Friday, March 5, 2021

சுல்தான் சலாஹுத்தீன் அவர்கள் ஜெருசலமை வெற்றி கொண்ட மற்றும் அந்த வெற்றியை தக்க வைத்த நிகழ்வுகளை விவரிக்கும் "Saladin" படம்

Aashiq Ahamed


பிரபல பழைய அரபி திரைப்படங்கள், ஆங்கில சப்-டைட்டில்களுடன் Netflix-சில் வெளியிடப்படுகின்றன என்ற செய்தி வெளியான போது, பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த ஒரு திரைப்படம் என்றால், அது, சுல்தான் சலாஹுத்தீன் அவர்கள் ஜெருசலமை வெற்றி கொண்ட மற்றும் அந்த வெற்றியை தக்க வைத்த நிகழ்வுகளை விவரிக்கும் "Saladin" படம் தான்.

1963-ல் வெளிவந்த இப்படம் மிகப்பெரும் பாதிப்பை அரேபிய உலகில் ஏற்படுத்தியதை பலரும் பதிவு செய்திருக்கின்றனர். சுல்தான் சலாஹுத்தீனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் உலக திரைப்படங்கள் மிக சொற்பமே. இன்றைய இஸ்லாமிய அழைப்பு பணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் திரைப்படமான "The Message"- இயக்கிய முஸ்தபா அவர்கள், சுல்தான் சலாஹுத்தீனின் வாழ்வை பிரமாண்ட திரைப்படமாக எடுக்க இருந்த நிலையில் இறைவன் அவரை அழைத்துக்கொண்டான்.

பல ஆஸ்கர் விருதுகளை வென்ற "Gladiator" திரைப்படத்தை கொடுத்த ரிட்லி ஸ்காட், இயக்கி தயாரித்த "Kingdom of Heaven" திரைப்படம் சுல்தான் சலாஹுத்தீன் குறித்து நல்ல முறையில் பேசியிருக்கும். ஒரு காட்சியில், சுல்தான் கதாபாத்திரம் படத்தின் கதாநாயகனிடம், 'ஜெருசலம் என் வசம் வரும்பட்சத்தில், இங்குள்ள ஒரு கிருத்துவரும் கொல்லப்பட மாட்டார்" என்று கூறுவார்.

அதற்கு கதாநாயகன், "உங்களை எப்படி நம்புவது? சிலுவை படைகள் ஜெருசலமை  கைப்பற்றியபோது இங்கிருந்த முஸ்லிம்களை கொன்றொழித்தார்கள். அது போல நீங்களும் செய்யமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?"

"நான் செய்ய மாட்டேன். நான் அவர்கள் போன்றவன் அல்ல. நான் சலாஹுத்தீன்............சலாஹுத்தீன்"

1963-ல் வெளியான அரபி மொழி படத்திற்கு வருவோம். அரபு நிலத்தின் மன்னர்களை ஒன்றுபடுத்தி, சுல்தான் சலாஹுத்தீன் 1187-ல் ஜெருசலமை மீட்கிறார். இதற்கு எதிர்வினையாக இங்கிலாந்து மன்னர் ரிச்சர்ட் தலைமையில் மிகப்பெரும் சிலுவைப்படை ஜெருசலமை நோக்கி பயணமாகிறது. வரலாற்றில் மூன்றாம் சிலுவை யுத்தம் என அழைக்கப்படும் இந்நிகழ்வில் சிலுவை படைகள் தோல்வியை தழுவுகின்றன. வெற்றிகரமாக ஜெருசலமை சலாஹுத்தீன் பாதுகாப்பதுடன் படம் முடிவடைகிறது.

இப்படத்தை பார்த்த போது ஆச்சரியமாகவே இருந்தது. நன்கு செலவு செய்திருக்கிறார்கள். தெளிவான திரைக்கதை, கதாபாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு. குறிப்பாக, அரேபிய கிருத்துவர்கள் சலாஹுத்தீனுடன் இணைந்து சிலுவைப் படைகளுக்கு எதிராக போரிட்டதையும் ஆவணப்படுத்துகிறது படம். ஜெருசலத்தில் சுல்தான் நுழைந்த போது நடைபெறும் சம்பவங்கள் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இப்படம் அக்காலத்தில் பெரிய வெற்றி பெற்றதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. Netflix-இல் "Saladin" என்ற பெயரில் இருக்கிறது, விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம்.

படம்: திரைப்படம் வெளியான போது வந்த போஸ்டர்.

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

No comments: