Tuesday, March 9, 2021

உற்பத்திக்கான சுற்றுச்சூழலை ஆரோக்கியப் படுத்தி பயனருக்குப் புத்துணர்வூட்டும் காரியத்தைச் செய்ய வேண்டும்.

 தொழிலதிபர் நிஷா மன்சூர்

லாக்டவுனுக்குப் பிறகான இந்தியாவில் சட்டென்று சுதாரித்து எழுந்த மாநிலம்,தமிழகம்தான். ஆனால் வணிகம் என்பது உற்பத்தி, சந்தைப்படுத்தல், விநியோகம்,சில்லரை வணிகம் ஆகிய படிநிலைகளில் வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது.

உதாரணமாக ஜவுளித்துறை உற்பத்தியை எடுத்துக் கொண்டால் சின்த்தடிக்,காட்டன்,பேன்ஸி  சேலை ரகங்கள் சூரத்,மும்பை நகரங்களிலும் சர்ட்டிங்,சூட்டிங் வகைகள் பெரும்பாலும் மும்பை மற்றும் குஜராத்தின் ஜாம்நகர்,அஹமதாபாத், ராஜஸ்தானின் பில்வாரா ஆகிய நகரங்களிலும் குழந்தைகளுக்கான ரெடிமேட் உற்பத்தி கொல்கத்தா,மும்பை,லூதியானா,இந்தூர்,ஜபல்பூர் ஆகிய வடமாநிலங்களின் நகரங்களிலுமாகப் பரந்து விரிந்துள்ளது.

அனைவருக்குமான உள்ளாடை ரகங்களின் மாபெரும் உற்பத்தி நகரம் நமது திருப்பூர். வேட்டிகள்,துண்டு,சட்டைகள்,லுங்கிகள் ஆகிய ஆண்களின் பாரம்பரிய உடை ரகங்கள் அனைத்தும் ஈரோடு திருப்பூர் சேலம் சுற்றுவட்டார மாவட்டங்களில் உற்பத்தி ஆகின்றன. அனைத்துக்குமான மூலப்பொருட்களின் விலை, மிகு அபரிமிதமாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது. செயற்கையான தட்டுப்பாடும் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உற்பத்தி திறன் வலிமையாக இருந்தாலும்  உற்பத்தியாகும் ஆடை வகைகளுக்கான  மூலப்பொருட்கள் வட இந்திய பகுதிகளையும் சார்ந்திருப்பதால் அவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை vs உற்பத்தி  என்கிற சமன்பாட்டில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதால் சந்தை வறட்சியாக இருக்கிறது. மக்களின் தேவையும் ரசனையும் பூர்த்தியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வட மாநிலங்கள் இன்னும் சுதாரிக்காத நிலையில் தமிழகத்தின் எழுச்சியை தன் பசிக்குப் போதுமான இரை கிடைக்காத யானையின் நிலைக்கு ஒப்பிடலாம். கண்டதையும் கிடைத்ததையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளும் அது. அதேபோல  தமிழக சில்லரை வணிகச் சந்தையை எல்லா குப்பைகூளங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் End user எனப்படும் இறுதிப் பயனர் எப்போதும் தான் செலவழிக்கும் காசுக்கு உரிய பொருளை வாங்குவதில் மிகக் கறாராக இருப்பார். அதுவும் தமிழக வாடிக்கையாளரை எதைக்காட்டியும் மயக்க இயலாது. அவரது தேவை, ரசனை, ஈகோ,ப்ராண்ட் சாடிஸ்பேக்ஷன் ஆகிய இவற்றில் எதுவொன்று குறைந்தாலும் அவர் பிடிவாதமாக நிராகரித்து விடுவார். இதனால் சந்தையில் விசாரணைகள் அதிகமாகவும் தேர்வு மிகக்குறைவாகவும் உள்ளது. இதேநிலைதான் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையானது சில்லரை வணிகர்களையும் விநியோகஸ்தர்களையும் உற்பத்தி மற்றும் மார்கெட்டிங் துறையினரையும் இன்னோவேடிவ் சிந்தனை அறவே இல்லாத ஒருவிதமான சலிப்பு மனோநிலையையும் "இதுதான் இருக்கு,வேணுமா வேணாமா" என முகம் சுளித்துப் பிடிவாதமாக முறுக்கிக் கொள்ளும் போக்கையும் உருவாக்கியுள்ளது. கிட்டத்தட்ட வணிகச் சங்கிலியின் ஒவ்வொரு பிணைப்பிலும் இதேநிலை கூடுதலாகவோ குறைவாகவோ பீடித்துள்ளதைக் காணமுடிகிறது.

இதேநிலை நீடித்தால் வணிகச் சுற்றுச்சூழலின்  ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படும். எதிர்காலத்தைக் குறித்த எவ்வித கனவுகளும் திட்டங்களும் இல்லாத இளம் தலைமுறையினரின் டோண்ட்கேர் மனோபாவமும்  இதனால் அதிகரிக்கும். குறிவைத்து இலக்குகளை அடையும் வணிகத் திறனாளர்களின் போக்கிலும் பெரும் மாற்றத்தையும்  உண்டாக்கும். ஒரு தேசம் என்பது ஓருடலின் உறுப்புகளைப் போன்றவைதான்.விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்" என்றான் பாரதி. தமிழகம் சுதாரிப்பு மிகுந்த மூளையாக அதிவேகமாகச் சிந்தித்தாலும் இதர உறுப்புகளான வட மாநிலங்கள் கை கால்களைப்போல வேகமாக ஒத்துழைக்காததால் தேசம் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக தமிழக வணிகச்சூழல் பெரும் சுவாசக்கோளாற்றில் திணறிக் கொண்டிருக்கிறது. இதில் பெரும் கார்ப்பரேட் சூதின் பங்கும் கணிசமாக உள்ளது.

தமிழக அரசு இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டைச் சரிசெய்து உற்பத்திக்கான சுற்றுச்சூழலை ஆரோக்கியப் படுத்தி சந்தையின் பசியைத் தீர்த்துவைத்து end user எனும் பயனருக்குப் புத்துணர்வூட்டும் காரியத்தைச் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் யானைக்கு மதம் பிடித்துவிடும். கையில் செலவழிக்கப் பணம் வைத்திருந்தும் தேவை பூர்த்தியாகாத இறுதிப் பயனருக்கு மதம் பிடித்தால் அது நிச்சயம் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தும். அந்த சேதாரமானது ஒரு தலைமுறையினரின் ஆரோக்கியத்தையும் அறவுணர்வையும் சிதைக்கக்கூடிய அபாயம் கொண்டது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.



No comments: