நீ இன்னார் மகனாயிருக்க நான்
இன்னார் மகளாயிருக்க வாழ்த்த வந்த உறவுமிருக்க
உனக்கு சொந்தமானேன் திகதியொன்றிலே
என் சகோதரன் கொடுத்த பரீட்சைக்
கட்டணமோ தந்தை கொடுத்த சுற்றுலாப்
பணமோ நீ கொடுத்த மஹர்போல
மணத்திருக்கவில்லை
உன் பொறுப்பில் கைமாற்றப்பட்ட அக்கணமே நீ என்
காவலனாகிவிட்ட உண்மையை உணர்ந்தேன்
உனது ஆடைகொண்டு என்னைப் போர்த்திய முதற்
பொழுதில்தான் என்னைக் காதலித்தேன்
அன்போடு
நீ ஊட்டிய ஒவ்வொரு கவளமும்
தினமும் உன் வாசகியாக எனை
ஆக்கிற்று
மரியானா
ஆழியாய் நீண்டு கிடக்கும் வாழ்வுப்
பாதையில்
நமக்கென
புதையல்கள் காத்துக் கிடக்கின்றன
என் நம்பிக்கையில் உனது முயற்சி கருக்
கொண்டபின்
நமக்கான
இறையருள்கள் எங்கே ஓடிவிடும்
உன் ஆத்மாவிலிருந்து உனக்கெனப் பிரிக்கப்பட்ட மெல்லினம் நானே என் தோழமையில்
நீ அமைதி பெறு
என் எல்லாமாகி விட்ட உனக்கு நான்
சிரம் பணிய இறைகட்டளை ஒன்றுதானில்லை
ஆயிசாவுடன்
ஓட்டத்தில் போட்டியிட்ட திரு நபிகள் தோற்று
நின்றதும் பின்னர் ஜெயித்ததும் பழங்கதையாகி
போகாதவரை
அவர்கள்
ஒரு தொட்டியில் குளித்துப் பரிமாறிய அன்பு மீட்டப்படும் வரை
உன் நிழலில் வரையப்பட்ட என்
சுதந்திரங்களை நீ மீறாதிருக்கும் வரை
நம் திருமணமும் அர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும்
– பர்சானா
றியாஸ்
No comments:
Post a Comment