தில் விடச் சொல்லி விடுவான்.
கின்டாவும் பெல்லும் கிஸ்ஸியும் கதறுவார்கள்.
அவர்களின் எந்தக் கதறல் சத்தமும் மாசாவின் காதில் ஏறாது.
ஈவிரக்கமே இல்லாமல் கிஸ்ஸியை விற்று விடுவான்.

கிஸ்ஸியை குன்டாவிடமிருந்து பறித்து செல்லும்போது குன்டாவின் வயது 55.
கின்டாவும் பெல்லும் மாசாவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் அழுது அழுது சோர்ந்து போய் விடுவார்கள்.

கிஸ்ஸி உணர்விழந்த நிலையில் தூக்கிச் செல்லப்படுவாள்.
அவளுக்கு நினைவு வரும்போது
தான் ஒரு அழுக்கான இருட்டறையில் கிடப்பதை பார்த்து அலறுவாள்.
கிஸ்ஸியை விலைக்கு வாங்கியவன் #பெயர்_டாம்லீ .
மகா மட்டமானவன். பெரும் குடிகாரன்.
கோழிச் சண்டை நடத்தி பணம் சம்பாதிப்பவன். பெண்கள் மீது அபாரமான வெறி பிடித்தவன்.
அடிமை வியாபாரியிடம் இருந்து 700 டாலர் கொடுத்து கிஸ்ஸியை விலைக்கு வாங்கியவன்.
கறுப்பாக இருந்தாலும் 16 வயது கிஸ்ஸி அழகாக இருப்பாள். அதனாலேயே அவளை விலைக்கு வாங்கி வந்தான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு கண்விழித்த கிஸ்ஸியின் முன்னால்
கையில் சாட்டையோடும் அரிக்கேன் விளக்கோடும் நின்று கொண்டிருந்தான்
டாம்லீ.
கிஸ்ஸியின் சர்வமும் நடுங்கியது.
தமிழ் ஆங்கில இந்தி தெலுங்கு பட
மகா கெட்ட வில்லன்களைப்போல கிஸ்ஸியை அடித்தும் உதைத்தும் சித்திரவதை செய்தும் பலவந்தமாக அவளை சூறையாடினான்.
தன் தாய் தந்தையை நினைத்து கிஸ்ஸி கண்ணீர் விட்டுக் கதறி மூர்ச்சையானாள்.
அதன் பிறகு அவள் டாம்லீயின் அடிமையாகி தினந்தோறும் அவனின் காம்ப்பசிக்கு இரையானாள்.
பகலில் அவன் வயலில் மாடுபோல வேலை செய்தாள்.

பத்து மாதத்தில் கிஸ்ஸி ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள்.
அது 1806 ம் ஆண்டு.
குழந்தைக்கு ஜார்ஜ் என்ற தனது பழைய அடிமையின் பெயரை வைக்கச் சொன்னான் டாம்லீ.
மேடம் மலிஸி என்ற அடிமைப் பெண்தான் கிஸ்ஸியை மகளைப்போல பார்த்துக்கொண்டாள்.

ஆப்பிரிக்க நாட்டின் ஜாஃபூர் கிராமத்து உமரோவின் நாலாவது தலைமுறையான ஜார்ஜ் அமெரிக்காவில் வளர்ந்தான்.

அவன் வளர வளர தன்னுடைய தந்தை குன்டா கின்டே தன்னிடம் சொன்ன குடும்ப வரலாறுகளை மகனிடமும் சொன்னாள் கிஸ்ஸி. மான்டிங்கா மொழியையும் கற்றுக் கொடுத்தாள்.
ஜார்ஜ் அவைகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டான்.
டாம்லீதான் தன் தந்தை என்பதையும் தெரிந்து கொண்டான்.

அதே நேரம் அமெரிக்காவில் கறுப்பர்களின் உரிமைப் போராட்டம் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது.

டாம்லீ சொந்தமாக ஒரு கோழிப் பண்ணை வைத்திருந்தான்.
சேவல்களும் சண்டைக்கோழிகளும் அங்கே இருந்தன.
அவற்றை பராமரித்து சண்டைப் பயிற்சியளிக்க நீக்ரோ கிழவல்
#மிங்கோ என்பவரை வைத்திருந்தான்.
கோழிச் சண்டை பந்தயங்களில் மிங்கோ பயிற்சியளித்த கோழிகள் வெற்றி பெற்று டாம்லீக்கு கணிசமான வருமானத்தை தந்து கொண்டிருந்தன.
அவற்றை குடித்தும் பெண்களுக்காக செலவு செய்தும் ஊதாரித்தனமாக நடந்தான் டாம்லீ. அவன் மனைவி அவனைக் கண்டாலே பயந்து நடுங்கினாள்.

ஜார்ஜுக்கு 12 வயதானபோது
அவன் கோழிக் கிழவன் மாமா மிங்கோவுடன் கோழிகளை பராமரிக்கும் வேலையில் சேர்ந்தான்.
மிங்கோவின் திறமைகளை கூடவே இருந்து கவனித்து கோழிகளுக்கு பயிற்சியளிக்கும் கலையை கற்றுக் கொண்டான் ஜார்ஜ்.
வருஷங்கள் ஓடியபோது கோழிச் சண்டையில் திறமை பெற்று விளங்கினான் ஜார்ஜ்.
கோழி ஜார்ஜ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டான்.

#இறுதிப்பகுதி_இன்ஷா_அல்லாஹ்
#நாளை

M S Abdul Hameed எழுதிய
#வேர்கள் நூலின் அணிந்துரை .

Abu Haashima

No comments: