Friday, March 26, 2021

வாக்காளர் கடமை

வாக்காளர்  கடமை

காலில்  விழுந்து  பிழைப்பை நடத்துவோர்

காலை வாரிப்   பிழைப்பை நடத்துவோர்

குற்ற  வழியில்   பிழைப்பை நடத்துவோர்   

குற்றம்  சொல்லியே பிழைப்பை நடத்துவோர் ..

பழம்பெருமை பேசிப்  பிழைப்பை நடத்துவோர் .

பழயதைக் கிண்டியே பிழைப்பை நடத்துவோர்.

குட்டையைக் குழப்பி பிழைப்பை நடத்துவோர்

குறுக்கு வழியில் பிழைப்பை நடத்துவோர் .

கூட்டணி  சேர்ந்து பிழைப்பை நடத்துவோர் .

கூட்டணி  உடைத்து பிழைப்பை நடத்துவோர் .

 

கொள்கை என்று உரைப்பார்  ஒருநாள் 

கொள்கை தன்னைத்  துறப்பார்  மறுநாள்

கொள்கை ஒன்றே இவர்களுக்கெல்லாம்

கொள்ளை அடிப்பது மக்கள் பணத்தை ..

 

இலவசம் கொடுத்து இசைந்திடச் செய்வார்

பல வேஷம் போட்டு பல்லை இளிப்பார் .

நோட்டுகள்   கொடுத்து ஓட்டுக்கள் வாங்கி

போட்ட பணத்தைப் பெருக்கிடச் செய்வார் .

 

சான்றிதழ் வழங்கிட  லஞ்சம்  பெறுவார் 

சாலைகள் போடக்  கமிஷன் பெறுவார் .

வேலைக்கமர்த்த  , வேற்றிடம் மாற்றிட 

நடவடிக்கைகள்  எடுக்காதிருக்க

விசாரணைகள் நீர்த்துப் போக 

எல்லாவற்றிற்கும்  விலையொன்றுண்டு .

 

 

வீடு கட்ட செங்கல் குவித்தால்

வார்டு மெம்பெருக்கு கப்பம் வேண்டும்.

திட்ட அனுமதிக்கு லஞ்சம் உண்டு .

தண்ணீர் இணைப்புக்கு லஞ்சம் உண்டு  

மின் இணைப்புக்கும்  லஞ்சம் உண்டு .

 

லஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டால்

வீடும் கட்ட முடியாது -இவர்களுக்கு 

ஈடும் கட்ட முடியாது .

காவல் துறை இவர்கள் ஏவல் துறையாம்  .

நீதித்துறையோ  நெடிய  பயணம் .

 

ஜனங்களை நாயாய் அகத்தில் நினைப்பதே

ஜன நாயகம் என்று  ஆனது காணீர் .

 

சாதி ,இனம், மொழி , மதபேதமின்றி

நீதி வழி நிற்கும் நல்லவர்களை  

தேர்தலில்  ஒட்டுக்குப் பணம் வாங்காமல்

தேர்ந்தெடுக்கும் மன  நிலை ஒன்றே -நாம்

தேர்ந்தெடுக்க வேண்டிய வழியாகும் - கற்றுத்

தேர்ந்திடுவோம் இந்த  படிப்பினையை .

 

சேது சுப்ரமணியம்.

 

--

Muduvai Hidayath

Dubai - UAE

+971 50 51 96 433

muduvaihidayath@gmail.com

www.mudukulathur.com

No comments: