R. N சாமி
கடை, திருக்களாச்சேரி.
சில நாட்களாய் எடுத்துக்கட்டி சாத்தனூரில் நண்பர் ஒருவரது வீட்டில்
சில பராமரிப்புப் பணிகள்.
மதிய உணவு தேடினால், எங்கெங்கு
நோக்கினும் பிரியாணி அல்லது சிக்கன் புலாவ்
சோறு தான் கிடைக்கிறது.
தினசரி
அதையே தின்ன
முடியுமா? அருகிலுள்ள சங்கரன் பந்தலிலும் சொல்லிக்
கொள்ளும்படி ஒன்றும் உணவகம் இல்லை.
பொறையாருக்கு 5 கி. மீ செல்ல
வேண்டும்.
அப்போது
தான் திருக்களாச்சேரி சாமி கடைக்கு போய்
பாருங்கள் என கொத்தனார் சொன்னார்.
சரியென அங்கு போனால், மெயின் ரோட்டிலேயே மாரியம்மன் கோயில் அருகில் இருக்கிறது கடை. உட்கார்ந்து சாப்பிட இரண்டு பெஞ்சுகள் இருந்தாலும், அந்த பெஞ்சுகள் முழுவதும் பார்சல் செய்ய வேண்டியவை தான் இருக்கின்றன. எனவே டேக் அவே தான்!
பொதுவாக
எங்கள் பகுதிகளில் இந்த மீன் சாப்பாட்டுக்
கடைகள் அதிகம் உண்டு. அங்கே
சாதம், பெரும்பாலும் சிறிய மீன்கள் கரைந்த
ஒரு குழம்பு, மஞ்சள் வாசம் வீசும்
ஒரு ரசத் தண்ணி, மோர்
தண்ணி, கொஞ்சமே
கொஞ்சம் கோஸ்/சௌசௌ கறி,
உருளை கறி இவ்வளவு தான்
இருக்கும். வறுத்த மீன், இறால்,
முட்டை வகைகள் எக்ஸ்ட்ரா!
மீன் துண்டுகள் பிளேடு சைசில் இருக்கும்.
இறால் மசாலாக்கள் கபாலம் வரை எரியும்.
ஆனால் இந்த சாமி கடையில்
சாதம், ஒரு காய், ஊறுகாய்,
மீன் குழம்பு, ரசம், மோர், ஒரு
துண்டு வறுத்த மீன் ஆகியவை
பார்சல் 70 ரூபாய்க்கு தருகிறார்கள்.
விசேஷம்
என்னவென்றால், குழம்பு மிளகாய் சாந்து
வாசம் இல்லாமல், ரசம் மஞ்சள் தூள்
வாசனை இல்லாமல், மோரும் உண்மையிலேயே மோர்
வாசமடிக்கும் மோராகவும் கொடுக்கிறார்கள்!
அதோடு வறுத்த மீன் சாதாரண
மீன் என்றாலும், ப்ளேடு போல துண்டு
போடாமல், ஒரு வால் துண்டு,
அல்லது நடுத் துண்டு தருகிறார்கள்.
கொஞ்சமே
தந்தாலும் கிடாரங்காய் ஊறுகாய் உரைப்பும் , புளிப்பும்
சரியான விகிதத்தில் பிரமாதமாக உள்ளது.
குழம்பு,
ரசம் மோர் எல்லாமே சாப்பிடும்
வகையில் உள்ளது. சைவம் வேண்டுமென்றால்,
குழம்பிற்கு பதில் சாம்பாரும், மீனுக்கு
பதில் மற்றொரு காயும் தருகிறார்கள்.
முக்கியமாக
சாதமும், மற்ற குழம்பு கறி
வகைகளும் வயிற்றுக்கு ஒன்றும் செய்யவில்லை!
திருக்களாச்சேரி பொறையார் மங்கைநல்லூர் சாலையில் பொறையாரிலிருந்து 3 கி. மீ தூரத்தில் உள்ளது.
No comments:
Post a Comment