Friday, March 19, 2021

வலித்தாய்

 


வலித்தாய் 

நான் ஒரு பெரும் பணக்காரருக்கு மகனாய்ப் பிறந்தேன். ஆனால் என் எட்டாவது வயதிலேயே அவரின் திடீர் மரணத்தால், ஏழ்மையின் மரணப்பிடியில் சிக்கினேன்.

காரணம், என் தாய் என் தகப்பனாருக்கு இரண்டாவது மனைவி. மூத்த தாரத்தின் பிள்ளைகள் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு எங்களை நடுத்தெருவில் எறிந்துவிட்டார்கள்.

என் தாய்க்கு நானே மூத்தமகன். எனக்கு முன் ஓர் அக்காள். எனக்குக் கீழ் நாற்பதுநாள் கைக்குழந்தையையும் சேர்த்து நான்கு ஆண் பிள்ளைகள்.

பசி என்றால் என்னவென்றும் என்னால் நாளெல்லாம் பேசமுடியும். இளமையில் வறுமையின் வலியை வலிக்க வலிக்க எடுத்துரைக்க முடியும்.

ஆனால், வளர்ந்ததும் புரிந்துகொண்டேன், வலியைத் தந்த இறைவன் அதன் வழியேதான் வாழ்க்கையைத் தந்திருக்கிறான் என்று.

முட்டிமுட்டி பாறை பிளந்து வைரப் பயிராய் முளைவிட எவருக்கும் வகுப்பெடுக்கும் தாய் வலித்தாய்தான்.

பெற்ற தாயின் கண்ணீர் அறிவுரைகள் அவரின் வலி அவருக்குத் தந்த படிப்பினைகள். படி படி படி, எவரிடமும் கை ஏந்தாதே, எவர் முன்னும் தலைகுனியாதே.

வீழ்ந்த பள்ளத்தில் தாழ்ந்து கிடந்தாலும் வாழ்ந்த உயரத்தை என் தாய் ஒருநாளும் இழந்ததில்லை

கருத்தாயின் கண்ணீரும் வலித்தாயின் விரட்டலும் இன்றி எந்த உயரத்தையும் நாங்கள் தொட்டிருக்க முடியாது.

அக்கா சிங்கப்பூரில், தம்பிகள் அமெரிக்காவில், நான் கனடாவில்.

வலி மட்டும் ஊக்கம் தராவிட்டால், உசுப்பேற்றாவிட்டால், உரமேற்றாவிட்டால், நாங்களும், மூத்ததாரப் பிள்ளைகளைப் போல எல்லாவற்றையும் விற்றுத் தின்றுவிட்டு அல்பாயிசில் செத்துப்போயிருப்போம்..

வலி இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை.

வலியே தாயும் தகப்பனும் ஆசானும் இறைவனும்.

O

வலி

உன்னை

வளர்த்தெடுக்கும்

தாய்

உன்னை

உனக்கே உரித்துக்காட்டும்

அம்மணம்

O

தேடாத விழிகளில்

திசைகளெல்லாம்

ஊமைகளாய்

மூடிக்கிடக்கும்

வலியே

தேடலின் வல்லமை

O

உன்

உண்மை முகவரியை

எழுதும் முள்

இருட்டை உடைத்து

வெளிச்ச வழி குடையும்

சிற்றுளிகளின் பேரியக்கச்

சக்தி

O

மனிதா

நீ எப்போதும்

எதையும் வென்றதே

இல்லை

உன் தோல்விகள்தாம்

ஒன்றுகூடி

வலிகள் பெருக்கி

வெற்றியிடம் உன்னை

அடித்து இழுத்துக்

கொண்டுபோய்ச் சேர்க்கின்றன





அன்புடன் புகாரி

No comments: