Monday, March 1, 2021

பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிப்பருவம் வரை /

 

பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரிப்பருவம் வரை ,எண்பதுகளுக்கு முன்னால் மார்க்க சம்பந்தமான அறிவை செம்மைப்படுத்தவும் இலக்கிய ரசனைகளுக்குத் தீனி போடவும் நமக்கிருந்த வாய்ப்புகள் மார்க்கச் சொற்பொழிவுகள் நடைபெறும் மேடைகளே.

பத்திரிகைகள்,நூல்கள் மற்றும் மார்க்க அறிஞர்களுடனான நேரடித் தொடர்புகள் தவிர, இந்த நிகழ்வுகள் அருமையான வாய்ப்புகளாக இருந்தன என்பது மிகையல்ல.ஜும்ஆக்களில் கூட பாரம்பரியமாக அரபு குத்பாக்களை மட்டுமே கேட்டு வந்த நிலையில் தமிழ் பயான்கள் நடைமுறைக்கு வந்து சிறிது காலமே ஆகியிருந்தது அப்போது.எழுபத்தி ஐந்துக்குப் பிறகு என்று நினைவு.

எபது பகுதியில் சின்னப்பள்ளியில் ரபியுல் அவ்வலிலும்,வலியபள்ளியில் ரபியுல் ஆகிரிலும் அஞ்சுவன்னத்தில் துல்ஹஜ்ஜிலும்,தக்கலையில் ரஜபிலும் நடைபெறும் தொடர்ச் சொற்பொழிவுகளை பெரும்பாலும் சென்று கேட்பதுண்டு.

அப்போதைய இலக்கிய மற்றும் மார்க்க ஆளுமைகளான

இறையருட்கவிமணி

கவிக்கோ

சிலேடைக் கவிஞர் சிக்கந்தர்

நெல்லை கலீலுர் ரஹ்மான் ரியாஜி

நீடுர் S R ஷம்ஸுல் ஹுதா

கீரனூர் கலீல் அஹமத்

சிராஜ் அப்துல்ஹை

மலையாளத்தின்

வயலித்தற P K முஹம்மதுக் குஞ்ஞு

கருநாகப்பள்ளி அப்துல் ஸலீம்

சட்டம்பி முஸ்லியார் என்று பெயர்பெற்ற

அப்துல்லா குஞ்ஞு...என்று ஏகப்பட்டோரின் உரையின்பத்தேனை மாந்தி

நெஞ்சங்களில் நிறைவோடு ஏந்தி

மகிழ்ந்ததொரு அற்புதமான காலம்.

மதுரைப் பக்கமிருந்து ஒருவர் வருவார்.பெயர் சரியாக நினைவில்லை.சிரிக்கச்சிரிக்கப் பேசுவார்.அடிக்கடி உரையினூடே மௌலான ரூமியை மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார்.

அதன்பிறகுள்ள காலம்...பல்வேறு பணிகள்..குடும்ப கவனிப்புகள்..வேறுபல சூழ்நிலைகள் காரணமாக பங்கெடுப்பதில் சுணக்கம்.தவிர காலமாற்றம் காரணமாக ஆடியோக்கள்,வீடியோக்கள்,மொபைல் மற்றும் டி வி உரைகள் வீட்டு முற்றத்துக்கே வந்து முழக்கமிடத் துவங்க...அதுபோன்ற நிகழ்வுகளுக்குச் செல்வது அரிதிலும் அரிதாயிற்று...!

(அன்புக்குரிய கவிஞர்

 நிஷா மன்சூர் அவர்களின்

பதிவிற்கு வரைந்த பின்னூட்டம்)


Noor Mohamed

----------------------------------------

"பீரப்பா-பஞ்சவர்ணப் பாளையத்தில் பராபரமாய்ப் பறந்த புறா"

#நிஷாமன்சூர்

தக்கலை பீர்முஹம்மத் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களது சன்னிதானத்தில் கடந்த திங்கட்கிழமை அப்பா அவர்களின் ஞானப் பாடல்களின் தொகுப்பான "றோசு மீஸாக்கு மாலை" நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தும் பாக்கியம் பெற்றேன்.

மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இதுபோன்ற அட்டகாசமான நிகழ்வை எந்த தர்ஹாவிலும் இதுவரை கண்டதில்லை,கேட்டதுமில்லை. ஒன்பது மணிக்குத் தொடங்கிய நிகழ்வு, இரவு 12.30 வரை சிறு தொய்வுமின்றி முழு அரங்கும் நிறைந்து கட்டுப்பாட்டுடனும் கனகச்சிதமாகவும் நடந்தேறியது.

அஞ்சுவன்னம் பீர்முஹம்மதிய்யா ஜமாத் தமது ஆசானை,ஞானத்தந்தையை,முப்பாட்டனைத் தம் சமூகத்தின் கிரீடமாகக் கொண்டாடும் போக்கையும் அவர்களது பாடல்களையும் வரலாற்றையும் தினந்தோறும் கூடிப் பாடியும் ஆய்வுகள் நடத்தித் தெளிந்தும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்  பாங்கினை வியந்து போற்றியதுடன்

பீரப்பாவின் ஞானப் பாடல்கள் என்னுள் ஆத்மார்த்தமாக ஏற்படுத்திய மலர்ச்சியையும் ஞானத் தெளிவையும் பகிர்ந்து கொண்டேன். இதன் அடுத்த கட்டமாக அப்பாவின் பாடல்களை அவற்றின் சாரம் குறையாமல் நவீன கவிதை மொழியில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கிலம்,அரபு உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். கூடவே மஃரிபத்து மாலை,ஞானக் குறவஞ்சி போன்ற பாடல் தொகுப்புகளில் சிலவற்றை காணொளி வடிவமாகவும் நவீனப்படுத்த இயலும் என்பதையும் சுட்டிக்காட்டி அப்படிச் செய்பவர்களுக்கு உரிய பொருளாதார உதவியையும் அளிக்கச் சித்தமாக இருப்பதாகப் பதிவு செய்தேன்.

அதன் பின்னர் பேராசிரியர் ஜாஹிர் ஹுசைன் "ஸஹாபாக்கள் எழுதிய கவிதை" என்கிற தலைப்பில் அருமையான சிறப்புரையை நிகழ்த்தி அரங்கைச் சிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.இன்னும் ஐந்து தினங்களுக்கு தினந்தோறும் கருத்தரங்கம், கலந்துரையாடல், ஆய்வரங்குகள் என்று சீரும் சிறப்புமாக நிகழ்வுகள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு அமர்வும் தமிழ் இஸ்லாமிய ஞான இலக்கிய ஆவணங்களாக முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளன. இந்த முன்மாதிரியைப் பின்பற்றி தமிழக மஹல்லாக்கள்,தர்ஹா நிர்வாகங்கள் இதுபோன்ற ஆரோக்கியமான முன்னெடுப்புகளை நோக்கி நகர்வது நிச்சயம் தமிழ்ச்சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பது என் நம்பிக்கை.

















No comments: